பொது செய்தி

தமிழ்நாடு

ஈஸ்வரியே! மகமாயி! மாரியம்மா! நாங்க எண்ணி வந்த வரமனைத்தும் தாருமம்மா!

Added : ஜூலை 16, 2019
Share
Advertisement
 ஈஸ்வரியே! மகமாயி! மாரியம்மா! நாங்க எண்ணி வந்த வரமனைத்தும் தாருமம்மா!


அம்மன் அருள் தரும்ஆடி மாதம் வந்தாலே ஊரெங்கும் அம்பிகை வழிபாடு களை கட்டும். தெய்வீகம் மிக்க ஆடி, அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமிதேவி ஆண்டாள் நாச்சியாராக அவதரித்ததும் ஆடிப்பூர நன்னாளில் தான். பார்வதியின் தவத்தை மெச்சிய சிவன், ஆடி மாதத்தை அம்பிகை மாதமாக கொண்டாட வரமளித்தார். சிவனுடைய சக்தியை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் விசேஷமானதாக இருக்கும். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி அம்மன் வழிபாட்டுக்குரிய சிறப்பான நாட்களாகும்.


பராசக்தி பாதம் பணிவோம்ஒரு ஆண்டை அயனம் என்னும் இரு பிரிவாக பிரிப்பர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் சொல்லப்படும். உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகும். தட்சிணாயன காலம் தேவர்களின் இரவுப் பொழுதாகும். பூலோகத்தில் ஓராண்டு காலம் என்பது வானுலக தேவர்களின் ஒரு நாளாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர தொடக்கமாக உள்ளது. பகல் முடிந்ததும், இருள் சூழும் வேளையில் மயக்கம் உண்டாகி விடும். அதிலிருந்து உலகை காக்கும்படி அன்னை பராசக்தியை வழிபாடு செய்வது அவசியம்.


ஆடி மாத பழமொழிகள்ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்.' என்பன ஆடி குறித்த பழமொழிகளாக மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன.


நோய் தீர்க்கும் மாவிளக்குஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்வாள். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்துாள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து, அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்குவர். மாரி, காளி, துர்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. இதனால் உடல்நலம் சிறக்கும்.


மணவாழ்வு தரும் 'மஞ்சப்பால்'மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிச்செவ்வாய், வெள்ளியன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபடுவர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் நாடு செழிக்க மழை பொழியும். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்தியபடி கோயிலை வலம் வருவர். அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்மனுக்கு, வாகனமான சிம்மத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் பொடி கலந்த தண்ணீருக்கு 'மஞ்சப்பால்' என்பது பெயர். கன்னியர்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்ய அம்மன் அருளால் திருமண யோகம் உண்டாகும்.


விருந்துக்கு அழைப்புஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியருக்கு ஆடிச்சீர் கொடுத்து புதுமாப்பிள்ளை, பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பர். அதன் பின் மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்னும் தேங்காய்ப்பால் கொடுத்து ஊருக்கு அனுப்புவர். தாய் வீட்டில் பெண் ஒரு மாதம் தங்குவாள். ஆடியில் கருத்தரித்தால் சித்திரையான கோடையில் குழந்தை பிறக்கும். இதனால் தாய், சேய் உடல் நலன் பாதிக்கலாம் என்பதால் இதை கடைபிடிக்கின்றனர். 'ஆடிப்பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்ற சொலவடை கிராமங்களில் உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X