சென்னை: " காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் செய்வதற்கு எந்த அளவுக்கு கூட்டம் வந்தாலும், அதற்கான ஏற்பாடுகளை செய்வது அரசின் கடமை ஆகும். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாமல் பக்தர்கள் வர வேண்டாம் என்பது மாநில அரசின் இயலாமையை காட்டுகிறது" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனத்தை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று தடல் புடல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வர வேண்டாம் என விளம்பரம்
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட கலெக்டர் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார். இதில் கூட்டம் அதிகம் இருப்பதால் வயதான முதியவர்களும், சிறுவர்களும் வர வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராரமன் பங்கேற்க வந்திருந்தார். இந்நேரத்தில் அத்திவரதர் கோயில் தொடர்பான கலெக்டரின் விளம்பரத்தை பார்த்து ஆவேசமுற்றார். இதனையடுத்து அவர் தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளிடம் தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்.
அமைச்சர் தனது அதிருப்தியில்; " 40 ஆண்டுக்கொரு முறை நடக்கும் அத்திவரதர் தரிசனம் என்பது இந்துக்களுக்கு ஒரு முக்கியமான விழாவாகும். " இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் முறையாக செய்திருக்க வேண்டாமா ? " .
அமர்நாத், கும்பமேளா ஏற்பாடுகள்
கோடிக்கணக்கானோர் பங்கேற்ற கும்பமேளா ஏற்பாட்டை உ .பி., மாநில அரசு முறையாக செய்தது. 30 நாட்களில் 10 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது போல் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டாமா ? தமிழகத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை ? மாநிலத்தில் எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் உள்ளன. இவர்களை துணைக்கு அழைத்து சிறப்பான ஏற்பாடு செய்திருக்கலாம்.

அரசின் இயலாமை
5 பக்தர்கள் நெரிசலில் சிக்கி பலியானது மிகவும் வருத்தம் அளிக்ககூடியது. இதற்கு யார் பொறுப்பு ? இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் தடுத்திருக்க வேண்டும். " முதியவர்கள் வர வேண்டாம் என விளம்பரம் செய்தது தவறானது. வயதான பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வருவது இயற்கை ஆனதும் கூட. அரசே பக்தர்களை வர வேண்டாம் என கூறுவது அவர்களின் இயலாமையை காட்டுகிறது. முறையான ஓருங்கிணைப்பையும், ஏற்பாட்டையும் செய்யாதது தவறானது. பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பது அரசின் பணி. அதனை விட்டு அலட்சியமாக செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா தனது வருத்தத்தை தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் சென்றார் தலைமை செயலர்
இந்த தகவல் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரை சென்றது. இதனையடுத்து முதல்வர் இபிஎஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று (20 ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதனையடுத்து அதிகாரிகள் விழித்து கொண்டனர். இன்று (21 ம் தேதி ) தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றனர். ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கோயிலில் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE