பதிவு செய்த நாள் :
மூக்குடைப்பு!
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு...
'மத்தியஸ்தம் குறித்து மோடி பேசவில்லை' என பதிலடி

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உதவும்படி, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்' என, அண்டை நாடான, பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சைக்குள்ளானது.

காஷ்மீர்,அமெரிக்க அதிபர்,டிரம்ப்,மூக்குடைப்பு


'இது, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. இதில், மூன்றாவது நாடு தலையிடுவதை விரும்பவில்லை. மத்தியஸ்தம் செய்யும்படி டிரம்பிடம், பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை' என, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.அண்டை நாடான, பாகிஸ்தானின் பிரதமர், இம்ரான் கான், மூன்று நாள் பயணமாக, அமெரிக்கா சென்றுஉள்ளார்.

நேற்று முன்தினம், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பை சந்தித்தார். ஜம்மு - காஷ்மீர் பிரச்னை தொடர்பாக, இருவரும் பேசினர். அப்போது டிரம்ப் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. அதையே நீங்களும் விரும்புகிறீர்கள் என, நினைக்கிறேன். இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு, நான் தயாராக உள்ளேன்.

சமீபத்தில், ஜப்பானில் நடந்த, 'ஜி - 20' நாடுகள் மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய முடியுமா என, அவர் என்னிடம் கேட்டார்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.இது, மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவிலும், நம் நாட்டிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இரு தரப்பு பேச்சு மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பது, மத்திய அரசின் நிலைப்பாடு. மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை என, மத்திய அரசு பல முறை தெரிவித்துள்ளது.

வலியுறுத்தல்


இந்நிலையில், இந்த விவகாரத்துக்குள் டொனால்டு டிரம்ப் மூக்கை நுழைக்க முயற்சிப்பதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், நேற்று பார்லிமென்டிலும் எதிரொலித்தது. 'மத்தியஸ்தம் செய்யும்படி, டிரம்பிடம், பிரதமர் மோடி கேட்டாரா' என, எதிர்க்கட்சிகள் இரு சபைகளிலும் கேள்வி எழுப்பின. பல்வேறு கட்சித் தலைவர்களும், இந்த விவகாரம் குறித்து, பிரதமர் பதிலளிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 'பிரதமர் மோடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்; காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்' என, கடுமையாக வாதிட்டன. இதனால், இரு சபைகளும் பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, அலுவல் கள் பாதிக்கப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை அமைச்சர், ஜெய்சங்கர், பார்லி.,யில் நேற்று கூறியதாவது:காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, இரு தரப்பும் பேச்சு

நடத்தியே தீர்வு காண வேண்டும் என்பது, மத்திய அரசின் நிலைப்பாடு. இதில், மூன்றாவது நாட்டின் தலையீட்டை நாம் விரும்பவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.

சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் அடிப்படையில் தான், இரு தரப்பும் பேச்சு நடத்த வேண்டும். அதுவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, பாக்., நிறுத்தினால் மட்டுமே பேச்சு என்பதில், இந்த அரசு உறுதியாக உள்ளது.ஜப்பானில் நடந்த மாநாட்டின்போது, இந்தப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யும்படி, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பிடம், பிரதமர் நரேந்திர மோடி எதுவும்பேசவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

விமர்சனம்


காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க முயற்சிக்கும், டொனால்டு டிரம்புக்கு, மத்திய அரசின் திட்டவட்டமான, உறுதியான பதில், மூக்குடைப்பாக அமைந்துள்ளது. டொனால்டு டிரம்ப் வாய் தவறி உளறியுள்ளதாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுஉள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள், வாஷிங்டனில் கூறியுள்ளதாவது: ஜம்மு - காஷ்மீர் உட்பட, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகள், இரு தரப்புக்கு இடையேயானது. அதை, நாங்கள் மதிக்கிறோம். இரு நாடுகளும் விரைவில் பேச்சு நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. இந்த விஷயத்தில், இரு நாடுகளுக்கும் உதவத் தயாராக இருக்கிறோம் என்பதைத் தான், அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இம்ரான் வரவேற்பு


அமெரிக்க அதிபருடனான சந்திப்பிற்கு பின், அமெரிக்க, 'டிவி'க்கு அளித்த பேட்டியில், பாக்., பிரதமர், இம்ரான் கான் கூறியதாவது:இந்தியா - பாக்., இடையேயான பிரச்னைகளுக்கு, இரு தரப்பு பேச்சு மூலம் மட்டுமே தீர்வு காண முடியாது. இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கு, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் முன் வந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. அதை வரவேற்கிறேன்.

பாக்., அதிபராக பர்வேஸ் முஷாரப், இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, அமைதி முயற்சி நடந்தது. ஆனால், சுமுக தீர்வை எட்ட முடியாமல் போய்விட்டது. தற்போது, இரு நாடுகளும், எதிரெதிர் துருவங்களாக உள்ளோம். பேச்சுக்கு இந்தியா முன்வர வேண்டும். இதில், அமெரிக்கா முக்கிய பங்காற்ற முடியும்.இரு நாடுகளும் அணு ஆயுதங்கள் வைத்துஉள்ளதால், போருக்கான வாய்ப்பு இல்லை; 2,500 கி.மீ.,க்கு மேற்பட்ட துார எல்லையை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதால், போர் வந்தால், அது மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்.இவ்வாறு, அவர்கூறினார்.

டிரம்ப் பேசியது என்ன?


பாக்., பிரதமர், இம்ரான் கானுடன், தன் ஓவல் அலுவலகத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தை, இம்ரான் கான் எழுப்பியுள்ளார். அதற்கு, டிரம்ப் கூறியதாவது: இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என, இந்தியர்கள் விரும்புகின்றனர்.

Advertisement

நீங்களும், தீர்வு ஏற்பட வேண்டும் என, விரும்புகிறீர்கள். இந்த விவகாரத்தில், நான் மத்தியஸ்தம் செய்வதற்கும் தயாராக உள்ளேன். எந்த வகையில் நான் உதவ முடியும் என்பதை தெரிவியுங்கள்.

இரு நாடுகளும் மிகச் சிறந்த நாடுகள்; மிகச் சிறந்த தலைமையை கொண்டுள்ளன. உங்களாலேயே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஆனால், இதில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்பினால், அந்த உதவியை செய்வதற்கு தயாராக உள்ளேன்.

இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. தற்போது உங்களுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு மோசமாக உள்ளது. தேவைப்பட்டால், இந்தியாவுடன் நாங்கள் பேசுவோம். இரு நாடுகளையும் ஒரு இடத்தில் சேர்ந்து பேச வைக்க உதவ தயார்.சில வாரங்களுக்கு முன், பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது, இந்தப் பிரச்னை குறித்து பேசினோம். பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்தியஸ்தம் செய்ய தயாரா என, அவர் என்னிடம் கேட்டார். இவ்வாறு, டிரம்ப் கூறியுள்ளார்.

'உளறி கொட்டியுள்ளார்'


பிரதமர் மோடி குறித்தும், காஷ்மீர் விவகாரம் குறித்தும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ள கருத்துக்கு, பல்வேறு முன்னாள் துாதர்கள், வெளியுறவு நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரச்னையை புரிந்து கொள்ளாமல், உளறி கொட்டியுள்ளார் என்றும் விமர்சித்துள்ளனர்.இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க துாதர், ரிச்சர்ட் வர்மா: அதிபர் டிரம்ப் மிகப் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளார். காஷ்மீர் குறித்தும், ஆப்கானிஸ்தான் குறித்தும் அவர் மிகவும் மோசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் பாக்., துாதர், ஹுசைன் ஹக்கானி: ஆப்கானிஸ்தான் பிரச்னைக்கு தீர்வு காண, பாக்., உதவி தேவை. அதை பெறுவதற்காக, பாக்.,கின் விருப்பம் என்னவோ அதை அவர் பேசியுள்ளார். தெற்காசியாவில் உள்ள பிரச்னைகள் குறித்து, அவர் விரைவில் கற்று கொள்வார். தென் கொரிய அதிபர், கிம் ஜான் உன்னை, பாராட்டி பேசிய அவர், பாக்., பிரதமரையும் புகழ்ந்துள்ளார். தனக்கு வேண்டியதை பெறுவதற்காக, டிரம்பின் சூழ்ச்சி இது.

அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் மூத்த அதிகாரி, அசிலா அயர்ஸ்: ஒரு வெளிநாட்டு தலைவருடனான சந்திப்பின்போது எந்தளவு தயாராக வர வேண்டும் என்பதை, டிரம்ப் இப்போது உணர்ந்திருப்பார். தன் வார்த்தைகள், வரலாறு குறித்து விபரங்களில் தெளிவாக இருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய டிரம்ப் மறுத்துவிட்டார்.இவ்வாறு பலரும், டிரம்பை கண்டித்தும், விமர்சித்தும் கருத்து வெளியிட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
24-ஜூலை-201920:36:44 IST Report Abuse

M.COM.N.K.K.1947 இல் இந்தியாவை பிரித்தது தவறு சரி எப்படியோ பிரித்துவிட்டார்கள் போகட்டும் தற்போது உள்ள பாகிஸ்தானை முழுமையாக அவர்களிடம் பிரித்துக் கொடுத்தது தான் தவறு. தற்போது இருப்பதில் பாதியை மட்டுமே அவர்களிடம் கொடுத்திருக்க வேண்டும்.இதை செய்திருந்தால் பிரச்னை வந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுபோய்விடவில்லை.பேச்சு வார்த்தையை துவக்கலாம் எப்படி என்றால். இந்தியாவின் சில பகுதிகளை பாக்கிஸ்தான் சீனாவிடம் தாரை வார்த்துள்ளது அதை நமக்கு தரவேண்டும் சீனா ஆக்கிரமித்த பகுதிகளையும் நமக்கு தர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் பேச்சு வார்த்தையை துவக்கலாம்.இதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டால் பேச்சு வார்த்தையை இந்தியா துவங்கலாம் இல்லையேல் பேச்சு வார்த்தை என்பது தேவையே இல்லை

Rate this:
24-ஜூலை-201918:50:50 IST Report Abuse

ஆப்புஆமாம்.. மோடி ஐயா அப்பிடி எதுவும்.பேசலைன்னு நிர்மலா ஜீக் கிட்டே சொல்லி, அதை அவர் ஜெட்லி ஜி கிட்டே சொல்லி, அதை அவரோட வேலையாள் கிட்டே சொல்லி, அவன் அதை ஜெய் சங்கரின் கார் டிரைவரிடம் சொல்லி, அதை ஜெய் சங்கர் ராஜ்யசபாவில் ஆணித்தரமா சொல்லிட்டாரு. ஆனா, மோடி ஐயாதான் வெளிநாடு போய் ட்ரம்பிட்ட பேசிட்டு வருவாரு. என்ன பேசுனாங்களோ... இல்லே வெறுமனே டீ குடிச்சாங்களோ...

Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
24-ஜூலை-201921:00:59 IST Report Abuse

Sathyanarayanan Bhimaraoஅப்படியா அடுத்த முறை மோடி அமெரிக்கா சென்று திரும்பியதும் அவர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கூற சொல்லி விடலாம். ...

Rate this:
24-ஜூலை-201918:18:18 IST Report Abuse

கோகுல், மதுரைஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் தங்களுக்கு எதற்காக நோபல் பரிசு அளித்தனர் என்று அவரிடமே கேட்டு விளக்கம் பெற்று கொண்டவர் தானே இந்த ட்ரம்ப். இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X