பதிவு செய்த நாள் :
Yediyurappa,Wins,Karnataka,Trust Vote,முதல்வர்,எடியூரப்பா,அரசு, வெற்றி

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது. ஓட்டெடுப்பு நடத்தி முடித்த பின் சபாநாயகர் ரமேஷ் குமார் தன் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து பா.ஜ. மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் 14 மாதங்களாக நடந்து வந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் -- காங். கூட்டணி அரசுக்கு இம்மாத துவக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. காங். மற்றும் மதச்சார்ர்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரும் ராஜினாமா செய்தார். இதையடுத்து 23ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பா.ஜ.வை சேர்ந்த எடியூரப்பா 25ல் முதல்வரானார்.
ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் வஜுபாய் வாலா எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்த பின் முதல் முறையாக கர்நாடகா சட்டசபை நேற்று காலை 11:00 மணிக்கு கூடியது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் எடியூரப்பாவுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் அழைப்பு விடுத்தார்.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் தாக்கல் செய்தார்.

அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ம.ஜ.த. சட்டசபை குழு தலைவர் குமாரசாமி உட்பட பலர் பேசினர். இறுதியில் பதிலளித்து பேசிய முதல்வர் எடியூரப்பா ''கட்சி பேதமின்றி செயல்படுவேன். பழிவாங்கும் அரசியல் செய்ய மாட்டேன். மக்கள் நலனுக்காக பாடுபடுவேன். நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஓட்டு அளியுங்கள்'' என்றார்.
இதன் பின் சபாநாயகர் ரமேஷ்குமார் நடத்திய குரல் ஓட்டெடுப்பில் எடியூரப்பாவின் தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் பெரும்பான்மையை நிரூபித்ததாகவும் சபாநாயகர் அறிவித்தார்.பின் ''வரிசையாக நிற்க வைத்து டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமா'' என சபாநாயகர் கேட்டார். ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து ''ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது'' என சபாநாயகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரியில் குமாரசாமி தாக்கல் செய்திருந்த பட்ஜெட் மீது அக்டோபர் வரையிலான மூன்று மாதங்களுக்கான நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சித்தராமையா 2020 மார்ச் வரை எட்டு மாதங்களுக்கு தாக்கல் செய்யும்படி வலியுறுத்தினார்.அதை எடியூரப்பா ஏற்கவில்லை.

பின் நிதி மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் குமாரசாமி தயாரித்திருந்த துணை பட்ஜெட் காங்கிரஸ் உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
கர்நாடக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக விவாதம் இல்லாமலேயே துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.பா.ஜ.வின் 105 எம்.எல்.ஏ.க்களும், ம.ஜ.த. மற்றும் காங்கிரசின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் நேற்று ஆஜராகியிருந்தனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் அடுத்த ஆறு மாதங்களுக்கு பா.ஜ. அரசுக்கு பாதிப்பில்லை.
ஒரு வேளை 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் எட்டு இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ. உள்ளது.முதல் கட்டத்தில் 'பாஸ்' ஆன முதல்வர் எடியூரப்பா இரண்டாவது கட்டமான அமைச்சரவை விஸ்தரிப்பில் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. புதிய மந்திரிகள் நியமனம் குறித்து பா.ஜ. மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

சபாநாயகர் ராஜினாமா

காங்கிரசை சேர்ந்த கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் தான் நினைத்த காரியங்களை திட்டுமிட்டு செயல்படுத்துபவர். காரியத்தை சாதிக்கும் வரை விட மாட்டார்.ம.ஜ.த. தலைவர் தேவ கவுடா 1994ல் கர்நாடக முதல்வராக இருந்த போது ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி வகித்தார். தேவகவுடாவின் மகன் குமாரசாமி கடந்த ஆண்டு முதல்வரான போது ரமேஷ்குமார் இரண்டாவது முறையாக சபாநாயகர் ஆனார். கர்நாடகாவில் நடந்த திடீர் அரசியல் திருப்பங்களை தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது. நம்பிக்கை தீர்மானம் மற்றும் நிதி மசோதா ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் முடியும் வரை காத்திருந்த சபாநாயகர் ரமேஷ் குமார் தன் பதவியை ராஜினாமா செய்தார். புதிய சபாநாயகருக்கான தேர்தல் நாளை காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இன்று பகல் 12:00க்குள் சட்டசபை செயலர் விசாலாட்சியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இரு எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, மகேஷ் குமடஹள்ளி ஆகியோர் தங்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அதில் 'எங்களை தகுதி நீக்கம் செய்வதாக இருந்தால் ஏழு நாட்களுக்கு முன் 'நோட்டீஸ்' அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் மூன்று நாளுக்கு முன் தான் நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் நடுநிலை தவறி உள்ளார். நெருக்கடியால் இந்த அவசர முடிவை எடுத்து உள்ளார்' என குறிப்பிட்டுள்ளனர்.இவர்களுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கரும் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
30-ஜூலை-201904:15:48 IST Report Abuse

blocked userகுமாரசாமியை முன்னாள் நிறுத்தி காங்கிரஸ் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சம் அல்ல. காங்கிரஸ் ஊழல்கள் சீக்கிரம் வெளிச்சத்துக்கு வரும்.

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-ஜூலை-201903:48:46 IST Report Abuse

skv srinivasankrishnaveniyaayaa இனிமேல் மழை கொட்டும் காவிரிநீர் தமிழ்நாட்டுக்குபாய்ந்தோடிவந்துடும் கர்நாடகாவுக்கு மோட்ஷம்கிடைச்சல் ok

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
30-ஜூலை-201900:55:50 IST Report Abuse

அன்புபதினைந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு சரியில்லை என்று கூறி தாங்களாகவே ராஜினாமா செய்த கதை இப்போது தான் நடந்துள்ளது. இந்த பதினைந்து பேரும், மக்களுக்காக பணியாற்ற வந்த சொக்க தங்கங்கள் என்று யாரும் நம்ப தயார் இல்லை. அவர்கள் எதற்காக பதவியை விற்றார்கள் அல்லது ராஜினாமா செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இது ஜனநாயக படுகொலை.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X