சென்னையில் சுற்றித் திரியும், பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியோர் ஆகியோரை, அந்தந்த பகுதி போலீசார் மீட்டு, மறுவாழ்வு இல்லங்களில் சேர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு, பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின் கீழ், பஸ் நிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்களில், பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட மறுவாழ்வு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.எண்ணிக்கை அதிகம்தற்போது, அத்திட்ட பணிகள் முடங்கியுள்ளன. இதனால், சென்னையில், புறநகர் ரயில்கள், பஸ் நிலையங்கள், கடற்கரை, வணிக வளாகங்கள் போன்ற இடங்களில், பிச்சைக்காரர்கள், அதிகம் காணப்படுகின்றனர்.
அண்ணா மேம்பாலம், நந்தனம், எழும்பூர், சென்ட்ரல் என, முக்கிய சிக்னல்களில், பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக, சிக்னல் நிறுத்தங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், கை குழந்தைகளை வைத்து, கார் கண்ணாடியை துடைத்து விட்டு, பிச்சை கேட்கின்றனர்.அவர்களுடன் வரும் சிறுவர்கள், பேனா, விசிறி, 'மொபைல் போன் கவர்' போன்ற பொருட்களை விற்பது போல், பிச்சை எடுக்கின்றனர்.
பணம் தரவில்லை என்றால், வாகனங்களை தொடர்ந்து சென்று, பிச்சை கேட்கின்றனர். இவர்களை, சிலர், வியாபார நோக்குடன் பயன்படுத்துகின்றனர்.ஆதரவற்றவர்கள்உண்மையில், பிச்சை எடுக்கும் பலரும், ஆதர வற்றவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், வேலை செய்ய முடியாத அளவுக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எனவே, பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, மனநல ஆலோசனை, தொழிற்பயிற்சி, தொழில் துவங்க கடன் உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை.
இந்நிலையில், சட்டசபையில், சமீபத்தில், சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா பேசியதாவது: சாலையோரம் வசிப்போரை எல்லாம், பிச்சைக்காரர்கள் என்று கூறக் கூடாது. கையேந்தி பிச்சை எடுப்போர் மட்டுமே பிச்சைக்காரர்கள். உண்மையா?அவர்களை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர்.நீதிமன்றம், அவர்களை மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டால், அங்கு தங்க வைக்கப்படுவர். அதுபோன்ற நிகழ்வு, தமிழகத்தில் இல்லை. எனவே, தமிழகத்தில், தற்போது, பிச்சைக்காரர்களே இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். அவர் கூறியது உண்மையா என, சென்னையில் ஒரே நாளில்,நம் புகைப்பட கலைஞர்கள் எடுத்த படங்கள்... சரோஜாம்மா... யார் இவர்கள்? கிண்டி போலீசார், 'சபாஷ்!'சின்னமலை பகுதியில் சுற்றித் திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை, சமீபத்தில், கிண்டி சட்டம் - ஒழுங்கு போலீசார் மீட்டனர். அந்த நபருக்கு, முகச்சவரன் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, அந்த நபரை, மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தனர். போலீசாரின் இந்த செயல், பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுத் தந்தது.
சென்னை மாநகரம் முழுவதும், இதே போன்று, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், சாலையோரம் சுற்றித் திரிகின்றனர். அந்தந்த பகுதி போலீசார், அது போன்றவர்களை மீட்டு, காப்பகங்களிலும், அரசு மறுவாழ்வு இல்லங்களிலும் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு.