புதிய வடிவில் புறநானூறு : தமிழிற்கு பாப்பையாவின் பரிசு

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (6) | |
Advertisement
உலகறிந்த தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து, நற்றமிழ் நாவன்மையாலும், இணையற்ற இலக்கிய அறிவாலும், இழையோடும் நகைச்சுவையாலும் தமிழ் உள்ளங்களில் குடிகொண்டவர். தனது அளப்பரிய தமிழறிவாலும், ஆளுமையான பேச்சாற்றலாலும் இளைய தலைமுறையை கூட பட்டிமன்றம் பக்கம் பார்வையை திருப்ப வைத்தவர். கம்பன் கழகம் மூலம்,
புதிய வடிவில் புறநானூறு : தமிழிற்கு பாப்பையாவின் பரிசு

உலகறிந்த தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து, நற்றமிழ் நாவன்மையாலும், இணையற்ற இலக்கிய அறிவாலும், இழையோடும் நகைச்சுவையாலும் தமிழ் உள்ளங்களில் குடிகொண்டவர். தனது அளப்பரிய தமிழறிவாலும், ஆளுமையான பேச்சாற்றலாலும் இளைய தலைமுறையை கூட பட்டிமன்றம் பக்கம் பார்வையை திருப்ப வைத்தவர். கம்பன் கழகம் மூலம், பட்டிதொட்டி எல்லாம் கம்பன் புகழ் பாடி வருபவர். கணினியோடு அலையும் இளைஞர்கள் கூட கம்பனை கவர காரணமானவர். கம்பன் பற்றிய உரைகளை தொகுத்து நுாலாக வெளியிட்டவர். திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதியிருந்தாலும், அதிலும் புதுமையை புகுத்தி சிறப்பித்தவர்.

இந்த 83 வயதில் அவரது உழைப்பாக, மூன்றாண்டு கால முயற்சியாக வெளியாகி இருக்கிறது... 'புறநானுாறு- புதிய வரிசை வகை' என்ற 928 பக்க புத்தகம்.

புலவர் பெருமக்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சொல்லாட்சியில், தொன்மையான தமிழின் பொக்கிஷமாக இருப்பது சங்க இலக்கியமாகிய புறநானுாறு. சராசரி தமிழனிடம் இருந்து அது தள்ளியே இருக்கிறது. பள்ளிக் காலங்களில் அந்த பாடல்களை பொருள் புரியாமலே மனப்பாடமாக படித்திருப்போம் மதிப்பெண்ணிற்காக!

புறநானுாறு என்றாலே அது பெரும் புலவர்களுக்கானது என்று 'புறமுதுகிட்டு ஓடும்' நமக்கு, இந்த புத்தகம் மூலம் எளிமையாய், பொருள் புரிய விளக்கி 'இலக்கிய விருந்து' படைத்திருக்கிறார் சாலமன் பாப்பையா.

பழந்தமிழ் இலக்கிய நுால் என்று புறந்தள்ளாமல் புறநானுாற்றை இனி இளைய தலைமுறையும் புலமையோடு கொண்டாடும். தனது ஆழ்ந்த தமிழ் ஞானம் மூலம், தமிழ் இலக்கிய உலகிற்கு இணையற்ற பரிசை தந்திருக்கிறார் பாப்பையா என்றே சொல்லத் தோன்றுகிறது. 'புறநானுாற்றை முறை செய்த பேரறிஞர்' என இலக்கிய உலகம் இவரை இனி கொண்டாடட்டும்!
* இந்த புத்தகம் உருவாக்கும் எண்ணம் எப்படி உருவானது?
நான் 1955ல் அமெரிக்கன் கல்லுாரி மாணவராக இருந்த போது, ஒரு போட்டியில் புறநானுாறு புத்தகம் பரிசாக கிடைத்தது. நான் படித்தது பொருளாதாரம். எனவே புறநானுாறு புரியவில்லை. பின்னர் எம்.ஏ., தமிழ் படித்த போது புறநானுாறு பற்றி அறிய முயற்சி செய்தேன். பல விளக்க உரைகள் எனக்கு விளங்கவில்லை. பிறகு ஆசிரியர் ஆன போது, அது பற்றி அறிந்து தானே ஆக வேண்டும் என முயற்சிகள் செய்து ஓரளவிற்கு அதில் வெற்றியும் பெற்றேன். பல விளக்க உரைகள் புலவர்களுக்காகவே எழுதப்பட்டவை; பொதுமக்களுக்கு புரியாது.

உ.வே.சாமிநாதய்யர், புறநானுாற்றை தொகுத்து அச்சேற்றி, சில குறிப்புரைகளும் சேர்த்தார். அதனை தமிழறிஞர் ஜி.யு.போப்பிற்கு அனுப்பி வைத்தார். அப்போது ஜி.யு.போப் எழுதிய கடிதத்தில், 'புறநானுாற்றை இன்னும் தெளிவுப்படுத்த முடியாதா. எனக்கு பல பகுதிகள் விளங்கவில்லை. பண்டிதர்கள் அல்லாதோருக்கும் புரிய வேண்டும். இன்னும் சுலபமான, தெளிவான நடையில் வரவேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். இதனை உ.வே.சா., 'என் சரித்திரம்' நுாலில் குறிப்பிட்டுள்ளார். இதனை எல்லாம் படித்த போது எனக்கு புறநானுாறு மேல் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. பண்டைய மக்களின் வாழ்வு நிலை, வாழ்வியல், அறம், அரசாட்சி, சமூகம் போன்ற பல அரிய விஷயங்கள் புறநானுாற்றில் இருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தேன். நிறைய தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்தேன். நாம் புதுமையாய், எளிமையாய் தொகுத்து விளக்க முடியாதா என முயற்சித்ததன் விளைவு இந்த புத்தகம்.

* ஏற்கனவே வெளியாகி உள்ள புறநானுாற்று விளக்க உரையில் இருந்து இந்த நுால் எப்படி வேறுபடுகிறது?
புறநானுாற்றில் ஒரு மன்னரை பற்றி 5வது பாடல் இருந்தால், மீண்டும் அவர்பற்றி 55வது பாடல் இருக்கும். ஒரு மன்னருக்கு அவரது பல பெயர்களில் பாடல் இருக்கும். பல மன்னர் பெயர்கள் இருந்ததால் அவர்கள் எல்லோரும் ஒருவர் தானா என்ற குழப்பம் ஏற்படும். தமிழக அரசே ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்து மன்னர் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்தி ஒரு நுால் வந்தது. அது பழைய நுால்; ஆனாலும் அந்த வரிசையில் யாரும் பதிப்பிக்கவில்லை. தமிழை ஆழமாக கற்று உணர வேண்டும் என்ற காலம் போய்விட்டது. 'தமிழ் எனக்கு அவ்வளவாக வராது' என்று தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து பேசும் நம் பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகி வரும் இக்காலத்தில், அதற்கு நாம் எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தேன். எனவே இளையதலைமுறையும் இந்த அரியநுாலை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாற்றங்களுடன், எளிய விளக்க உரையுடன் தொகுத்தேன்.

* எந்த மாதிரியான மாற்றங்கள் செய்துள்ளீர்கள்?கடவுள் வாழ்த்து; அது நுாலில் முதலில் இருந்தது. அதற்கு பிறகு பல பாடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை முறைப்படுத்தியுள்ளேன். மக்களின் வாழ்க்கை முறை பற்றிய பாடல்களை, 'சிற்றுார்களுக்குள் சிறுநடை' என்ற தலைப்பில் தொகுத்துள்ளேன். 'வேந்தர்கள் வரிசை' என்ற தலைப்பில் சேரர், சோழர், பாண்டியர், குறுநிலமன்னர், நிலக்கிழார்கள், வீரரை பாடிய புலவர்கள் என்றும், போர் என்ற தலைப்பில் போருக்கு முன்னும் பின்னும், போருக்கு பின் பெண்கள் நிலை, அரசிற்கு அறிவுரை என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் பாடல்களை சேர்த்தும் எளிய நடையில் விளக்கவுரை தந்திருக்கிறேன். பாட்டை படித்து விட்டால் பொருள் விளங்காது. பொருளை படித்து பின் பாட்டை படித்தால் புரியும் என்ற நோக்கில் எழுதியுள்ளேன். நாவல் கூட படிக்காத இந்த தலைமுறை புறநானுாறு படிக்கட்டும் என்று முயற்சித்திருக்கிறேன்.

* இது உங்கள் கனவு திட்டமா
ஆமாம், பல ஆண்டுகளாக நினைத்திருந்தேன். நிறைய ஆய்வுகளை செய்து கடந்த மூன்றாண்டுகள் முழுமையாக ஈடுபட்டேன். இதைவிட சிறப்பாக இன்னும் யாரேனும் வருங்காலத்தில் எழுதுவார்கள். தோள் மேல் ஏறி உலகை பார்ப்பதற்கும், காலின் அருகில் நின்று பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இனி என் தோள் மேல் ஏறி பார்ப்பார்கள். அது தானே முறை. இந்த புத்தகம் மேலும் பல ஆய்விற்கு வழிவகுக்கும். இளைஞர்கள் கற்பனை உலகில் பிரவேசிக்காமல், கற்பனை கோட்டை கட்டி வாழாமல், வாழ்வின் யதார்த்தம் அறிய வேண்டும். பண்டைய வாழ்வு முறைகள், சமூகம் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த நுால்.இவ்வாறு கூறினார்.
வாழ்த்த 0452- 297 2536.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
30-ஜூலை-201912:44:25 IST Report Abuse
ganapati sb புறநாநூறிற்கு எளிய முறையில் விளக்கம் எழுதிய பாப்பையாவிற்கு பாராட்டுக்கள் அதை பார்த்துதான் நிர்மலா யானை புக்கு களம் போல என புறநானுறு பாடலை பாரதத்தின் பட்ஜெட்டில் சொன்னாரா அல்லது வவேசு உரையை படித்து சொன்னாரா
Rate this:
Cancel
N Parthiban - chennai,இந்தியா
30-ஜூலை-201911:37:09 IST Report Abuse
N Parthiban இதிலும் அரசியல். அவர் சன் டிவி யில் பணி ஆற்றியதால் இந்த அரசாங்கம் கவுரவம் செய்யாது
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
25-ஜூலை-201908:06:12 IST Report Abuse
oce புறநானூறு அகநானூறு பதிற்று பத்து நல்ல குறுந்தொகை ஓஙுகு பரிபாடல் போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் புலவர்கள் அன்றைய மன்னர்களால் ஊக்குவிக்கப்பட்டு அவர்களது ஆட்சி சிறப்பை பாடி ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றிருப்பவை.சங்க கால தமிழர் நாகரிக வரலாற்றினை வெளி உலகுக்கு கொணர்ந்த தமிழ் இலக்கிய விடி வெள்ளி டாக்டர். உ.வே.சாமிநாதய்யர். சிலைகளை தமிழகத்தின் அனைத்து பல் கலைக் கழகங்களிலும் முடிந்தால் சட்ட சபை வளாகத்திலும் நிறுவி பிறந்த நாளை கொண்டாடுவது தமிழுக்கு கிடைக்கும் தனிப் பெருமை. உயர் திரு சாலமன் பாப்பையா அவர்களை பாராட்டி இந்திய அரசு கௌரவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X