தவிக்கும் அமைச்சர்கள் | Dinamalar

தவிக்கும் அமைச்சர்கள்

Added : ஜூலை 27, 2019 | கருத்துகள் (4)
Share
தவிக்கும் அமைச்சர்கள் மொபைல் போனில் பேசும் போது, 'சிக்னல்' கிடைக்காமல் பலர் திண்டாடுவதைப் பார்த்திருக்கிறோம். டில்லியில், மத்திய அமைச்சர்களும், இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள்.பல மத்திய அமைச்சர்கள், தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ, மொபைல் போனில் பேச முயற்சித்தால், சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், பல
தவிக்கும் அமைச்சர்கள்

தவிக்கும் அமைச்சர்கள்

மொபைல் போனில் பேசும் போது, 'சிக்னல்' கிடைக்காமல் பலர் திண்டாடுவதைப் பார்த்திருக்கிறோம். டில்லியில், மத்திய அமைச்சர்களும், இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள்.பல மத்திய அமைச்சர்கள், தங்கள் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ, மொபைல் போனில் பேச முயற்சித்தால், சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், பல அமைச்சர்கள், தங்கள் அறையிலிருந்து வெளியே வந்து, வீட்டிலிருக்கும் தோட்டத்தில் பேச வேண்டிய நிலை உள்ளது.இவர்களது வீடுகளும், அலுவலகங்களும், டில்லியின், வி.ஐ.பி., பகுதியில் அமைந்திருந்தும், இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமனுக்கும், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், மொபைல் போன் பிரச்னையோடு, வீட்டிலுள்ள டெலிபோனும் வேலை செய்யவில்லையாம். இதனால், பட்ஜெட் தயாரிப்பில், அவருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டது.மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சரான, ரவிசங்கர் பிரசாத்திடம், அமைச்சர்கள் தங்கள் மொபைல் போன் பிரச்னையை எடுத்துச் சொல்ல, அவரோ, 'உங்கள் வீட்டில் ஒரு மொபைல் போன், 'டவர்' அமைத்துக் கொள்ளுங்கள்' என்றாராம்.வெறுத்துப் போன அமைச்சர்கள், 'மொபைல் போன் வாங்கும் போது, டவரையும் சேர்த்தா வாங்க முடியும்; நமக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்' என, நொந்து போயுள்ளனர்.


மணி ஓசை கேட்டு ஓடி...

பா.ஜ., அமைச்சர்களும், எம்.பி.,க்களும் பார்லிமென்டிற்கு சரியாக வருவதில்லை; அப்படியே வந்தாலும், கேள்வி நேரத்தின் போது சபையில் இருப்பதில்லை என, பிரதமர் மோடி சொல்லி வருகிறார். சமீபத்தில், இந்த விவகாரத்தில், எம்.பி.,க்களிடமே கோபித்துக் கொண்டார் மோடி. ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில், அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தினமும் இத்தனை மணி நேரம் இருக்க வேண்டும் என, பார்லிமென்ட் துறை அமைச்சர், ஒரு பட்டியல் போட்டுக் கொடுப்பார். இதை, 'ரோஸ்டர் டூட்டி' என்பர்.சில அமைச்சர்கள், இந்த ரோஸ்டர் டூட்டியில் இருந்தும், சபைக்கு வருவதில்லை. இதை, எதிர்க்கட்சிகள் காட்டமாக விமர்சிக்கின்றன. இது, பிரதமருக்கு பிடிக்கவில்லை. ஒரு முறை கேள்வி நேரத்தின் போது, பதில் தர வேண்டிய அமைச்சர், சபையில் இல்லை. தாமதமாக வந்த அவரை, பலர் முன்னிலையில் சபாநாயகர் கண்டித்தார்.சபையில், முக்கிய விவாதங்களின் போதும், மசோதாக்களை நிறைவேற்றும் போதும், ஓட்டெடுப்பின் போதும் மணி அடிப்பது வழக்கம். சபையில், போதிய அளவு, எம்.பி.,க்கள் இல்லாவிட்டாலும், மணி அடிப்பர். இந்த மணி ஓசை கேட்ட உடனேயே, சென்ட்ரல் ஹாலில், 'ரெஸ்ட்' எடுக்கும், பா.ஜ., அமைச்சர்களும், எம்.பி.,க்களும், ஒரே ஓட்டமாக சபைக்கு ஓடுகின்றனர்.இதைப் பார்க்கும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'பாவம் நீங்கள், கொஞ்ச நேரம் ஜாலியாக, சென்ட்ரல் ஹாலில் அமர்ந்து அரட்டை அடிக்க முடியாமல் ஓடுகிறீர்கள்' என, கிண்டலடிக்கின்றனர்.'நீங்களே, எங்களை பிரதமரிடம் போட்டுக் கொடுத்துவிட்டு, இப்போது பரிதாபப்படுகிறீர்களா' என, பா.ஜ.,வினர், எதிர்க்கட்சி, எம்.பி.,க்களிடம் புலம்புகின்றனர்.

