குன்னுார்:குன்னுார் சிற்றாறுகளில் கழிவு கலக்காமல் துாய்மைப்படுத்தும் ஆய்வு பணி துவங்கியது.
குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், நீரோடை மற்றும் சிற்றாறுகளாக பெருக்கெடுத்து பவானி ஆற்றில் கலக்கிறது. அதில், கிருஷ்ணாபுரம் முதல் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் குப்பை கொட்டியதால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன், தனியார் நிதி உதவி பெற்று, 'கிளீன் குன்னூர்' அமைப்பு மூலம் முதற்கட்ட தூய்மை பணி நிறைவு பெற்றது.மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் பெருமளவில், ஆற்றில் குப்பை கொட்டுவது குறைந்து வருகிறது. மேலும், மார்க்கெட்டிலிருந்து குப்பை கொட்டாமல் இருக்க வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சிறு வியாபாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 'பென்சிங்' அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. எனினும், குன்னுாரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் கடைகளின் கழிவுகள் இந்த ஆறுகளில் கலப்பது தடுக்க முடியவில்லை.இந்நிலையில், இந்த முயற்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஆற்றில் கழிவுகள் கலக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதன்படி ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி, குன்னுார் நகராட்சி பொறியாளர் பாலமுருகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு பணியை துவக்கினர்.இதில், ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கான மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கழிவுகள் சுத்திகரிப்பு செய்யும் திட்டத்திற்கான அளவீடு பணி நடந்தது. இதில், நகராட்சி ஊழியர்கள், 'கிளீன் குன்னுார்' அமைப்பினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE