பொது செய்தி

தமிழ்நாடு

கடலுக்கும் தேவை மழைநீர்!

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 கடலுக்கும் தேவை மழைநீர்!

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - குறள்

மேகம், கடலில் இருந்து முகர்ந்த நீரின் ஒரு பகுதியை மழையாக்கி, கடலுக்கு வழங்கா
விட்டால், பெரிய கடலும், தன் இயல்பில் இருந்து விலகி விடும். ஆதலால், கடலுக்கும் மழையின் கருணை அவசியம். அண்ணா பல்கலை, நிலப்புவியியல் துறை தலைவர், எல்.இளங்கோ இன்று, நம்முடன்.

தமிழகத்தில், காவிரி டெல்டா தான், மிகப்பெரிய டெல்டா. காவிரி நீர் சரியாக வராவிட்டால், நிலத்தின் இயல்பு திரியும். அதேநேரம், கர்நாடகா, அரிதாக வெளியிடும், மிகுதியான உபரிநீரைத்
தேக்க, மேட்டூரை தவிர வேறொரு அணை இல்லை. இன்னொரு அணையை கட்டி, கடலுக்கு வீணாக செல்லும் நீரை தடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை பரவலாக ஒலிக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறையில், இது போன்ற குரல்கள் ஒலிப்பது இயல்பு தான். என்றாலும், கடலுக்கும் நீர் செல்ல வேண்டும் என்பது தான், இயற்கையின் நியதி. அதேநேரம், உபரியாக கடலுக்கு செல்லும் நீரில், 20 சதவீதத்தை தேக்குவதற்கான கட்டமைப்புகளை செய்ய முடியும் என்பதும், அதற்காக முயற்சிக்க வேண்டும் என்பதும் காலத்தின் தேவை.காரணம், சமீபகாலமாக வெளியிடப்படும் ஆராய்ச்சி முடிவுகள், காலநிலை மாற்றத்தால், மழை பெய்யும் கால அளவு குறையும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

அதாவது, மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, இரண்டு மாதங்களுக்குள் பெய்து விடும் என, அந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், பெய்யும் மழையை தேக்க வேண்டியது அவசியம்.அதேநேரத்தில், கடல்நீரில் உப்பின் அடர்த்தியை குறைத்து, மீன்வளம், பவளப்பாறை உள்ளிட்ட பல்வேறு வளங்களை காக்க, ஆற்றுநீர் கடலுக்குள் விழ வேண்டும்.
அவ்வாறு செல்லாமல் தடுத்தால், கடல்நீரில் உப்பின் அடர்த்தி அதிகமாகி, கடலோர பகுதிகளில் ஊடுருவும். இதனால், தாவரங்கள் கூட வளர இயலாத, பாலை நிலமாக மாறி விடும்.

இவ்வாறு, சீனாவின் மஞ்சளாற்றின் குறுக்கே கட்டிய அணையால், கடலுக்குள் நீர் செல்லவில்லை. கரையோர ஊர்களில், உப்புநீர் புகுந்து, ஊர்மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.அதேபோல, காவிரி டெல்டாவின் கடலோர பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஆற்றுநீர் கலக்க வேண்டும்.


தடுப்பணைகள்

நாம், இயற்கையை காக்க வேண்டிய பொறுப்பிலும், விவசாயத்தை காக்க வேண்டிய பொறுப்பிலும் இருப்பதால், காவிரி உள்ளிட்ட ஆறுகளிலும், அவற்றின் துணையாறுகளிலும், தடுப்பணைகளை கட்ட வேண்டும்.தடுப்பணைகளில், நீரை தடுத்து அனுப்புவதால், அந்தந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை ஓரளவு காக்க முடியும். இதற்கு, ஆற்று மணலை காப்பதும் அவசியம்.அதேபோல, ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளையும் ஆழப்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் கரைகளை உயர்த்த வேண்டும்.

தனிநபர்கள் பயன்பாட்டில் உள்ள கிணறுகளை காக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளில் உப்புநீர் கிடைத்தால் கூட, கிணற்றில் நல்லநீர் கிடைக்க வாய்ப்புண்டு. அதனால், கிணறுகள் துார்ந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், நிலத்தடி நீரில் புளூரைடின் அளவு அதிகமாக உள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, பாப்பிச்செட்டிப்பட்டி என்ற கிராமத்தில், நாங்கள் நிலத்தடி நீரை சோதனை செய்தோம். ஒரு லிட்டர் தண்ணீரில், 4 மி.கி., புளூரைடு இருந்தது.
இதனால், அங்குள்ளோரின் எலும்பு மற்றும் பற்களை, புளூரோசிஸ் என்ற நோய் பாதித்தது.
இந்நிலையில், அங்குள்ள குடிநீர் கிணற்றுக்கு அருகே, இரண்டு குறுங்கிணறுகளை அமைத்தோம். ஒன்றில், கூழாங்கல்லும், மற்றொன்றில் மணலும் பரப்பினோம்.

