ஆலங்குடியில் 2 பிரிவினர் மோதல் இருவருக்கு அரிவாள் வெட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆலங்குடியில் 2 பிரிவினர் மோதல் இருவருக்கு அரிவாள் வெட்டு

Added : ஜூலை 16, 2019 | கருத்துகள் (1)
Share
 ஆலங்குடியில் 2 பிரிவினர் மோதல் இருவருக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை : ஆலங்குடியில், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில், இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், பிளக்ஸ் பேனர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர், முருகானந்தம், 37.இந்து முன்னணி நகர தலைவரான இவருக்கும், முஸ்தபா, 20, என்பவருக்கும், ஒரு வாரத்துக்கு முன், ஆலங்குடியில், பிளக்ஸ் வைப்பது தொடர்பாக, தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர், தாக்கிக் கொண்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, முஸ்தபா, அவரது சகோதரர் ரகுமான், 23, நண்பர்கள் முகமதுகனி, 19, முகமது நியாஸ், 21, அப்பாஸ், 20, கணேசன், 22, மணிகண்டன், 22, ஆகியோர், பிளக்ஸ் பேனர் நிறுவனத்துக்கு சென்று, அங்கிருந்த முருகானந்தத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர்.தடுக்க முயன்ற, அவரது தந்தை கணேசனையும், அரிவாளால் வெட்டி, தப்பி ஓடினர்.

படுகாயம் அடைந்த இருவரும், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த முருகானந்தம் உறவினர்கள் சிலர், முஸ்தபா தரப்பினரின் கடைகளை அடித்து நொறுக்கினர். திருச்சி, டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன், எஸ்.பி., செல்வராஜ் ஆகியோர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.மோதல் தொடர்பாக, இரு தரப்பினர் மீதும், ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, முகமது கனி, முகமது நியாஸ் ஆகியோரை, கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, தனியார் பஸ்சில் புதுக்கோட்டை சென்ற முஸ்தபாவை, அதே பஸ்சிலிருந்த சிலர், திருவரங்குளம் வனப்பகுதியில் இறக்கி, பலமாக தாக்கி, தப்பிச் சென்று விட்டனர்.படுகாயமடைந்த முஸ்தபா, புதுகை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.இரு தரப்பினரும், மாறி மாறி மோதிக் கொள்வதால், ஆலங்குடியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு, பதற்றம் நிலவுகிறது. நுாற்றுக்கனக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முருகானந்தம், அவரது தந்தையை சந்தித்து நலம் விசாரிக்க, இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள், திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று காரில் கிளம்பினர். அவர்களை போலீசார், துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் தடுத்து, கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X