தடம் மாறும் மாணவர் சமுதாயம்!

Added : ஜூலை 27, 2019 | கருத்துகள் (2) | |
Advertisement
தடம் மாறும் மாணவர் சமுதாயம்!'சவால்களை எதிர்நோக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; புதியதை கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்; எதையும் கேட்டு, தெளிவு பெறத் தயங்காதவர்கள்; மாறுபட்ட சூழலையும் எதிர்கொள்ளும் தைரியசாலிகள்; மாற்றங்களை மனமுவந்து ஏற்று, சாதனை படைப்பவர்கள்' என, எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர்கள், கல்லுாரி மாணவர்கள்.நிறைய படிப்பவர்கள்; ஒழுக்கம் நிறைந்தவர்கள்;
உரத்த சிந்தனை

தடம் மாறும் மாணவர் சமுதாயம்!

'சவால்களை எதிர்நோக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; புதியதை கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்; எதையும் கேட்டு, தெளிவு பெறத் தயங்காதவர்கள்; மாறுபட்ட சூழலையும் எதிர்கொள்ளும் தைரியசாலிகள்; மாற்றங்களை மனமுவந்து ஏற்று, சாதனை படைப்பவர்கள்' என, எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர்கள், கல்லுாரி மாணவர்கள்.நிறைய படிப்பவர்கள்; ஒழுக்கம் நிறைந்தவர்கள்; மூத்தோருக்கு மதிப்பளிப்பவர்கள்; சக மாணவர்களுடன் ஒன்றிணைந்து, ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர்கள் என்ற எண்ணமும் இவர்கள் மீது இருந்தது.ஆனால், சமீப காலமாக, அவர்களின் செயல்பாடுகளும், பொறுப்பற்ற தன்மைகளும், ஒட்டு மொத்த சமூகத்திற்கே, தலை குனிவை ஏற்படுத்தி

வருகின்றன.கட்டுப்பாடு மிகுந்த பள்ளிக்கல்வியை நிறைவு செய்து, சுதந்திரமான கல்லுாரி கல்விக்குள் காலடி எடுத்து வைக்கும் போது, பறவைகளைப் போல உணரும் மாணவர்கள், கேலி, கிண்டல்களில் ஈடுபடுவது வழக்கம் தான். அது, நம் நாடு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கல்லுாரிகளில் காணப்படும் நிலை.ஆனால், அத்துமீறி, அட்டூழியங்கள் செய்வது, பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது, சக மாணவர்களையே எதிரிகள் போல பாவித்து, வன்முறை வெறியாட்டம் ஆடுவது போன்றவை, கல்லுாரி மாணவர்களுக்கு இலக்கணம் இல்லை.

சமீப காலமாக, கல்லுாரி மாணவர்கள், கடைச்சரக்கு போல, எடுப்பார் கைப்பிள்ளையாக மாறி, குறிப்பிட்ட ஜாதி, 'லெட்டர் பேடு' கட்சிகள் அல்லது அமைப்புகளின் கையாட்கள் போல மாறி, வன்முறையை கையில் எடுத்து, தங்கள் வாழ்வையே சூனியமாக்கிக் கொள்கின்றனர்.


அதற்கு உதாரணமாக, சென்னையில் சமீபத்தில், இரு கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல்; அதில், பட்டாக்கத்திகளுடன் பயணியர் பஸ்சை மறித்து தாக்குதல் நடத்தியது போன்ற, பயங்கர குற்றங்களை குறிப்பிடலாம்.அடுக்கடுக்காக புத்தகங்களை சுமக்கும் கைகளிலும், பைகளிலும், பட்டாக்கத்தியா... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. நாம், இந்தியாவில் தான் இருக்கிறோமா; ஆப்கானிஸ்தான், சோமாலியா, சூடான் போன்ற வன்முறை பிரதேசங்களில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.சின்னஞ்சிறு வயதில், அதிகபட்சம், 19 - 23 வயதிற்குள், பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொள்ளும் அளவுக்கு, அவர்களின் புத்தி செல்கிறது என்றால், அவர்கள் வளரும் களம், அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களை, 'வளைத்தவர்'களின் பின்புலம் போன்றவற்றை, நன்கு விசாரிக்க வேண்டியது அவசியம்.

ஒரு கல்லுாரியில், 2,000 - 3,000 மாணவர்கள் படிக்கின்றனர் என்றால், அதிகபட்சம், 10 - 20 மாணவர்கள் தான், வன்முறை எண்ணம் கொண்டோராக, ஆசிரியர்களின் கட்டளைக்கு பணியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களுடன், நண்பர்கள் என்ற ரீதியில், 50 மாணவர்களை சேர்த்துக் கொண்டால், ஒரு கல்லுாரியில், அதிகபட்சம், 100 மாணவர்கள் தான், கட்டுப்படாதவர்களாக இருப்பர்.பிற மாணவர்கள், கல்வி கற்கும் ஆர்வம், மிகுதியாக இருப்பவர்களாக, ஆசிரியர் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்களாக, தவறு கண்டு அஞ்சுவோராக, பண்பாட்டிலிருந்து சிறிதும் விலகாதவர்களாக இருக்கின்றனர்.


இங்கு நடப்பது போல், ஜாதி, மத, கட்சி மோதல்கள், மேலை நாடுகளின் கல்லுாரிகளில் இல்லை என்றாலும், அங்கும் சில கல்லுாரிகளில், வன்முறை குற்றங்கள் நடக்கின்றன. சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போல், அவ்வப்போது சில மாணவர்கள் நடந்து கொள்வதை, ஊடகங்களில் பார்க்க முடிகிறது.அந்த நாடுகளில், அத்தகைய மாணவர் குற்றங்களுக்கு முக்கிய காரணம், தன் நியாயமான துன்பங்களை பகிர்ந்து கொள்ள, சரியான நபரோ, களமோ இல்லாதது தான் என்கின்றனர். பாசமான பெற்றோர்; அன்பான நண்பர்கள்; அரவணைப்பான சமுதாயம் கிடைக்காதோர் தான், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவர்.எந்த அளவிற்கு திறமைசாலிகளாக, சிந்தனை பலம் கொண்டவர்களாக மாணவர்கள் அறியப்படுகின்றனரோ, அந்த அளவுக்கு, எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக, தீய பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகும் பலவீனமானோர்களாக உள்ளனர்.தமிழ் சமுதாயம், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர், தாங்கள் அரும்பாடு பட்டு சேர்த்த பணத்தில், கல்லுாரிகள் கட்டி, ஏழை மாணவர்கள், நடுத்தர வர்க்கத்து மாணவர்களை படிக்கச் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினர்.உயர்ந்த நோக்கங்களுக்காக துவக்கப்பட்ட கல்லுாரிகள், ஜாதி மோதல், கட்சி வேறுபாடுகளின் பிறப்பிடமாக மாறி வருவது, மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.இப்போதைய பொறியியல், மருத்துவக் கல்லுாரிகளை துவக்கும் தொழிலதிபர்கள், லாபத்தை மட்டுமே, குறிக்கோளாக வைத்து செயல்படுகின்றனர். ஆனால், அந்த காலத்தில், கல்லுாரிகளை துவக்கியோர், சமுதாய நலன், மாணவர் முன்னேற்றம் போன்ற உயரிய நோக்கங்களை மட்டுமே கொண்டிருந்தனர். அதை, இப்போதைய மாணவர் சமுதாயம் சீரழிப்பது, எந்த வகையில் நியாயம்?பொறியியல், மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்க, குறைந்தபட்சம், 7 லட்சம் ரூபாய் முதல், 3 கோடி ரூபாய் வரை ஆகும். ஆனால், சில ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்து, கலை, அறிவியல் கல்லுாரிகளில் படித்து விடலாம். ஒழுங்காக இந்த கல்லுாரிகளில் படித்தால், பொறியியல், மருத்துவ மாணவர்களை விட, உயர்ந்த நிலைக்கு சென்று விடலாம்.

எந்தப் பொருளுமே, விலை குறைவாக இருந்தால், மதிப்பு இருக்காது.


உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மதிப்பு, மிகவும் உயர்ந்தது; ஆனால், விலை குறைவு. அதுபோலத் தான், கலை, அறிவியல் கல்லுாரிகளின் நிலையும்!கல்விக் கட்டணம் குறைவு என்பதை, சாதகமாக எடுத்து, நன்றாக படித்து, உயர்ந்த நிலைக்கு வர வேண்டிய மாணவர்கள், ஜாதிச் சாக்கடையில் மூழ்கி, சக மாணவர்களையே வெட்டி சாய்க்கின்றனர். என்ன அநியாயம் இது?தன் மகன், கல்லுாரியில் படிக்கிறான் என்பது, பெற்றோருக்கு பெருமையான விஷயம். பள்ளிக் கல்வியை கூட, நிறைவு செய்யாத பெற்றோர் பலர், மிகவும் கஷ்டப்பட்டு, தங்கள் பிள்ளைகளை கல்லுாரியில் சேர்த்து, படிக்க வைக்கின்றனர். அவர்களை, வன்முறை மாணவர்கள் ஏமாற்றி, சோகக் கடலில் ஆழ்த்தி விடுகின்றனரே!கல்லுாரிக்குள் வரும் போதே, போதையில் வரும் மாணவர்கள், துாண்டி விடும் நண்பர் கூட்டம், சினிமா கதாநாயகனாக தன்னை கருதும் மாணவர்கள், சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர்.ஒரே கல்லுாரியில் படிக்கும் மாணவர்களே, குழுக்களாக மாறி, அவ்வப்போது லேசாக மோதிக் கொள்கின்றனர்.அதை அறியும் ஜாதித் தலைவர்கள், லெட்டர்பேடு கட்சிகளின் நிர்வாகிகள், அந்த அப்பாவி மாணவர்களை, உசுப்பேற்றி விடுகின்றனர். அவர்களின் வலையில் சிக்கும் மாணவர்கள், படிப்பை மறந்து, தங்கள் வாழ்க்கையையே பாழடித்துக் கொள்கின்றனர்.இது போன்ற குற்றங்களில், பெரும்பாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவர்கள் தான் ஈடுபடுகின்றனர்; தனியார் கல்லுாரி மாணவர்கள் ஈடுபடுவதில்லை என்ற உண்மையும் கவனிக்கத்தக்கது.நாகரிகமற்ற ஆடைகள், பரட்டைத் தலை, காதில் கம்மல், கையில் சங்கிலி, 'ரப்பர் பேண்ட்'கள் என, சினிமா ரவுடிக் கும்பல் நடிகர்கள் போல, சில மாணவர்கள், கல்லுாரி வளாகங்களில் வலம் வருகின்றனர்.அத்தகைய மாணவர்களை கண்டிக்கும் பொறுப்பு உடைய ஆசிரியர்கள், கண்டிக்கும் போது, அவர்களுடன் சண்டையிடுவது, 'தீக்குளித்து விடுவேன்' என, மிரட்டுவது என, நிலைமை மோசமாக உள்ளது.எனினும், எல்லா கல்லுாரி மாணவர்களும் இப்படி இல்லை என்பது ஆறுதலான விஷயம். படித்து முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் உடைய மாணவர்கள், இத்தகைய கும்பலிடம் இருந்து விலகி, நன்றாக படித்து, சிறப்பான இடங்களைப் பிடிக்கின்றனர்.


சரி, இந்த கோளாறை எப்படி சரி செய்வது...கல்லுாரி மாணவர்களும், ஒரு வீட்டின் பிள்ளை தான். அவனுக்கும் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உண்டு. அந்த மாணவனை சரிப்படுத்தும் கடமை, ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் உள்ளது. அவர்களும், அந்த மாணவனின் நடத்தையில் கவனம் கொள்ள வேண்டும்.ஆசிரியர் -- மாணவர் உறவில், இடைவெளி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் விரிசலாகி, யாரும், யாரையும் கண்டு கொள்ளாத நிலை வந்து விடும். எனவே, படிப்பிற்கு அப்பால், மாணவர்களை நண்பர்களாகக் கருதி, அவர்களுக்கான பிரச்னைகளை, தனிப்பட்ட முறையில் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில், ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்.உளவியல் ஆலோசகர்கள், தன்னம்பிக்கை தரும் நிபுணர்கள் என, ஒவ்வொரு கல்லுாரியிலும் சிலரை நியமித்து, வன்முறை எண்ணம் கொண்ட மாணவர்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து, அதற்கேற்ற தீர்வுகளை தருவது அவசியம்.கல்லுாரி வளாகத்திற்குள், மாணவர்களை, 'மூளைச்சலவை' செய்யும், சமூக விரோதக் கும்பல் நுழைவது, காவல் துறை உதவியுடன், தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களை குற்றவாளிகளைப் போல அணுகாமல், அவர்களின் மனநிலைக்கு ஏற்ப, முடிவுகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.


மாணவர்களுடன், வகுப்பாசிரியர்கள் நெருங்கிப் பழகி, நெறிப்படுத்த வேண்டும். ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகளை, அவர்களின் மனங்களில் விதைப்பதற்கு, துளியும் இடம் தராமல், நல்லிணக்கம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.அதற்காக, ஆசிரியர் -- மாணவர் குழுக்களை உருவாக்கி, அவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். கத்தியின்றி, ரத்தமின்றி போர் புரிந்த காந்தி, சுதந்திர போரில் ஈடுபட, மாணவர்களை அழைத்தார். படிப்பைத் துறந்து, காந்தியின் தலைமையில் களமிறங்கி, வாழ்க்கையில் வளம் பெற்றவர்கள் பலர்.காந்திய நெறிமுறையை, இந்த கால மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தீய நெறியில், மாய ஆசைகளுக்கு ஆட்படாமல், தங்களின் தனித் திறனை வளர்த்துக் கொள்ளும் வழி முறைகளில், மாணவர்கள் ஈடுபட வேண்டும். மாணவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க, அனைவரும் இணைந்து வழி காட்டுவோம். மாணவர்களின் மனங்களில் நம்பிக்கையை விதைப்போம்; நல்ல மாணவர்களை அறுவடை செய்வோம்!தொடர்புக்கு:இ - மெயில்: rvsh76@gmail.com முனைவர் ரா.வெங்கடேஷ் உதவி பேராசிரியர்,சென்னை பல்கலைக் கழகம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (2)

Girija - Chennai,இந்தியா
02-ஆக-201913:08:49 IST Report Abuse
Girija இந்த ரூட் தல கூட்டம் அந்த ஐந்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர் குடும்பங்கள் உண்மையான தமிழ்மக்கள் கிடையாது, பிழைப்பிற்காக பிரமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்த குடியேறிகள். சென்னையில் அரசு நிலம் நடைபாதை ரயில்வே ட்ராக் நெடுஞ்சாலை சென்று ஆக்கிரமித்து குடியேறியவர்கள், இன்று அரசு பட்ட நிலம் மாடி வீடு போன்றவைகளுக்கு சொந்தக்காரர்கள். உதாரணம் கண்ணகி நகர் துரைப்பாக்கம் , போலீஸ் பகலிலேயே தனியாக போக அஞ்சும் இடம். பெரும்பாலோருக்கு குற்ற செயல்கள் மற்றும் அரசியல் தான் தொழிலே. இவர்களை போல் அனுதினமும் சென்னைக்கு வரும் பிற மாநிலத்தவர்களுக்கு இவர்கள் வழிகாட்டி தங்கள் ஜோதியில் இணைத்துகொள்வார்கள். இவர்களை ஒட்டு வங்கிக்காக வளர்த்துவிட்டது அரசும் அரசியல் கட்சிகளும். இவர்களிடம் பி சி எம் பி சி எஸ் சி போன்ற ஜாதி சர்டிபிகேட் எல்லாம் இருக்கும் . இவர்களும் பேசும் செம்மொழி காதில் ஈயத்தை ஊற்றுவதுபோல் இருக்கும். இவர்கள் தான் ஜாலிக்காட்டு நெடுவாசல் மெரினாவில் போராட்டம் நிகழ்த்த மூல காரணம். எப்படி இத்தனை பேர் குவிந்தனர் என்று அரசியல் கட்சிகள் ஒன்றும் தெரியாதது போல் நடித்தனர். இந்த ஆக்கிரமிப்பு குடியேறிகளை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தை ஒழிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
29-ஜூலை-201910:52:40 IST Report Abuse
Ganesan.N கல்வி வியாபாரம் என்று ஆகி விட்டது. அரசாங்கமே கல்வி கொடுப்பது கட்டாயம் என்ற சூழ் நிலை வராத வரைக்கும் இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடும். தனியார் கல்வி நிறுவனங்கள் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றன. கல்வி வளாகங்களில் அரசியல் நுழைவதை தடை செய்ய வேண்டும். மாணவர்களின் திறமையை ஊக்குவிக்க கல்வி நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X