மாமூலுக்காக ஒரு சங்கம்... ஆளுங்கட்சி அங்கம்! ஆளுக்கொரு ஜீப்பு; அதிகாரிக சூப்பரப்பு| Dinamalar

மாமூலுக்காக ஒரு சங்கம்... ஆளுங்கட்சி அங்கம்! ஆளுக்கொரு 'ஜீப்பு'; அதிகாரிக சூப்பரப்பு

Added : ஜூலை 16, 2019
Share
மருதமலை செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் ஆஜர். டூவீலரை 'பார்க்' செய்ய சித்ரா சென்றிருந்த நேரத்தில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை மித்ரா நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.''என்னப்பா, பஸ் வருமான்னு பார்க்காம, எதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கே,'' என்றவாறு சித்ரா வந்தாள்.''அக்கா, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, எப்ப பார்த்தாலும், 'கல்லா'
மாமூலுக்காக ஒரு சங்கம்... ஆளுங்கட்சி அங்கம்! ஆளுக்கொரு 'ஜீப்பு'; அதிகாரிக சூப்பரப்பு

மருதமலை செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் ஆஜர். டூவீலரை 'பார்க்' செய்ய சித்ரா சென்றிருந்த நேரத்தில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை மித்ரா நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

''என்னப்பா, பஸ் வருமான்னு பார்க்காம, எதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கே,'' என்றவாறு சித்ரா வந்தாள்.

''அக்கா, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, எப்ப பார்த்தாலும், 'கல்லா' கட்டுறதுலதான் குறியா இருப்பாங்க போலிருக்கு,'' என, மித்ரா நொந்து கொண்டாள்.

''ஏம்ப்பா, என்னாச்சு,'' என, ஆசுவாசப்படுத்தினாள் சித்ரா.

''இந்த பஸ் ஸ்டாண்டுல மூணு 'பிளாட்பார்ம்' இருக்கு; எதிலயுமே குடிநீர் வசதி செஞ்சு கொடுக்காம இருக்காங்க. 'துாய்மை பாரதம்' திட்டத்துல, 'ரேங்க்' வாங்கப் போறதாவும், 'நைட்'டுல குப்பை அள்ளுறதாவும் சொல்றாங்க. நடைபாதையை பாருங்க... எவ்ளோ குப்பை கிடக்கு. ஒரு இடத்திலாவது குப்பை கூடை வச்சிருக்காங்களான்னு பாருங்க...'' என, பட்டியலிட்டுக் கொண்டே சென்றாள் மித்ரா.

''கூல்... கூல்... ஏன் டென்ஷனாகுறே...''

''பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கொடுக்குறதுக்கு, ஒரு ரூம் கட்டிக்கொடுக்கணும்னு, 'கவர்மென்ட்' சொல்லியிருக்கு. இதுவரைக்கும் கட்டிக்கொடுக்கலை. பயணிகள் உட்கார போதுமான இடமில்லை. 'இ-டாய்லெட்'ன்றாங்க...'' என்றாள் மித்ரா.

அத்தருணத்தில், மருதமலை செல்லும் பஸ் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. கூட்டத்தின் இடையே சிக்கி, இருவரும் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர். அடுத்த பிளாட்பாரத்தில் இருந்த விளம்பர பலகையை பார்த்ததும் மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல பணமா இல்லை. எந்த பஸ், எந்தெந்த வழியா போகுதுங்கிற விவரத்தை கூட, 'ஸ்பான்ஸர்' வாங்கி, போர்டு மாட்டியிருக்காங்க. கரன்சி கொடுத்தா, கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள என்ன வேணும்னாலும் செய்யலாம் போலிருக்கு,'' என, அங்கலாய்த்தாள்.

''கொஞ்சம் பொறுமையா இரு மித்து, நான் சொல்ற விஷயத்தை கேட்டீன்னா, அவ்ளோதான்...'' என, பொடி வைத்தாள் சித்ரா.

''ஏங்கா, அப்படி என்ன நடந்திருக்கு,'' என, ஏதும் தெரியாததுபோல் கேட்டாள் மித்ரா.

''கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு புதுசா அஞ்சு ஜீப் வாங்கியிருக்காங்க. கமிஷனர் வீட்டுல ஒன்னு நிக்குது; டெபுடி கமிஷனர் வீட்டுல ஒன்னு நிக்குது; சிட்டி இன்ஜினியரும், இ.இ., ஒருத்தரும் புது ஜீப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க...'' என்றவாறு, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள் சித்ரா.

''அக்கா, இன்னொரு வண்டி, கணக்குல குறையுதே,''

''கூட்டி, கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வரும்...''

