அத்தி வரதர் வைபவம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அத்தி வரதர் வைபவம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (1)
Share
காஞ்சிபுரம்:''காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.''மேலும், அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 4:00 மணி முதல், பக்தர்களை அனுமதிப்பது குறித்தும், ஆலோசனை நடந்து வருகிறது,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் கூறினார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடைபெறும் அத்தி
 அத்தி வரதர் வைபவம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்

காஞ்சிபுரம்:''காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்துக்கான ஏற்பாடுகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர், சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.''மேலும், அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 4:00 மணி முதல், பக்தர்களை அனுமதிப்பது குறித்தும், ஆலோசனை நடந்து வருகிறது,'' என, தமிழக அரசின் தலைமை செயலர், சண்முகம் கூறினார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடைபெறும் அத்தி வரதர் தரிசனத்திற்கு, தினமும், இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் வருகின்றனர்.கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் பலியானதால், சட்டசபையில், எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு முதல்வர், இ.பி.எஸ்., அத்தி வரதர் வைபவத்துக்கு தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதேநேரத்தில், கூட்டத்தை தவிர்க்கவும், பக்தர்கள் வருகையை குறைக்கவும், காஞ்சிபுரம் கலெக்டர், விளம்பர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில், 'வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோர், காஞ்சி புரம் வர வேண்டாம்' என, தெரிவித்திருந்தார்.
இதற்கு, பக்தர்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு கிளம்பியது.சென்னை வந்திருந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக, தலைமை செயலரிடம் பேசியதாக தெரிகிறது. 'பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பை செய்ய வேண்டியது தான், அரசின் கடமை' என, அவர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிறப்பு கூட்டம்
இதையடுத்து, அரசின் தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையா, பிற துறை முதன்மை செயலர் மற்றும் இயக்குனர்கள், நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் கோவிலில் ஆய்வு நடத்தினர்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மேற்கண்ட அதிகாரிகளின் சிறப்பு கூட்டம் நடந்தது.இதையடுத்து, நிருபர்களிடம், தலைமை செயலர் சண்முகம் கூறியதாவது:அத்தி வரதர் வைபவத்துக்கான முன்னேற்பாடுகள் நன்றாக உள்ளன. கலெக்டருக்கு துணையாக, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், பாஸ்கரன் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குனர், சுப்பையன் ஆகியோர், விழாவுக்கான சிறப்புஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவில் அருகே, குடிநீர் வழங்கவும், கூடுதல் கழிப்பறைகள் அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.
ஊர்க்காவல் படை
தற்போது, 5,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக, 1,000 ஊர்க்காவல் படையினர், வரவழைக்கப்பட உள்ளனர்.சுகாதார பணிக்காக, 1,500 பணியாளர்கள் வரவழைக்கப்படுவர். 1,500 சக்கர நாற்காலிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 4:00 மணி முதல், பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.வசந்த மண்டபத்திலிருந்து, அத்தி வரதரை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து, முடிவு செய்யவில்லை. பிரதமர் மோடி வருவது குறித்து, எந்த தேதியும் முடிவாகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
அத்தி வரதர் வைபவத்திற்காக, பிற மண்டலங்களில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, காஞ்சிபுரத்திற்கு ஆய்வுக்கு வந்த போக்குவரத்து துறை தலைமை செயலர், ராதாகிருஷ்ணன், நேற்று தெரிவித்தார்.
மிதமான பக்தர்கள் கூட்டம்
மூன்று நாட்களாகவே, கோவிலுக்கு வெளியே பெரியளவில் கூட்டமில்லாமல் இருந்தது. நேற்று காலை, பக்தர்கள் அதிகளவில் வந்தனர். வடக்கு மாடவீதி முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். ஆனால், மதியத்துக்கு பின், கூட்டம் குறைந்து காணப்பட்டது.பக்தர்கள் அனைவரும், கோவிலுக்கு உள்ளேயே வரிசையில் நிற்பதால், கோவிலுக்கு வெளியே அதிகளவில் பக்தர்களை காண முடியவில்லை. இரண்டு மணி நேரத்தில், அத்தி வரதரை தரிசிக்க முடிந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் ஆகியோரும், நேற்று அத்தி வரதரைதரிசித்தனர்.
அத்தி வரதர் இடம் மாற்றம்?
''அத்தி வரதரை இடமாற்றம் செய்வது குறித்து, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சேலம் மாவட்டம், இடைப்பாடியில், நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், நிதி ஆதாரத்தை பெருக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதியை பெற, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அணை பாதுகாப்பு மசோதா, கடந்த முறை விவாதத்துக்கு வந்த போதே, அதை எதிர்த்து, நிறுத்தி வைத்தோம். இப்போது, அந்த மசோதாவை எதிர்த்து, பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குரல் கொடுப்பர்.கேரளாவிலுள்ள பல்வேறு அணைகள், தமிழகத்தின் நிர்வாகத்தில் உள்ளன. அதை காக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, அத்தி வரதரை இடமாற்றம்செய்ய முடியுமா என, அர்ச்சகர்களிடம் பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ்
அத்தி வரதரை தரிசிக்க, காஞ்சிபுரம் செல்லும் பக்தர்களுக்காக, வேலுாரிலிருந்து, 5 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது.காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நாமக்கல், கரூர் பகுதிகளிலிருந்து, பஸ்களில் செல்வோர், வேலுார் வந்து தான் செல்ல வேண்டும்.இவர்கள், அதிகாலை, 2:00 மணிக்கு வேலுார் வருகின்றனர். 4:00 மணி முதல், காஞ்சிபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அதுவரை அவர்கள், வேலுார் பஸ் ஸ்டாண்டிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், பக்தர்கள் வசதிக்காக, நள்ளிரவு, 12:00 மணியிலிருந்து, காஞ்சிபுரத்துக்கு, 5 நிமிடங்களுக்கு ஒரு அரசு பஸ் இயக்கப் படுகிறது.அரசு போக்குவரத்து கழக, வேலுார் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:அதிகளவு பக்தர்கள் வந்தால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்காக, தயார் நிலையில், 25 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறைவான பயணியர் செல்லும் வழித்தட பஸ்களும், காஞ்சிபுரத்துக்கு மாற்றி அனுப்பப்படும்.வெளியூரிலிருந்து, வேலுார் வரும் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருக்காமல், உடனுக்குடன் காஞ்சிபுரம் செல்லும் பஸ்களில் ஏற்றி அனுப்பப்படுவர். இதற்காக, 24 மணி நேரமும் காஞ்சிபுரத்துக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரதமர் மோடி வருகை ரத்து?
பிரதமர் மோடியின், தமிழக வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சென்னையில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், அத்தி வரதரை தரிசிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், ஐந்து பேர் இறந்துள்ள நேரத்தில், நிர்மலா சீதாராமன் அங்கு செல்வது சரியாக இருக்காது என்பதால், தரிசனம் செய்யும் திட்டத்தை, கடைசி நேரத்தில் ரத்து செய்ததாக, தமிழக, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.அதேபோல, நாளை, பிரதமர் மோடி, சென்னை வருவார் என்றும், காஞ்சிபுரம் சென்று, அத்திவரதரை தரிசிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசலில், பக்தர்கள் இறந்துள்ளதால், பிரதமர் வருகை, தேவையில்லாத விமர்சனத்திற்கு இடம் கொடுத்து விடும் என, பா.ஜ., அஞ்சுகிறது.எனவே, மோடியின் வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X