காவிரி ஆணைய கூட்டம்; டில்லியில் தமிழக அதிகாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி ஆணைய கூட்டம்; டில்லியில் தமிழக அதிகாரிகள்

Updated : ஜூலை 24, 2019 | Added : ஜூலை 24, 2019 | கருத்துகள் (4)
Share

சென்னை : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் டில்லி சென்றுள்ளனர்.



latest tamil news



தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை காவிரி மேலாண்மை ஆணையம் இறுதி செய்துள்ளது. இந்த நீரை கர்நாடகா வழங்குவதை உறுதிப்படுத்த மாதந்தோறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும். கடந்தாண்டு இந்த கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை.

நடப்பு நீர் வழங்கும் காலம் ஜூன் மாதம் துவங்கியது. இதை தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதம் ஆணைய கூட்டம் நடந்தது. ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. மற்றும் ஜூலையில் 31.2 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றி கர்நாடக அரசு முறையாக நீர் வழங்கவில்லை. நடப்பு ஆண்டிற்கான ஆணையத்தின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் டில்லியில் நாளை(ஜூலை 25) நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் டில்லி சென்றுள்ளனர்.


latest tamil news



மத்திய நீர்வள ஆணைய தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள அருண்குமார் சின்ஹா தலைமையில் இக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் ஜூன் மற்றும் ஜூலை நிலுவை நீருடன், ஆகஸ்ட் மாதத்திற்காக 45.93 டி.எம்.சி. நீரை வழங்க தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என்ற கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்த உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X