திருப்பூர்:பசுஞ்சோலை போல் மாறவுள்ள நிலத்தில், நாட்டு வேம்பு மற்றும் நாவல் மரக்கன்றுகளுக்கு முதல் மரியாதை செய்து, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்யும் நோக்கில், 'வனத்துக்குள் திருப்பூர்' உருவாக்கப்பட்டது. நான்கு கட்டங்களை கடந்து, ஐந்தாவது திட்டம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
பாதுகாப்பாக வேலியிடப்பட்ட நிலத்தில், சொட்டுநீர் பாசனம் அமைத்து, மரக்கன்று நட, முன்னுரிமை வழங்கப்படுகிறது.விருப்பம் தெரிவிக்கும் விவசாயியின் நிலத்தில், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், இலவசமாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். ஐந்தாவது திட்டத்தில், 10ம் நிகழ்ச்சி, மங்கலம், வேட்டுவபாளையத்தில் நேற்று நடந்தது.அஸ்மா தோட்டம் என்ற பகுதியில், முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மொத்தம், நான்கு ஏக்கரில், 600 நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று காலை நடந்த விழாவில், ஆடி கிருத்திகை மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால், நாட்டு வேம்பு மற்றும் நாவல் மரக்கன்றுகளை வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி வைத்து, பூஜை செய்து மரியாதை செலுத்தப்பட்டது.
முதல் மரியாதை செய்து, பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டன. நில உரிமையாளர் முத்துசாமி, அவரது மனைவி யமுனா ராணி, வனத்துக்குள் திருப்பூர் திட்டக் குழுவினர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.நில உரிமையாளர் யமுனா ராணி கூறுகையில், ''நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகரித்ததால், விவசாயம் எதுவும் செய்ய இயலவில்லை. தரிசாக கிடக்கும் நிலத்தில், 'வனத்துக்கள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நடலாம் என முடிவு செய்தோம். அதன்படி, சொட்டுநீர் வசதியுடன், நாவல் மரக்கன்று நட்டு வைத்துள்ளோம்,'' என்றார்.