இதோ... அதோ... என்று, கருமேகங்கள் போக்குகாட்டி கொண்டிருந்த நிலையில், சித்ராவும், மித்ராவும், வண்டியில் சென்று கொண்டிருந்தனர். சிவன் தியேட்டர் வழியே வண்டி சென்ற போது, மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கினா மட்டும்தான் பிடிக்கறாங்க. கமிஷன்' வாங்கினா பிடிக்க மாட்டீங்கறாங்க,'' என்றாள்.
''ஏய்... மித்து. புரியற மாதிரி சொல்லுடி?''''அக்கா... நாலு நாளைக்கு முன்னாடி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு நடத்துனாங்க. 'சக்தி'யுள்ள ஒருவரை பிடிச்சு விசாரிச்சிட்டு இருக்காங்க. ஆனா, அதே ஆபீசில், பத்திரம் எழுத்தர்ங்கிற பேரில், இஷ்டத்துக்கு பணம் விளையாடுதாம். கையில வாங்கினாத்தானே பிரச்னைன்னு, பல்வேறு வழியில் கைமாறுதாம். அதையும் கண்டுபிடிச்சு களையெடுக்கணும்னு, பெட்டிஷன் போயிருக்காம்,''
''அதுக்கும் ஒரு ரெய்டு விட்டாதான் சரியாகும் போல,'' என்ற சித்ரா, ''ஜல் சக்தி அபியான்' திட்டக்குழுவினர் வந்ததும், போனதும் தெரியலையே. உனக்கு, ஏதாச்சும் தெரியுமா?''''டி.ஆர்.டி.ஓ., அதிகாரிங்க பொறுப்புல, கலெக்டர் ஆபீசில், ஆய்வு நடந்துச்சு. ஏதாவது சொதப்பல் இருக்கக்கூடாதுன்னுட்டு, பசுமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பங்கேற்க வைச்சு, கூட்டம் நடத்தி முடிச்சிட்டாங்க..''
''குழுவுல தொழில்நுட்ப பிரிவு அதிகாரி வந்துட்டு போயிட்டாராம்... நிதிப்பிரிவு அதிகாரி 'லேட்'டா வந்து பார்த்துட்டு போயிருக்காரு. இவங்க இரண்டு பேரும், சரியா 'ரிப்போர்ட்' கொடுத்தா மட்டுமே, சென்ட்ரல் கவர்மென்ட் 'பண்ட்' கிடைக்கும்னு தெளிவா சொல்லிட்டாங்க. அதனால, அவரையும் வரவழைச்சு, ஆய்வுங்கற பேரில, குறிப்பிட்ட மாதிரி, சில ஏரியாவ சுத்திக்காட்டி அனுப்பி வச்சிருக்காங்க'' என்றாள் மித்ரா.
''இப்படி, மாவட்ட அதிகாரிகளுக்கே அக்கறை இல்லைன்னா, திட்டம் எப்படி வெற்றி பெறும்?''''கரெக்டா சொன்னீங்க. என்னதான், அரசாங்கம் திட்டம் கொண்டு வந்தாலும், அதை சக்சஸ் பண்றது அவங்க கையிலதானே இருக்குது. சில நல்ல அதிகாரிங்களும் இருக்கிறாங்க. அதேபோல், எல்லாரும் நடந்துட்டா பரவாயில்லதான்,'' மித்ரா சொன்னதும், ''அடடா... பரவாயில்லையே... கரெக்டா சொல்றயே!''வண்டி, பூலுவப்பட்டி வழியே முதலிபாளையம் நோக்கி சென்றது. அவ்வழியே ரோட்டோரமிருந்த பெட்டிக்கடை முன், கூட்டமாக இருந்தது. ''ஏங்க்கா... அங்க என்ன கூட்டம்?'' என்றாள் மித்ரா.
''ஓ... அதுவா.. வேறென்ன, லாட்டரிதான். இங்கே பரவாயில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக, விக்கறாங்க. சிட்டியில் பல இடங்களில் ஜோராக வித்தாலும், டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டுக்கு பக்கத்திலயே விக்கறதுதான், பேரதிர்ச்சியான விஷயம்டி,''''என்னக்கா... சொல்றீங்க? கோர்ட்டு பக்கத்திலயேவா?'
'''ஆமாம். லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட் வளாகம் அருகே, பகிரங்கமாக, லாட்டரி விக்கறாங்க. இதில், விற்கும், வாங்கற ஆட்கள், கும்பல் கும்பலாக ரோட்டிலேேய நிற்பதால், அந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே இருக்குது,''''இத்தனைக்கும், அந்த வழியே போலீஸ் நடமாட்டமும் அதிகமாக இருந்தும் கூட, யாரும் கண்டுக்கறதில்லைங்கறது வேதனையான விஷயம்,''
''அவங்களுக்கு தெரியாமலிருக்குமா? 'கொடுக்க' வேண்டியதை 'கொடுத்து'தான், நடத்துவாங்க,'' என்று சொன்ன மித்ரா, நல்லுார் ஈஸ்வரன் கோவில் முன் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.