எல்லாமே அமித் ஷா தான்

பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, பாதுகாப்புத் துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தான் விதிமுறைப்படி இரண்டாவது ரேங்கில் இருக்கிறார். அதிகார வரிசை பட்டியலில், மூன்றாவதாக இருப்பவர், உள்துறை அமைச்சர், அமித் ஷா. ஆனால், உண்மையில் மோடிக்கு அடுத்தபடியாக, 'பவர்புல்'லாக இருப்பவர் அமித் ஷா தான்.அமைச்சர் பதவியோடு, பா.ஜ., தலைவர் பதவியிலும் அவர் தான் இருக்கிறார். கட்சியின் செயல் தலைவராக, ஜே.பி.நட்டா, சும்மா பெயருக்குத் தான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கட்சி வேலைகளை எல்லாம், அமித் ஷா தான் கவனிக்கிறார்.கர்நாடகா, கோவா உட்பட பல மாநிலங்களில், காங்., - எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுத்து, அக்கட்சியை ஒரு வழியாக்கி வருகிறார் அமித் ஷா.இன்னொரு பக்கம், பார்லிமென்டின் அனைத்து குழுக்களிலும் கோலோச்சுபவர் அமித் ஷா தான். மற்ற அமைச்சர்களை அழைத்து, அவர்களுடைய துறை எப்படி செயல்படுகிறது எனக் கேட்பதோடு, ஆலோசனைகளையும் வழங்கி வருகிறாராம். இதனால், பிரதமர் மோடி இப்போது, 'டென்ஷன்' இல்லாமல், நிம்மதியாக இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். மோடிக்கு அடுத்து அரியணை ஏறப்போவது யார் என்பது, இப்போது உறுதியாகி விட்டது என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.

'டென்ஷன்' ஆன மம்தா

பார்லிமென்ட் தேர்தலில், பெரும் சறுக்கலை சந்தித்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, இதுவரையிலும், பிரதமர் மோடியை சந்திக்கவில்லை; அவருக்கு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.பிரதமர் கனவில் இருந்த மம்தா, தோல்வியை சகித்துக் கொள்ள முடியாமல், பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும், கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது கட்சி, எம்.பி.,க்களும், பார்லிமென்டில், மத்திய அரசு எது செய்தாலும், அதை எதிர்த்து வருகின்றனர்.கடந்த ஆண்டில், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்ளா' என மாற்ற, மாநில சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு, மத்திய அரசு இதுவரையிலும் அனுமதி அளிக்கவில்லை.இதனால், தன் கட்சி, எம்.பி.,க்களை அழைத்த மம்தா, பிரதமரை சந்தித்து, இது குறித்து வற்புறுத்துங்கள் என, உத்தரவிட்டார். திரிணமுல் காங்கிரஸ், எம்.பி.,க்களும், பிரதமர் மோடியை சந்திக்க, நேரம் ஒதுக்குமாறு கேட்டனர்.பிரதமர் பிசியாக இருக்கிறார் என, பதில் தரப்பட்டது. வெறும், 5 நிமிடம் போதும் என, எம்.பி.,க்கள் சொல்ல, உடனே பிரதமரின், 'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது. விஷயத்தை, மோடியிடம் கறாராக சொல்லி விடுங்கள் என, தன், எம்.பி.,க்களுக்கு உத்தரவிட்டார் மம்தா.திரிணமுல், எம்.பி.,க்கள் மோடியை சந்தித்தனர். தேனீர், ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. 5 நிமிடங்கள் கடந்தன. மோடியோ, எம்.பி.,க்களிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். எம்.பி.,க்களும் பல விஷயங்களை மோடியிடம் பகிர்ந்தனர். இதற்கிடையே, மாநில பெயர் மாற்ற விஷயத்தையும், அவர்கள் பிரதமரிடம் சொன்னார்கள்.ஐந்து நிமிட சந்திப்பு தானே; இவ்வளவு நேரம் என்ன செய்கின்றனர் என, சந்தேகப்பட்ட மம்தா, எம்.பி.,க்களுக்கு விடாமல் போன் செய்தார். ஆனால், யாரும் எடுக்கவில்லை. மம்தா, படு டென்ஷன் ஆனார். ஏற்கனவே, திருணமுல், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பா.ஜ.,வில் சேர்ந்திருக்கும் நிலையில். எம்.பி.,க்களையும் தன் பக்கம் இழுக்க, மோடி முயற்சி செய்கிறாரா என, அவருக்கு சந்தேகம்.பிரதமர் அலுவலகத்திலோ, 5 நிமிடசந்திப்பு, 30 நிமிடங்கள் வரை, ஜாலியாக நடந்ததாம். மோடியை சந்தித்து, சந்தோஷமாக வெளியே வந்த, எம்.பி.,க்கள், பல, 'மிஸ்டு கால்'கள் இருந்ததை பார்த்து, மம்தாவிற்கு போன் செய்து, விஷயத்தைச் சொன்னார்கள். அவர்களிடம், 'பிரதமரிடம் பேசியதை, விலாவாரியாக சொல்லுங்கள்' என, கேட்டு தெரிந்து கொண்டார் மம்தா. ஆனாலும், மம்தாவிற்கு சந்தேகம்தீரவில்லையாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X