வாழ விடுவோம்: இன்று(ஜூலை 16) உலக பாம்புகள் தினம்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 16, 2019
Share
Advertisement
வாழ விடுவோம்: இன்று(ஜூலை 16) உலக பாம்புகள் தினம்

உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. இவைகளில் 250 இனங்கள் மட்டுமே விஷம் உள்ளவை. இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே விஷம் உடையவை.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. உட்புறக் காதுகள் உண்டு. இதன்மூலம் சுற்றியுள்ள அதிர்வுகளை உணர முடியும். பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாததால் கால்களை இழந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மலைப்பாம்புகளின்ஆசனவாய் அருகில் இருக்கும் இரண்டு நகங்களை வைத்து பாம்புகளுக்கு கால்கள் இருந்ததை உறுதி செய்ய முடிகிறது. பாம்புகள் நாக்கை வெளியில் நீட்டி சுற்றுப்
புறத்தை உணர்கின்றன. பார்படாஸ் திரட் என்ற பாம்பு உலகிலேயே மிகச்சிறியது. 10 செ.மீ. அளவில்தான் இருக்கும். ரெட்டிகுலேட்டடு பைத்தான் என அறியப்படும் ராஜ மலைப்பாம்பு உலகிலேயே மிக நீளாமானது. 30 அடி நீளம் வரை வளரும். இம்மலைப்பாம்பு இந்தியாவிலும்உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள பச்சை அனகோண்டாஉலகிலேயே மிகப்பெரிய பாம்பு. 100 கிலோ வரை எடை இருக்கும். கூடுகட்டி முட்டையிட்டு அடை காப்பது ராஜநாகம் மட்டுமே. இவை மூங்கில், ஈத்தல் புற்களைக் கொண்டு கூடுகள் அமைக்கும். இனப்பெருக்கக் காலத்தில் ஆக்ரோஷமாக காணப்படும். இதன் உணவு பாம்புகள் மட்டுமே. சாரைப்பாம்பை விரும்பி உண்ணும்.
ராஜநாகம் நம் நாட்டின் தேசிய ஊர்வன விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் வளர்ச்சி அடையும் காலங்களில் தனது தோலை உறித்துக் கொள்ளும். இவற்றை 'பாம்பு சட்டை' என அழைப்பர்.


உழவன் பாம்பு


சாரைப்பாம்பு, எலிகளை உணவாக கொள்கிறது. ஒரு எலி வருடத்திற்கு 10 கிலோ தானியங்களை தின்னும். ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 1000 எலிகள் வரை வேட்டையாடும். ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 10 டன் தானியங்களை நமக்கு காப்பாற்றி தருகிறது. பாம்புகளால் மட்டுமே எலிகளின் வளைக்குள் புகுந்து வேட்டையாட முடியும். 'உயிரியல் பொறி'யாக விவசாயிகளுக்கு நன்மைகளை செய்கின்றன. மண்ணுளிப் பாம்பை 'உழவன் பாம்பு' என அழைக்கலாம். இவை மண்ணுக்குள் புகுந்து செல்லும் துளைகளில் காற்று செல்கிறது. இதனால் மண் இலகுவாக மாறி, தாவரங்களின் வேர் எளிதாக செல்ல உதவும்.பச்சைப்பாம்பு, பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்துகின்றன. பாம்புகள் பிற விலங்குகளுக்கு உணவாக உள்ளன. பாம்பு தின்னி கழுகிற்கு பாம்பு முதன்மை உணவு. நீரோடைகளில் காணப்படும் தண்ணீர் பாம்பு, நாரை போன்ற பறவைகளுக்கு உணவாகிறது. சூழல் அமைவில் பாம்புகளின் பங்கு முக்கியமானது.


பாம்பு - மனித மோதல்


இந்தியாவில் பாம்பு- மனித மோதல்கள் அதிகம். வருடத்திற்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 50 ஆயிரம் பேர் பலி ஆகின்றனர். இந்தியாவில் உள்ள 52 விஷப்பாம்புகளில், 4 இனங்கள் மட்டுமே மனித குடியிருப்புகளைச் சுற்றி வாழ்கின்றன. அவை: நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன். பெரும்பான்மையான உயிர்ப்பலிகளுக்கு இந்த நான்கு பாம்புகள் மட்டுமே காரணம். நல்லபாம்பு, கட்டுவிரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்ணாடி, சுருட்டை விரியன் விஷம் ரத்த மண்டலத்தை பாதிக்கும்.


எச்சரிக்கும் பாம்பு


வீடுகளில் எலிகள் இருக்கும் பட்சத்தில் நல்ல பாம்பு வரும். நல்ல பாம்பு மனிதர்களை கடிப்பதற்கு முன் படம் எடுத்து எச்சரிக்கும். அடிப்பதற்கு முற்படும் போதுதான் கடிக்கும். கடிப்பதற்கு முன் படம் காட்டி எச்சரிக்கை செய்வதால் 'நல்ல பாம்பு' என பெயர் வைத்துள்ளனர் நமது முன்னோர். கட்டுவிரியன் இரவில் வெளியே வரக்கூடியது. விவசாயிகள் களைப்பால் வயல் வரப்பு, மரத்தடியில் உறங்குவது வழக்கம். அப்போது கட்டுவிரியன் கடிக்க நேரலாம். இப்பாம்பு கடியை பெரும்பாலும் உணர முடியாது. வீட்டிற்கு வெளியே, வயல்வெளியில் உறங்க நேர்ந்தால் கட்டில், கொசுவலை பயன்படுத்துவது நல்லது.கண்ணாடி விரியன் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியே வரும். நாம் நடக்கக்கூடிய பாதைகளை செடி, குப்பை இல்லாமல் வைக்க வேண்டும். இரவில் டார்ச் லைட் எடுத்துச் செல்வது நல்லது.சுருட்டை விரியன் பாம்பு தரிசான பகுதிகள், குளங்களில் காணப் படும். மிகச்சிறியதாக இருந்தாலும் தொட்டவுடன் மின்னல் வேகத்தில் கடித்து விடும்.


பாம்பு கடித்தால்

பாம்பு கடித்தால் பதட்டப்படாமல் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். கடித்த இடத்தில் கயிற்றைக் கொண்டு கட்டக்கூடாது. அவ்வாறு கட்டுவதால் அந்த உறுப்பை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பிளேடு, கத்தியால் வெட்டி இரத்தத்தை எடுப்பதும், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் தவறான வழிமுறை.கடித்த இடத்தை ஆட்டாமல், அசைக்காமல் வைத்துக் கொள்ள வேண்டும். பதட்டப்பட்டால் ரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வேகமாக பரவும். விஷப்பாம்பு கடித்தால் டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப 'ஆன்டி ஸ்நேக் வெனம்' (விஷ முறிவு மருந்து) கொடுக்கப்படும். நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்புகளில் எது கடித்தாலும் மருத்துவமனைகளில் ஒரே விஷ முறிவு மருந்துதான் கொடுக்கப்படுகிறது. இதை 'பாலிவெனம்' என அழைக்கின்றனர். எனவே கடித்த பாம்பை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எந்த மருத்துவமனையில் 'ஆன்டி வெனம்' மருந்து இருக்கிறது என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த மருந்து கட்டாயம் இருக்கும். பாம்புகளை கண்டவுடன் அடிப்பதற்கு முற்படுகிறார்கள். அதை தவிர்க்க வேண்டும். வனத்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.


கட்டுக்கதைகள்


பாம்புகள் பால் குடிக்கும் என்பது தவறு. பாலுாட்டிகள் மட்டுமே பால் குடிக்கும். அவற்றிக்கு மட்டுமே பால் செரிமானம் ஆகும். மகுடி இசைக்கு பாம்புகள் ஆடும் என்பது தவறு. இசைப்பவரின் அசைவுக்கு ஏற்றவாறுதான் பாம்பு ஆடும். பாம்புகள் பழி வாங்கும் என்பதும் தவறு. அவற்றிக்கு நினைவாற்றல் கிடையாது. பச்சைப் பாம்பை 'கண்கொத்தி பாம்பு' என அழைக்கின்றனர். மனிதரின் கண்ணைக் கொத்தும் என்பதும் தவறான தகவல். மண்ணுளிப் பாம்பை வீட்டில் வளர்த்தால் செல்வம் பொங்கும் என்பதும் மூடநம்பிக்கை.மனிதர்களுக்கு வாழ எந்த அளவு உரிமை உள்ளதோ அதைவிட அதிக உரிமை பாம்புகளுக்கும் உள்ளது. நாம் நலமாய் வாழ பாம்புகளை வாழ விடுவோம்.

-மு. மதிவாணன்
அகத்தியமலை மக்கள்சார்
இயற்கைவள காப்பு மையம்
மணிமுத்தாறு. 94880 63750

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X