பெங்களூரு : கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் மீது விவாதம் துவங்கி நடந்து வருகிறது. ஆளும் கட்சி, பா.ஜ., இடையே காரசார விவாதம் நடப்பதால் சட்டபையில் அமளி ஏற்பட்டுள்ளது.

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று (ஜூலை 18) நடக்கிறது. இதனை முன்னிட்டு சட்டசபையை சுற்றி 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 எம்எல்ஏ.,க்கள் 'எஸ்கேப்' :
நம்பிக்கை ஓட்டெடுப்பில் 208 எம்எல்ஏ.,க்கள் கலந்து கொண்டுள்ளனர். மும்பையில் தங்கி உள்ள ராஜினாமா கடிதம் அளித்துள்ள 15 அதிருப்தி எம்எல்ஏ.,க்களும் சட்டசபைக்கு வர உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்., கட்சியை சேர்ந்த ராமலிங்க ரெட்டி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கூறி இருந்தார். இதனால் குமாரசாமிக்கு ஆதரவான எம்எல்ஏ.,க்களில் மேலும் ஒருவர் கூடிய நிலையில், காங்., கட்சியை சேர்ந்த 2 பேர், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ., நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அவைக்கு வரவில்லை.

காரசார விவாதம் :
அவை துவங்கியதும், நம்பிக்கை ஓட்டெடுப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.,வின் எடியூரப்பா பேசுகையில், இன்றே விவாதம் நடத்தி நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் ரமேஷ் குமார், நம்பிக்கை ஓட்டெடுப்பை எப்போது நடத்துவது என எனக்கு தெரியும். மற்றவர்களின் அவசரத்திற்காக உடனடியாக நடத்த முடியாது என்றார்.
பின்னர் சபாநாயகர், கட்சிகள் தங்களின் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கலாம் என அனுமதி கொடுத்தார். மேலும் அவர், காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் நடவடிக்கை எடுப்பதால், நான் தலையிட மாட்டேன். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன். இந்த விவகாரத்தில் எம்எல்ஏக்கள் தெளிவு பெற வேண்டும். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை வந்து கையெழுத்து போடாவிட்டால், எந்த சலுகையும் பெற முடியாது என்றார்.
கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக்கூடாது என கர்நாடக சட்ட அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

குமாரசாமி புலம்பல் :
தொடர்ந்து பேசிய முதல்வர் குமாரசாமி, எனது அரசின் மீதான நம்பிக்கையை மட்டும் நிரூபிக்க நான் வரவில்லை. சபாநாயகர் மீதான கேள்விகளுக்கும் பதிலளிக்க வந்துள்ளேன். கர்நாடக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது. கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பம் முதலே சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க தயார். 11 மாதமாக ஆட்சியை நிலைதன்மையற்ற அரசு என்ற பிம்பத்தை ஏற்படுத்தினர். பா.ஜ., ஆட்சியில் நடந்த நில ஊழல்களில் பலர் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., துணையுடன் தான் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சுப்ரீம் கோர்ட் சென்றனர்.
சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டில் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர் என்றார்.
இதனால் பா.ஜ., மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏ.,க்கள் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. கர்நாடக சட்டசபையில் கடும் அமளி நிலவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசும் போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. இதனால், நம்பிக்கை ஓட்டெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE