சமூக நல விரும்பிகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர், அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து, தம் கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. ஞாயிறு
தோறும் வெளிவரும்.
'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்-' எனும், திருக்குறள் வாயிலாக, ௨,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே, சிறந்த டாக்டருக்கான இலக்கணத்தை,
திருவள்ளுவர் வகுத்துள்ளார். 'நோயின் தன்மையை ஆராய்ந்து, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அதைப் போக்கும் மருந்துகளைக் கொடுத்து, நோயாளிக்கு சிகிச்சை அளிப்பவர் தான், சிறந்த டாக்டர்' என்கிறார், திருவள்ளுவர். இயந்திரத்தனமான இந்த உலகில், திருவள்ளுவர் சொல்வது போல, நோய் நாடி, நோய் முதல் நாடி சிகிச்சை அளிக்க, இன்றைய டாக்டர்களுக்கு பொறுமை இல்லை. புனிதமான சேவையாக, ஒரு காலத்தில் கருதப்பட்ட மருத்துவம், துரதிர்ஷ்டவசமாக, பணம் கொழிக்கும் வர்த்தகமாக மாறி விட்டது; 'எத்திக்ஸ்' எனப்படும்,
மருத்துவ நெறிகளை, டாக்டர்கள் பின்பற்றுவதும், நாளுக்கு நாள் குறைந்து
வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, தங்கள் வாழ்க்கையை மருத்துவச் சேவைக்காகவும், மருத்துவக் கல்விக்காகவும் அர்ப்பணித்த, டாக்டர்கள் பலர் இருந்தனர். 'சரும நோய் மருத்துவர்களின் பிதாமகன்' என, போற்றப்படும், டாக்டர் தம்பையாவைப் பற்றி, இளைய தலைமுறை
டாக்டர்களுக்கு, தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.'என் கடன், பணி செய்து கிடப்பதே' எனும்
கொள்கையை, இறுதி வரை கடைப்பிடித்து, அரசுப்பணி காலத்தில், ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத சாதனையாளர் அவர்!
அது போல, மதுரை ராஜாஜி மருத்துவமனையில், ஆர்.சுப்பிரமணியன், வி.வெங்கட்ராமன், சி.ராமன் போன்ற ஜாம்பவான்கள், வகுப்பு நடத்துவதைக் கேள்விப்பட்டால், மாணவர்கள், தேனீக்களைப் போல பறந்து வந்து, அவர்களை மொய்த்து விடுவர். அத்தகைய மருத்துவ மேதைகளை, காண்பதே இன்று அரிதாகி விட்டது. சமீப காலமாக, டாக்டர்களின் அணுகுமுறை
மற்றும் சிகிச்சை முறைகளில், நிறைய குறைபாடுகளை காண முடிகிறது. மிகுந்த வலியோடு, மருத்துவமனைக்கு வரும் நோயாளி, தனக்கு வந்துள்ள பிரச்னை குறித்து, கூடுதல் விபரங்களைக் கேட்டால், 'நீ டாக்டரா; நான் டாக்டரா?' என, எரிந்து விழும் டாக்டர்கள் பலர் உள்ளனர்.
நுாற்றுக்கணக்கில் கட்டணம் கொடுத்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற வரும் நோயாளிக்கு,
அவரின் நோய் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது.
ஆனால், இதை ஏனோ, பெரும்பாலான டாக்டர்கள் உணர்வதில்லை. நோயாளியிடம், ஒரு நிமிடம் கூட பேசாத டாக்டர்கள் பலர் உள்ளனர்.
மதுரையிலுள்ள ஒரு டாக்டரின் மருத்துவச் சிகிச்சை பரிந்துரை, 'சீட்'டை தற்செயலாகப் பார்த்த போது, அதிர்ச்சியாக இருந்தது. கட்டடப் பணியாளரான அந்த நோயாளிக்கு, 'சிமென்ட்' ஒவ்வாமையால், கை, கால்களில் கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டிருந்தது. சாதாரண அந்த பிரச்னைக்கு, 'எய்ட்ஸ்' நோய் இருக்கிறதா என்பதற்கான, எச்.ஐ.வி., சோதனை உட்பட, 10 வித, ரத்த பரிசோதனைகள் செய்ய, அந்த டாக்டர் பரிந்துரை செய்திருந்தார். இது ஏன் என்றே புரியவில்லை. முதலில் சாதாரண மருந்து கொடுத்து பார்ப்பது; அதன் பிறகு, சற்று கூடுதல் மருந்து அளிப்பது; அதன் பிறகு, பரிசோதனைகள் செய்து பார்ப்பது என்ற நடைமுறை இல்லை.