அப்பகுதியில் சேகரமாகும் மழைநீரை, முதல் கிணற்றிலிருந்து, இரண்டாம் கிணற்றுக்கு மாற்றி, வடிகட்டப்பட்ட அந்த நீர், குடிநீர் கிணற்றில் விழும்படி செய்தோம். இவ்வாறு மழைநீர் கலந்த பின், ஒரு லிட்டர் தண்ணீரில், 0.2 மி.கி., என்ற அளவுக்கு புளூரைடின் அளவு குறைந்தது.
இதுபோல, நிலத்தடி நீரில் உள்ள உப்பு, இரும்பு உள்ளிட்டவற்றின் அளவையும், மழைநீரை கலப்பதால் குறைக்க முடியும் என்பதை, எங்கள் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும், நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கி விட்டது என்பது தான் உண்மை. நிலத்தடி நீர் மட்டுமல்ல, நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவில், 27 சதவீதம் மட்டும் தான், இருப்பில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.சென்னையில், 1893ல், 12.6 சதுர கிலோ மீட்டராக இருந்த நீர்நிலைகளின் பரப்பு, 2017ல், 3.2 சதுர கி.மீ., ஆக சுருங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், நகரமயமாதல் தான். சென்னையில், நுங்கம்பாக்கம் ஏரி, மயிலாப்பூர் ஏரி மட்டுமே, 7 கி.மீ., வரை பரவியிருந்ததாக கூறப்படுகிறது.

வியாசர்பாடி, பெரம்பூர், மேடவாக்கம் பகுதிகளில் இருந்த நீர்நிலைகளில், இன்று குடியிருப்புகள் உள்ளன. நந்தனம் ஏரியில் தான், சி.ஐ.டி., காலனி உள்ளது. அதேபோல, கீழ்ப்பாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்த நீர்நிலைகள் சுருங்கி தான், 1950க்கு பின், குடியிருப்பு பகுதிகளாக மாறின.


பெருவெள்ளம்

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களும் ஏரிகளின் மீது தான் அமைக்கப்பட்டன. ஒருகாலத்தில் மிருகக்காட்சி சாலையாக இருந்த இடம் தான், தற்போது, நேரு விளையாட்டு மைதானம், சென்ட்ரல் ரயில் நிலையங்களாக மாறியுள்ளன.சென்னையில் உள்ள, லேக் ஏரியா, டேங்க் பன்ட் ரோடு, ஏரி திட்டம் போன்ற இடங்கள், நீர்நிலைகளில் கட்டி எழுப்பப்பட்டவை என்பதை, சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறாக, பெரிய பரப்பளவில் சேமிக்கப்பட்ட மழைநீரை தற்போது சேமிக்க முடியாது. இருப்பினும், இருக்கும் நீர்நிலைகளில் சேமிக்க ஒரே வழி, அதன் ஆழத்தை ஏற்கனவே இருந்ததை விட, இருமடங்காக்குவது தான்.அவ்வாறு ஏரிகளை துார் வாராமல் விட்டதாலும், நீர்வழிகளை பராமரிக்காமல் விட்டதாலும் தான், 2015ல், சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

அதாவது, ஒவ்வொரு பெருமழையிலும், பாதிக்கப்படும் இடங்கள் எல்லாம், ஒரு காலத்தில், நீர்நிலைகளாக இருந்தவை என்பது, நமக்கு புரியும்.இவ்வாறு, தமிழகம் முழுக்க இருந்த நீர்நிலைகள், அரசாலும், தனியாராலும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன; ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், உயிர்ச்சூழல் மிகவும் பாதிக்கப்படுகிறது.உணவு சங்கிலிஅறுகிறது. மற்றொரு புறம், காலநிலை மாற்றத்தால், மழை உள்ளிட்ட இயற்கை வரத்தின் அளவு குறைந்து வருகிறது. இவற்றால், மனிதனுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும்.

பெய்யும் மழைநீரை காக்க, அரசு என்ன செய்தது, என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி
களுக்கான விடை, அடுத்தடுத்த கட்டுரைகளில்.
- நடுவூர் சிவா

naduvoorsiva@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
21-ஜூலை-201916:12:35 IST Report Abuse
Rajalakshmi இந்த உண்மையை நமது ஹிந்து தர்மசாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன என நான் ஒரு ஆன்மிக ப்ரவசனம் செவிமடுக்கையில் அறிந்து கொண்டேன். நதிகளெல்லாம் கடலில் கலப்பது என்பது நியதி. இதனை நமது பேராசையினால் தடுத்து அணைகள் பல கட்டுவது என்பது நமக்கு தீமையே விளைவிக்கும். பஞ்சபூதங்களிலும் இறைவன் நித்யநிரந்தரம் குடிகொண்டுள்ளதால் நமது ரிஷிபரம்பரை அவையனைத்தையும் போற்றி அடக்கமாக வாழ்ந்தனர். இன்று அந்த reverence is absent . மேலும் பசுவை போற்றுவது மிக மிக அவசியம். இதிலும் கட்டுக்கடங்கா திமிர் மதர்த்த ''மாட்டுக்கறி திம்பேன் தனிமனித சொதந்தரம் '' எனும் கூட்டம் ஒரு பக்கம். நொடிக்கொரு முறை ''மனிதநேயம்'' என பிதற்றல்.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
21-ஜூலை-201911:25:42 IST Report Abuse
Needhiyin Pakkam Nil நான் கூட கடலுக்கு செல்லும் எல்லா நதிகளையும் தடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்து விடலாம் என்று நினைத்தேன் இதுல இப்படி வேற ஒரு ரகசியம் இருக்கா, அறிவியல் காலத்தில் கூட இதை எவனும் சொல்லலையே ஆனால் வள்ளுவன் ஆண்ட்ரே கணித்திருக்கிறார், வாழ்க வள்ளுவன் பெருந்தகை......
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-ஜூலை-201910:03:12 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj பத்திரிக கை பலம் பெரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X