''இல்லக்கா, நாலு வண்டிக்குதான் சொல்லியிருக்கீங்க,''

''ஆளுங்கட்சிக்கு ஒதுக்க வேண்டாமா... கோயமுத்துார்ல இருந்துட்டு இது தெரியாம இருக்கியா...''

''ஓ... அப்படியா... சங்கதி, அவருக்கு ஒன்னு ஒதுக்கிட்டு; மீதியை அதிகாரிங்க அனுபவிக்கிறாங்கன்னு சொல்லுங்க,''

''புது ஜீப் வாங்கியிருக்கிற அதிகாரிங்க எல்லாத்துக்கும் ஏற்கனவே வாகனம் இருக்கு. இருந்தாலும், மறுபடியும் ஒதுக்கியிருக்காங்க. கார்ப்பரேஷன் கஜானா காலியா இருக்குன்னு சொல்லி, கான்ட்ராக்டர்களுக்கு நிலுவை வச்சிருக்காங்க. சொத்து வரியை உயர்த்தியிருக்காங்க. இவுங்களோ, லட்சக்கணக்குல செலவு செஞ்சு வண்டி வாங்கியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.

''எல்லாம்... 'ஸ்மார்ட் சிட்டி' கரன்சின்னு நெனைக்கிறேன். 'ரூட்'டை தெரிஞ்சிக்கிட்டு, கஜானாவை கரைக்க ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கு. ஜே.என்.என்.யு.ஆர்.எம்., ஸ்கீம்ல காலி செஞ்ச மாதிரி செய்யாம இருந்தா சரி...''

ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சித்ரா, மதுக்கடைக்கு முன் ஏகப்பட்ட கூட்டம் நின்றிருந்ததை பார்த்து, ''மதுக்கடைகளை இழுத்து மூடுனாதான், இவுங்களை திருத்த முடியும் போலிருக்கு,'' என்றாள்.

''அதெப்படிக்கா, மாசம் தவறாம மாமூல் கொட்டுது; அதை மூடிடுவாங்களா...?''

''மக்களோட 'ஹெல்த்' முக்கியமா; மாமூல் முக்கியமா...''

''விவரம் புரியாம கேட்காதீங்க. அதிகாரிங்க மட்டும் மாமூல் வாங்கறதில்லை. ஆளுங்கட்சிக்காரங்க, போலீஸ்காரங்கன்னு எல்லாத்துக்கும் பங்கு போகுது. நம்ம மாவட்டத்துல, ஆளுங்கட்சி தொழிற்சங்க பொறுப்புல இருக்கற ரெண்டு பேரு, ஒவ்வொரு கடைக்கும், 'மாமூல் ரேட் பிக்ஸ்' பண்ணிருக்காங்க. அந்த அமவுண்ட் தராம, எந்த கடை சூப்பர்வைசரும், சேல்ஸ்மேனும் தப்பிக்க முடியாது.

''கடையை பொறுத்து, 10 ஆயிரம், 20 ஆயிரம்னு வசூல் இருக்கும். வசூலிக்கிற தொகையில ஒரு பகுதி, அந்தந்த பகுதி கட்சிக்காரங்களுக்கும், போலீஸ், அரசு அதிகாரிங்களுக்கும் போகுது. புரோக்கர் வேலை பார்க்குறதன் மூலமா, பொறுப்புல இருக்கறவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் பல லட்சம் தேறுதாம். முக்கிய நிர்வாகி ஒருத்தரு, ஏகப்பட்ட இடத்துல 'பார்' நடத்துறாராம்,''

''மழை பெய்யுதோ இல்லையோ, கரன்சி மழை பொழியுதுன்னு சொல்லு...''

''இப்ப, மேட்டர் அது இல்ல; ஆளுங்கட்சியில புறநகருக்குன்னு புதுசா ஒரு சங்கம் முளைச்சிருக்கு. 'எங்க ஏரியா மாமூல் எங்களுக்கே'ன்னு, கோஷம் எழுப்பியிருக்காங்களாம். ஆளுங்கட்சியில இருக்கற முக்கிய பிரமுகர்களும் இவுங்களுக்கு, 'சப்போர்ட்' பண்ணி பேசுறாங்களாம்.

வசூல் பிரச்னையால, ஆளுங்கட்சிக்குள்ள மோதல் வெடிக்குறதுக்கு வாய்ப்பு இருக்குறதாவும் பேசிக்கறாங்க. வெட்டுக்குத்து அளவுக்கு போகலாம்னு கிசுகிசுக்குறாங்க,'' என்றபோது, மித்ரா மொபைல் போன் சிணுங்கியது.

''என்ன மாறன், ராஜ் நல்லா இருக்காரா. வசதி வந்ததும் கண்டுக்கவே மாட்டேங்கிறதா, செந்தில் புலம்புறாரே...'' என்ற மித்ரா, பஸ்சில் செல்வதால், பிறகு அழைப்பதாக கூறி, இணைப்பை துண்டித்தாள்.

அப்போது, பஸ்சை, போலீஸ் ஜீப் ஒன்று 'ஓவர்டேக்' எடுத்துச் சென்றது.

அதைப்பார்த்த சித்ரா, ''வர வர போலீஸ்காரங்க நெலமை ரொம்பவே மோசமா போயிக்கிட்டு இருக்கு...'' என்றாள்.

''என்னாச்சுக்கா... அவுங்களுக்கு என்ன,'' என, நோண்டினாள் மித்ரா.

''அதிலப்பா, சாயிபாபா காலனி ஏரியாவுல ரெண்டு பேரு, 'ஹெல்மெட்' இல்லாம பைக்குல போனாங்க. அவுங்களை போலீஸ்காரங்க பிடிச்சப்போ, ரோட்டுல உருண்டு புரண்டாங்க. அவுங்களை எச்சரிச்சு அனுப்புனாங்க. ரெண்டு நாளைக்கு அப்புறம், அந்த சம்பவம், வீடியோவா, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள்ல வைரலா பரவ ஆரம்பிச்சிருச்சு. வேற வழியில்லாம, அந்த ரெண்டு பேர் மேலயும் வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க.

''ஆனா, அவுங்க சொன்ன தகவல் எல்லாமே தப்பா இருந்துச்சாம். அதுனால, மொபைல் போன்ல தொடர்புகொண்டு, ஸ்டேஷன் பக்கம் வந்துட்டு போங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு, 'நாங்க, செம மப்புல இருக்கோம்; பிறகு வர்றோம்'னு சொல்லிட்டாங்களாம். அந்த ரெண்டு பேரையும் தேடிக்கிட்டு இருக்காங்க...''

அப்போது, பாரதியார் பல்கலையை பஸ் கடந்தது. அதை பார்த்ததும், ''அக்கா, இந்த யுனிவர்சிட்டியில, நாலு வருஷத்துக்கு முன்னால விடைத்தாள் முறைகேடு நடந்துச்சு தெரியுமா...'' என, கேட்டாள் மித்ரா.

''அது, பழங்கதையாச்சே... அதுல சம்பந்தப்பட்ட பலரும் 'ரிடையராகி'ட்டாங்களே...'' என, இழுத்தாள் சித்ரா.

''ஆமாக்கா, இதுவரைக்கும் அஞ்சு விசாரணை கமிட்டி அமைச்சும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை; ஆறாவதா ஒரு கமிட்டி அமைச்சிருக்கிறதா, ஒரு மாசத்துக்கு முன்னாடி சொன்னாங்க. இப்ப கேட்டா, அப்படியொரு கமிட்டியே அமைக்கலைன்னு சொல்றாங்க.

விசாரணை நடத்துறதுக்கே முட்டுக்கட்டை போடுறதுனால, பெரிய புள்ளிங்க பலரும் சம்பந்தப்பட்டு இருப்பாங்கன்னு, யுனிவர்சிட்டி வட்டாரத்துல பேசிக்கிறாங்க...'' என மித்ரா சொல்வதற்கும், மருதமலை அடிவாரம் வருவதற்கும் சரியாக இருந்தது.

பஸ்சில் இருந்து இறங்கி, ரோட்டுக்கு இருபுறமும் இருந்த கடைகளை கடந்து, இருவரும் படியேறத் துவங்கினர்.

''இந்த கோவில்ல, புதுசா ரெண்டு பேருக்கு 'பர்மனென்ட் ஆர்டர்' கொடுத்திருக்காங்களாம்...'' என்றாள் மித்ரா.

''அதுல என்ன பிரச்னை...''

''அவுங்கள்ட்ட, ஆறு மாசத்துக்கு முன்னாடியே, பல 'ல'கரம் பேரம் பேசியிருக்காங்க. கரன்சி கைமாறியதும், 'ஆர்டர்' கொடுக்கறதா இருந்துச்சு. விஷயம் 'லீக்'கானதும், கிடப்புல போட்டிருந்தாங்க. இப்ப, கை மாறிடுச்சாம்; ஆர்டரும் கொடுத்துட்டாங்க. வேலையிலும் ஜாயின் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

படிக்கட்டுகளில் ஏறி வந்த அசதியில், இருவரும் சிறிது நேரம் அமர்ந்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X