எடுத்ததும், ௨,௦௦௦ - ௮,௦௦௦ ரூபாய்க்கு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்த, பெரிய சீட்டை எழுதிக் கொடுத்து விடுகின்றனர்.
இதன் பின்னணியில் இருக்கும், வர்த்தகத்தை நீங்கள் நோயாளியிடம் சொல்லாவிட்டாலும்,
மருத்துவ ஆய்வகங்கள், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் சொல்லி விடுகின்றனர்; உங்களின், 'குட்டு' அம்பலமாகி விடுகிறது! நோயாளி ஒருவருக்கு, திடீரென, தீராத கால் வலி. நள்ளிரவு, ௧௨:௦௦ மணிக்கு மேல், வலி தாங்க முடியாமல், அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
இரவு பணியில் இருந்த டாக்டர், தன் துாக்கத்திற்கு இடையூறு விளைவித்த, அந்த நோயாளியைக் கண்டதும், கோபத்தில், தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள், 'நான் கற்ற மருத்துவ நுணுக்கங்களை, என் நோயாளியின் நலனுக்கு பயன்படுத்த தவற மாட்டேன்' என, உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம்.
இதை, மருத்துவத் துறையில் 'ஹிப்போக்ரேட்' உறுதிமொழி என்பர்.
ஏற்கனவே, வேதனையால் துடித்துக் கொண்டிருந்த நோயாளியை, மேலும் நோகடித்த, அந்த டாக்டருக்கு, படித்த காலத்தில் எடுத்த உறுதிமொழி, மறந்து விட்டது போலும். இதுபோல, தன் தந்தைக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ ஏற்பட்டால், அந்த டாக்டர் என்ன
செய்திருப்பார் என்பது, அனைவரும் அறிந்தது தான்! டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் போது, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். தேவையற்ற பரிசோதனை
களையும், அதிகப்படியான மருந்துகளையும் பரிந்துரைப்பது; நோயாளிக்கு
புரியாத விஷயங்களைக் கூறி பயமுறுத்துவது; நோயாளியின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க
மறுப்பது போன்ற செயல்கள், மருத்துவ நெறிகளுக்கு முற்றிலும் புறம்பானவை. இவை, நோயாளிக்கு, டாக்டர் மீதுள்ள நம்பிக்கையை குறைத்து விடும்.
ஒரு காலத்தில், குடும்ப டாக்டர் என்ற உயர்ந்த தத்துவம், நடைமுறையில் இருந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும், அந்த டாக்டர் தான் சிகிச்சை அளிப்பார்; அவர் மீது
முழு நம்பிக்கை வைத்து, 'எங்க, குடும்ப டாக்டர்' என, பெருமையோடு கூறுவர்.
டாக்டர் - நோயாளி என்ற, அன்யோன்யமான அந்த பந்தம், இன்று வர்த்தகர் -- நுகர்வோர் என்ற, வியாபார உறவாக மாறி விட்டது. அதனால் தான், டாக்டரின் அலட்சியத்தால் ஏற்படும் பாதிப்புகள் அல்லது இழப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் வந்துள்ளன.
பணம் கொடுத்து, ஒரு சேவையை பெறக்கூடிய நுகர்வோரின் உரிமையையும், நலனையும்
பாதுகாப்பதற்காக, 'நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சட்டம் -- 1986' உள்ளது.
ஒரு நோயாளியின் மரணம், டாக்டரின் அலட்சியப் போக்கால் ஏற்பட்டது என்பது நிரூபணமானால், டாக்டரை கைது செய்யவும், நோயாளிக்கு நிவாரணம் அளிக்கவும், இந்த சட்டம் வழி செய்கிறது. 'ஒருவரது அலட்சியமான செயல் காரணமாக, யாருக்காவது மரணம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்கலாம்' என, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு, 304 - -ஏ கூறுகிறது.அதே சமயம், 'உள் நோக்கம் எதுவும் இல்லாமல், நோயாளிக்கு டாக்டர் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் போது, நோயாளி இறக்க நேரிட்டால், டாக்டரை குற்றவாளியாகக் கருதக் கூடாது' என, டாக்டர்களுக்கு ஆதரவாக, பிரிவு - 80 மற்றும்
88ல் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 1986-ல், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு, மருத்துவர்களுக்கு எதிராக, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. நோய்கள் தீவிரம் அடையும் போது, சிகிச்சை பலனின்றி, மரணம் ஏற்படுகிறது. இந்த துர்மரணம், ௬ வயதிலும் ஏற்படலாம்; ௬௦ வயதிலும் ஏற்படலாம். பக்குவம் உள்ளவர்கள், அதை, 'விதி' என, ஏற்றுக் கொள்கின்றனர்; பக்குப்படாதவர்கள், டாக்டரையும், மருத்துவமனையையும் சாடுகின்றனர்; உணர்ச்சி வசப்பட்டு, டாக்டரைத் தாக்குகின்றனர்.
இதனால் தான், சிக்கலான நோயாளிகளை எதிர்கொள்ள, டாக்டர்களும், மருத்துவமனைகளும் தயக்கம் காட்டுகின்றன. டாக்டர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லுாரியில் பயிலும் மாணவர், நான்கரை ஆண்டுகளில், 13 பாடப்பிரிவுகளில், 25 விதமான புத்தகங்களையாவது, நன்கு படித்திருந்தால் தான்,
மருத்துவ அறிவை முற்றிலும் பெற முடியும். ஆனால், அவற்றை எல்லாம் விட, மருத்துவ மாணவரின் அறிவாற்றலை வளர்க்க உதவும், முழுமையான, 'வேத' புத்தகமே, நோயாளி தான் என்பதை, அவர்கள் உணர வேண்டும்.
இளம் மருத்துவர்களே... நோயாளிகளுக்கு, சேவை செய்யும் அரிய வாய்ப்பு, நமக்கு இந்த பிறவியில் கிடைத்திருப்பதை, பாக்கியமாக கருதுங்கள். மனம் வருந்தி, நம்மை நாடி வரும் நோயாளிகளிடம், பணம் பறிக்காதீர்கள். அதற்கு நமக்கு உரிமையில்லை. முறைகேடாக
நீங்கள் வசூலிக்கும் பணம், பிற்காலத்தில் உங்களை படாய் படுத்தத் தான் செய்யும்.இந்த காலத்திலும், நோயாளிகளிடம், 1 ரூபாய், 5 ரூபாய், 'பீஸ்' வாங்கும் எத்தனையோ டாக்டர்கள் உள்ளனர்.
அவர்களும் உங்களைப் போல படித்தவர்கள் தான். அத்தகையோரை நினைத்துப் பார்த்து, நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதவில்லை என்றால், டாக்டரை நோயாளிகள், கடவுளாகப் பார்ப்பதில், அர்த்தமில்லாமல் போய் விடும்.
நோயாளியின் உறவினர்களே... உங்கள் சொந்தங்கள், உங்களைப் பிரியும் போது, உங்களுக்கு ஏற்படும் அதே வேதனை, கண் முன்னே ஒரு நோயாளியை இழக்கும் போது, எங்களுக்கும்
ஏற்படும். ஆகையால், உங்களில் ஒருவராகவே எங்களையும் கருதுங்கள்.அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் மருத்துவ அறிவியல், மரணத்தை வெல்லும் ரகசியத்தை,
இன்னும் எங்களுக்கு கற்றுத் தரவில்லை. ஏனென்றால், டாக்டர்கள், கடவுள்கள் அல்ல; மனிதர்கள் தான்!
தொடர்புக்கு:
அலைபேசி: 75488 71411
இ - மெயில்:
rajt1960@gmail.com