கட்டடம் இடிந்து விழுந்து 12 பேர் பலி

Added : ஜூலை 16, 2019
Advertisement
கட்டடம் இடிந்து விழுந்து 12 பேர் பலி

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 100 ஆண்டுகள் பழமையான நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில், 12 பேர் பலியாகினர்; 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.தெற்கு மும்பையின், டோங்கிரி பகுதியில் உள்ள டான்டல் தெருவில், 100 ஆண்டுகள் பழமையான, 'கவுசர்பாக்' என்ற நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. தேசிய பேரிடர்இந்நிலையில், அந்தக் கட்டடம் நேற்று காலை, திடீரென இடிந்து விழுந்தது. இதில், 12 பேர், உடல் நசுங்கி பலியாகினர்;

12க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த, 40க்கும் அதிகமானோர், இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.'இந்த கட்டடம், மஹாராஷ்டிரா வீட்டுவசதி ஆணையத்திற்கு சொந்தமானது என்றும், எந்த நேரத்திலும் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக, புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், மஹாராஷ்டிரா வீட்டுவசதி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி, வினோத் கோசல்கர் கூறுகையில், ''இக்கட்டடம், வீட்டுவசதி ஆணையத்திற்கு சொந்தமானதில்லை,'' என, தெரிவித்தார்.

முதல்வர், தேவேந்திர பட்னவில் கூறுகையில், ''மும்பை மாநகராட்சியின் பழமையான கட்டடங்களின் பட்டியலில், இடிந்து விழுந்த கட்டடம் இடம் பெறவில்லை,'' என்றார்.இந்த கட்டடம் உள்ள டான்டல் தெரு, மிகவும் குறுகலாக இருப்பதால், ஜே.சி.பி., ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சியினர், விபத்து நடந்த பகுதிக்கு வந்து செல்வதால், நெரிசல் ஏற்பட்டு, மீட்பு நடவடிக்கை தாமதமாவதாக, மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், அப்பகுதி மக்களும் இணைந்து, மீட்பு பணிகளில் உதவி வருகின்றனர். தப்பிக்கும் அதிகாரிகள் இந்த விபத்து குறித்து, சமூக ஆர்வலர், ஷகீல் அகமது கூறியதாவது : ஒவ்வொரு பருவமழை காலத்திலும், மும்பையில் உள்ள பழமையான கட்டடங்களை அடையாளம் கண்டு, அதில் வசிப்பவர்களை, அப்புறப்படுத்த வேண்டும் என, உள்ளாட்சி துறைக்கு, மும்பை நீதிமன்றம், 2014ல் உத்தரவு பிறப்பித்தது. அதை சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தாலே, இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும்.

மும்பையில் உள்ள பழமையான கட்டடங்களை, மாநகராட்சி அல்லது வீட்டுவசதி ஆணையம் பட்டியலிட வேண்டும்.விபத்து நடந்த கட்டடம் எந்த பட்டியலிலும் இடம் பெறவில்லை என்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது. இப்போது, இரண்டு துறைகளும், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்தி வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.கடும் நடவடிக்கைமஹாராஷ்டிரா வீட்டு வசதி ஆணையத்தின் தலைவர், உதய் சாமந்த், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அந்த கட்டடத்தில் மராமத்து வேலைகளை செய்யும் பணி, ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டது.

ஆனால், 2012 முதல், 2019 வரை, எந்த பணியும் நடக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்த தவறுக்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X