சபை நேரம் நீட்டிப்பு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு| Dinamalar

சபை நேரம் நீட்டிப்பு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Added : ஆக 01, 2019 | கருத்துகள் (2)
Share

புதுடில்லி, 'மோட்டார் வாகன மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக, ராஜ்யசபாவின் அலுவல் நேரத்தை நீட்டிக்க வேண்டும்' என, பார்லி விவகாரத்துறை இணையமைச்சர், முரளிதரன் கூறியதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 'பார்லிமென்ட் என்ன, மசோதாக்களை நிறைவேற்றும் தொழிற்சாலையா' என, காங்., கேள்வி எழுப்பியது.
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மீது, ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது, "வழக்கமான நேரத்துக்கு மேலாக, சபை அலுவலை நீட்டிக்க வேண்டும்," என, அமைச்சர், முரளிதரன் கூறினார்.
இதற்கு காங்., மூத்த தலைவர், ஆனந்த் சர்மா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஒவ்வொரு நாளும், சபையின் அலுவல் நேரத்தை நீட்டித்துக் கொண்டே இருப்பது சரியல்ல. இந்த சட்ட மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
அதே நேரத்தில், மசோதாக்கள் என்பது, மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியவை. அது தொடர்பாக விவாதம் நடத்தி, முழுமையாக ஆய்வு செய்தே நிறைவேற்ற வேண்டும். பார்லிமென்ட் என்ன, மசோதாக்களை, சட்டங்களை நிறைவேற்றும் தொழிற்சாலையா.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து, முரளிதரன் கூறியதாவது:
பல்வேறு முக்கிய மசோதாக்களை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதற்காகத்தான் சபையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. அதிக நேரம் பணியாற்றுவது, மசோதாக்களை நிறைவேற்றுவது ஒன்றும் பாப செயல் அல்லவே.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆனந்த் சர்மா மற்றும் மற்ற கட்சிகளின், சில, எம்.பி.,க்கள் சபையின் அலுவல் நேரத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
"இந்த மசோதாவை மீது இன்று விவாதித்து முடிவெடுக்க வேண்டும். அதனால், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்," என, அவை முன்னவரான, தன்வார்சந்த் கெலாட் வலியுறுத்தினார்.
அதையடுத்து, அவை நேரம் நீட்டிக்கப்பட்டு, விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X