விசேஷ பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால், இருவரும், பிரகார மண்டபத்தில் அமர்ந்தனர்.அப்போது, மித்ராவின் மொபைல்போன் ஒலித்தது. பேசி விட்டு வைத்தவளிடம், ''யாரு,'' சித்ரா கேட்டதும், ''வேலம்பாளையத்தில் இருந்து ஆன்ட்டி கூப்பிட்டாங்க,'' மித்ரா பதிலளித்தாள்.''அடடே... ஊரை கேட்டவுடன், ஒரு மேட்டர் நினைவுக்கு வருது. அங்கிருக்கிற ஸ்டேஷனில் சிலர் செய்ற அலப்பறை தாங்க முடியலை,''
''ஏங்க்கா.. என்ன பண்றாங்களாம்?'' ''ஒரு சில போலீஸ், ஸ்டேஷனுக்கு முன்னாடியே, 'மப்டி'யில் நின்று 'வெகிள் செக்கப்' பண்றாங்களாம். பக்கத்திலேயே கமிஷனர் ஆபீஸ் இருக்குதுன்னு, கண்டுக்கறதில்லையாம். அப்புறம், பெட்டிஷன் கொடுக்க வர்வறங்களை ஒருமையில பேசுவது, பெட்டிஷன் கொடுத்தவங்களுக்கு, 'ஆப்போஸிட் சைடு'ஆட்களுக்கு ராஜமரியாதை கொடுக்கிறாங்களாம்,''
''இவ்ளோ நடந்தும், அந்த அதிகாரி எதையுமே கண்டுக்கறதில்லையாம். இந்த ஸ்டேஷன் ஏரியாவிலதான், 'கஞ்சா' விற்பனை கரைபுரண்டோடுது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். பெரிய அதிகாரி பார்த்து நடவடிக்கை எடுத்தால்தான்உண்டாம்,''
''சொல்றதை சொல்வோம். அதிகாரி பாத்துப்பாருன்னு நம்பலாம்,'' என, கூறிய மித்ரா, ''அக்கா... சிட்டி ேஹாம் கார்டு' யூனிட்டில், பணம் விளையாடுதாம்,'' புதிர் போட்டாள்.''மித்து, கரெக்டா மோப்பம் பிடிச்சிட்டயே. 'சிட்டி ஹோம் கார்டில்' மண்டல தளபதிக்கான, பதவிக்காலம் முடிய போகுது. இதுதொடர்பாக, தகுதியானவங்க விண்ணப்பிக்கலாம் என, கமிஷனர் ஆபீஸ் மூலம் அறிவிப்பாங்க. ஆனா, இந்த தடவை எதுவுமில்லே,''
''இப்போ இருக்கறவரே, அப்பதவிக்கு வர விண்ணப்பிச்சு இருக்காரு. அவருக்கு, அரசியல் செல்வாக்கு, பணம் பலம் இருக்கற காரணத்தால், ஒரு அதிகாரியை, 'சிறப்பா கவனிச்சதாக' தகவல் போலீஸ் வட்டாரத்தில் உலா வருது,'' விளக்கினாள் சித்ரா.
கோவிலில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், மணல் லாரி வந்து சென்றது.அதை கவனித்த மித்ரா, ''மணல் விஷயத்தில், 'தட்டி' எடுக்கும் அதிகாரியை, தட்டி கேட்க யாருமில்லையாம்,'' என்றாள்.
''என்னடி, சிலேடையில், சும்மா புகுந்து விளையாடறே. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு,'' ''அக்கா... தாராபுரத்தில் மணல் விஷயத்தில், முக்கியமான அதிகாரி, 365 நாளும், வைட்டமின் 'ப' மழையில் நனையறாராம். இவரு, இவ்வளவு தைரியமாக இருப்பதற்கு, உடுமலை, பொள்ளாச்சியை சேர்ந்த ஆளுங்கட்சியோட நிழலான ஆட்கள்தான் காரணமாம்,''
''அதே மாதிரி, தாராபுரம் ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக ரெண்டுபேர்'நங்கூரம்' போட்டு, நின்னு விளையாடறாங்களாம்., சட்டவிரோத செயல்கள் நடப்பதாக ஸ்டேஷனுக்கு தகவல் வந்தால், சம்பந்தப்பட்டவங்களை மிரட்டி, 'மேட்டர்' வாங்கறது இவங்க டியூட்டியாம்,'' என்று மித்ரா பேசப்பேச, அவளது மொபைல்போன் ஒலித்தது.
''ஹலோ ஜெயராம் அங்கிள். ஹவ் ஆர் யூ?'' என, இரண்டு நிமிடம் பேசிவிட்டு, மீண்டும் கைப்பையில் போனை வைத்தாள்.''அக்கா... பக்கத்தில 'வெள்ளையான கோவில்' ஊரிலுள்ள ஸ்டேஷன் அதிகாரி, வேற இடத்துக்கு 'டிரான்ஸ்பர்' வரக்கூடாதுன்னுட்டு, உடுமலைக்கு போய், ஆளுங்கட்சி பிரமுகருக்கு, '5 எல்' கொடுத்துட்டு, விருந்தும் சாப்பிட்டுட்டுவந்தாராம்,''''ஏன்னா.. அவ்வளவு 'பசை'யான ஸ்டேஷனை விட்டு போக மனமில்லையாம். அதுக்குத்தான், இந்த மொய் ஏற்பாடாம்,'' என்றாள் மித்ரா.
''இப்படி பலரும், கொண்டு போய் கொட்டறதால, மாவட்ட 'முக்கிய' பிரமுகர் 'செல்வாக்கு' எங்கேயோ போயிடுச்சாம்,'' என்று சொன்ன சித்ரா, ''மித்து... சீக்ரம் வா. பூஜையாக போகுது. சுவாமி கும்பிட்டு, போற வழியில, ஜெயபால் அங்கிள் வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு கிளம்பிடலாம்,''அவசரமாக சொல்லி எழுந்தாள். மித்ராவும் எழுந்தும் பின் தொடர்ந்தாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE