ஆடி மாதத்துக்கே உரிய காற்று பலமாக வீசி கொண்டிருந்தது. மித்ரா வீட்டு மாடியில், சித்ராவும் இணைந்து, 'ஸ்நாக்ஸ்' சாப்பிட்டவாறே அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.
''பிளாஸ்டிக்' ஒழிப்புல, இப்படியாயிருச்சே...'' ஆரம்பித்தாள் மித்ரா.
''ஏன்., என்னாச்சு. 'ரெய்டு' நடந்துட்டுத்தானே இருக்கு''
''டவுன்ல பரவாயில்ல. வியாபாரிகள் மத்தியில், ஓரளவுக்கு விழிப்புணர்வு வந்திருக்கு. ஆனா, கிராமப்புறங்களில், ரெய்டு போற அதிகாரியை மிரட்றாங்களாம்,''
''அட.. அதெங்க நடந்தது?''
''நம்ம மங்கலத்தில்தான். ரெய்டு போன, பி.டி.ஓ., வை கூட்டமா சுத்தி நின்னு சத்தம் போட்ருக்காங்க. இதே மாதிரி அவிநாசிக்கு பக்கத்தில, ஒரு கிராமத்தில், அதிகாரியை முற்றுகையிட்டு பிரச்னை பண்ணிட்டாங்க. இதனால, ரூரல் பகுதியில், ரெய்டில், சுணக்கம் ஏற்பட்டிருக்கு,''
''மித்து... வியாபாரிகளை சமாளிக்க, அதிகாரிங்க ஒரு ஐடியா வச்சிருக்காங்களாம். அது என்னன்னா, 'கமர்ஷியல் டேக்ஸ் ரெய்டு' நடத்தறதாம். அதனால, கலெக்டர்கிட்ட பேசி, போலீஸ் பாதுகாப்பு வாங்கிட்டு, பண்ற ஐடியா இருக்காம்,''
அப்போது, சித்ராவின் மொபைல் போன் ஒலிக்கவே, ''ம்..ம்.. சொல்லுங்க. வெரிகுட்... நல்ல விஷயம்தான்,'' பேசிவிட்டு,
அணைத்தாள்.
''என்ன, நல்ல விஷயங்க்கா?''
''ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, கே.வி.ஆர்., நகரில், மூணு மரம் வெட்டி சாய்ச்சிட்டாங்க. இதை தெரிஞ்சிகிட்ட, பசுமை ஆர்வலர்கள், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததில் எப்.ஐ.ஆர்., பதிவாயிடுச்சு. இந்த சம்பவம் ஒரு பாடமா இருக்கட்டும்னு, கமிஷனர் எச்சரிக்கையும் செஞ்சாரு.''
''இதனால, மரம் வெட்டினவங்க, அதிர்ச்சியடைஞ்சு, பசுமை ஆர்வலர்களிடம் பேசினாங்களாம். அவங்க கொடுத்த ஐடியாவின்படி, 200 மரக்கன்றுகள் நட்டுட்டாங்க. எப்படியோ, மரத்தை நல்லா வளர்க்கணும்.''
''உண்மையிலயே நல்ல விஷயங்க்கா.. ஆனா, இப்ப நான் சொல்லப்போறது, வேதனையான மேட்டர்,''
''என்னடி, பெரிய பில்டப் பண்றே. சொல்லு, பார்க்கலாம்''
''நார்த் தாலுகாவுல, புரோக்கர் ஆதிக்கம் நாளுக்கு நாள் ஓவராயிட்டே வருதாம். தாசில்தார் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, புரோக்கர் தான் எல்லா வேலையும் பார்க்கறாங்களாம்,''
''ெஹட் குவார்ட்டர்ஸில் இருந்துகிட்டு, இப்டி பண்றது, கலெக்டர் காதுக்கு யாராவது கொண்டு போனா சரிதான். ஆனா, யார் சொல்றது, இங்க எல்லாருமே 'உள்ளடி' வேலையை, நல்லாவே பண்றாங்க.''
''மித்து, தென்னந்தோப்பு வெச்சிருக்கிறவங்களுக்கு, நுாறு நாள் வேலை திட்டம் ரொம்ப 'யூஸ்புல்'லா இருக்குதாம். ஏதாவது தெரியுமா?''
''ஆமாங்க்கா. தோப்பில், வட்ட பாத்தி கட்டலாம்னு, நுாறு நாள் திட்டத்துக்கு அப்ளை பண்றாங்க. ஊராட்சி செக்ரட்டரிகளும், ரொம்ப 'ஸ்பீடா' தோப்பு ஓனர் குடும்பத்துல இருக்கற எல்லாரோட அக்கவுன்ட் நம்பர வாங்கி அதுலயும் 'பாதி' தொகையை 'கிரெடிட்' பண்ணிடறாங்க'' அதனால, இந்த திட்டத்துக்கு ஏகப்பட்ட கிராக்கியாம்,'' என்றாள் சித்ரா.
மித்ராவின் அம்மா கொண்டு வந்த காபியை குடித்து விட்டு, அரட்டையை தொடர்ந்தனர்.
''அக்கா... போலீஸ் குவாட்டர்ஸில், ஓட்டல் நடக்குதாம். உண்மையா?''
''ஆமாண்டி மித்து, கோர்ட் வீதியில் உள்ள போலீஸ் குவாட்டர்ஸில், இடித்து அகற்ற வேண்டிய நிலையில், மூன்று வீடுகள் உள்ளன. கட்டுமான பணிக்காக, அவற்றில் குடியிருந்த போலீசார் அதைக்காலி செய்தனர். ஆனால், அதில் ஒரு வீட்டில், தற்போது தள்ளுவண்டி டிபன் கடைக்கு சமையல் செய்யும் பணி ஜோராக
நடக்குதாம்.''
''கவனிக்கிற விதத்தில் கவனிச்சு, வண்டி ஓட்டறாங்க போல...'' என, சிரித்த மித்ரா, ''போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் விஷயம் ரொம்ப பரபரப்பா இருக்காமே,'' கேள்வி கேட்டாள்.
''யெஸ்டி... மித்து! 'டாலர் சிட்டி' இப்ப இருக்கிற நிலைமையில், இங்க இருந்து வெளிய போன ஒருவர், ஐ.எஸ்., பிரிவுக்கு குறிவைச்சு வேலை செஞ்சாரு. அந்த இடம் கிடைக்காததால், எனக்கு 'நார்த்'தாவது, கொடுங்கன்னு அடம் பிடிச்சாராம்,''
''அது விஷயத்தில், பாதி வெற்றியும் கண்டுட்டாராம். போலீஸ் வட்டாரத்தில், 'நார்த்' ஸ்டேஷன் என்றால், தங்க முட்டையிடும் வாத்து என்ற 'டாக்'தான் இப்போ வைரலாம்,''
''அக்கா... இதேபோல, '....புரத்திலயும் ஒரு சம்பவம் சத்தமில்லாமல் நடந்திருக்காம்,''
''அது என்னடி விஷயம்?''
''சப்-டிவிஷன் அதிகாரி, சில மாதங்களுக்கு முன், பக்கத்திலுள்ள மஞ்சள் நகருக்கு டிரான்ஸ்பர் ஆனார். அவருக்கு பதிலா, மூணு மாசத்துக்கு முன்னாடி, கோவை மாவட்டத்தையே உலுக்கிய மேட்டரில் சிக்கி, வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர், வந்திருக்காராம்,''
''சரிடி.. இதிலென்ன இருக்கு?''
''மஞ்சள் நகருக்கு போனவர், 'சார்ஜ்' எடுக்கலையாம். 'லீவில்' தாராபுரத்தில் மையம் கொண்டுள்ளாராம். மாவட்ட முக்கிய பிரமுகரின் ஆசியுடன், மீண்டும், பெவிலியன் திரும்ப, 'வேலு'வை வணங்கி, 'மணி'க்கணக்கில், அவரோட ஆபீசில் தவமாய் தவமிருக்கிறாராம்,''
''இதிலென்ன சுவாரசியம்னு கேட்டீங்கன்னா... 'பொருள்' ஆட்சி செய்யும் ஊரிலிருந்து வந்தவருக்கு, 'ஜெய'மான பிரமுகர் ஆசியாம். இதை தெரிஞ்சுகிட்டா, நம்ம மாவட்டத்துக்காரரு, அதெப்படி அவரை இங்கே அனுப்பலாமுன்னு, கோவப்பட்டாராம். இப்படி, ரெண்டு வி.ஐ.பி.,க்கு மத்தியில, '...புரம்' சப்-டிவிஷன் சிக்கிட்டு, படாதபாடு படுதாம்,'' என்று விளக்கினாள் மித்ரா.
''அட... சூப்பர் மேட்டரை, பக்காவா சொல்றயே. பேஷ்... பேஷ்.. ரொம்ப நன்னாயிருக்கு'' என்று மித்ராவின் முதுகில் தட்டி கொடுத்த சித்ரா, ''அத்திவரதரை தரிசனம் செய்யப்போனப்ப நடந்தது தெரியுமா?'' என்றாள்.
''ம்...ஹூம்''
''அத்திவரதர் கோவிலில் தரிசனம் செய்ய, பெருமாநல்லுாரை சேர்ந்த ஆளுங்கட்சிக்காரங்க, 'நார்த்' முக்கியபுள்ளிகிட்ட சொல்லி, சிபாரிசு லெட்டர் வாங்கிட்டு போனாங்களாம். ஆனால, அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, அதை வாங்கி கிழிச்சு குப்பையில்
போட்டுட்டாராம்,''
''இப்படி, ஆளுங்கட்சி ஆட்கள்கிட்டயே, பாரபட்சம் காட்டுறாங்க. நடப்பது ஜெ., ஆட்சியா? இல்லா வேற ஆட்சியா? என புலம்பி, தங்களோட ஆதங்கத்தை ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பரப்பிட்டு இருக்காங்களாம்,''என்று கூறி சிரித்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE