எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு | Dinamalar

எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு

Updated : ஜூலை 17, 2019 | Added : ஜூலை 17, 2019 | கருத்துகள் (4)
Share
எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடில்லி: தங்களுடைய ராஜினாமாவை ஏற்கும்படி, சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, கர்நாடகாவில் ஆளும், ம.ஜ.த., - காங்., கூட்டணியைச் சேர்ந்த, 15 அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. சமீபத்தில், ம.ஜ.த., மற்றும் காங்.,கைச் சேர்ந்த, 16, எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தி அடைந்து, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தவிர, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இரண்டு சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள் விலக்கிக் கொண்டனர்.இதனால், ம.ஜ.த., - காங்., கூட்டணி அரசுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. 'ராஜினாமா செய்த, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, ம.ஜ.த., மற்றும் காங்., தலைவர்கள், சபாநாயகர், ரமேஷ் குமாருக்கு கடிதம் கொடுத்தனர்.இதற்கிடையே, 'எங்களுடைய ராஜினாமாவை ஏற்க வேண்டும் என, சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்; தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்' என, 10, எம்.எல்.ஏ.,க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


latest tamil news


அதைத் தொடர்ந்து, மேலும், ஐந்து, எம்.எல்.ஏ.க்களும் இந்த வழக்கில் இணைந்து கொண்டனர்.இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, 'ராஜினாமா கடிதங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யக் கோரும் கடிதங்கள் மீது, சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.கடந்த சில நாட்களாக, தினமும், ஒரு பரபரப்பான காட்சி அரங்கேறி, கர்நாடக அரசியலில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை, முதல்வர் குமாரசாமி கொண்டு வந்துள்ளார். சட்டசபையில் நாளை அது எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.இந்நிலையில், 15, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர், சபாநாயகர் என, அனைத்து தரப்பினரும், நான்கு மணி நேரத்துக்கு காரசாரமாக வாதாடினர்.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.* காரசார வாதம்கர்நாடகா, எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்துள்ள வழக்கில், நேற்று காரசாரமான வாதம் நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி வாதிட்டதாவது:எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆட்சியை காப்பாற்றும் வகையில், ராஜினாமாவை ஏற்காமல், சபாநாயகர் இழுத்தடிப்பு செய்கிறார். மேலும், தகுதி நீக்கம் செய்வதற்கு சதி நடக்கிறது.ஏற்கனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு தொடர வேண்டும். சட்டசபை கூடும்போது, கூட்டத் தொடரில் பங்கேற்பதில் இருந்து, 15 பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.முதல்வர் குமாரசாமி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ராஜிவ் தவான் வாதிட்டதாவது:எம்.எல்.ஏ.,க்களின் மனுவை விசாரிக்க வேண்டும் என, முதலில் உத்தரவிடப்பட்டது.

அதன்பிறகே, தற்போதுள்ள நிலை தொடர வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இரண்டு விதமான, இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என, சபாநாயகருக்கு, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் இணைந்துள்ளனர். அவர்களுடைய மனுக்களை ஏற்கக் கூடாது.இவ்வாறு, அவர் வாதிட்டார்.சபாநாயகர், ரமேஷ் குமார் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ஏ.எம். சிங்வி வாதிட்டதாவது:கடந்தாண்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தது, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தொடர்பாக நடந்த வழக்கின் விசாரணையின்போது, சபாநாயகருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

அதுபோலவே, இந்த விவகாரத்திலும், சபாநாயகருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ராஜினாமா கடிதங்களை ஏற்பது அல்லது தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது.முறையாக ராஜினாமா கடிதத்தை தாக்கல் செய்யாத நிலையில், அதன் மீது, சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை என்று எப்படி கூற முடியும்?இவ்வாறு, அவர் வாதிட்டார்.
என் அதிகார வரம்பு பற்றி உச்ச நீதிமன்றத்துக்கு சவால் விடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம், எனக்கும் இடையே தகராறு ஏற்படவில்லை. நீதிமன்றத்தை விட நான் பெரியவனல்ல. அனைத்து தரப்பின் வாதம் நிறைவடைந்துள்ளது. தீர்ப்பு வரும் வரை அது பற்றி பேச மாட்டேன். என் தந்தையின் குரல் வளை பெரிதாக இருந்ததால், நான் சற்று சத்தமாக பேசுகிறேன்.கே.ஆர்.ரமேஷ்குமார், சபாநாயகர்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X