விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சியில் நடக்கும் தணிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. போலி பில் போட்டு ஊராட்சி நிதி முறைகேடுகளை தடுக்க சிறப்பு தணிக்கை குழு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 450 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சிகள் துறை சார்பில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய போதிய நிதி அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததை சாதகமாக்கி ஊராட்சி செயலாளர்கள் சிலர் போலி பில்கள் தயாரித்து ஊராட்சி நிதியை முறைகேடு செய்வதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு பி.டி.ஓ.,க்களும் துணைபோவதாக துறை அலுவலர்களே கூறுகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் அயன்நத்தம்பட்டி ஊராட்சி நிதியில் முறைகேடுகள் செய்தது தொடர்பாக ஊராட்சி செயலாளர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரை போன்று பல்வேறு ஊராட்சி செயலாளர்கள் செலவினபட்டியல், ரொக்கப்புத்தக பதிவுகள் இன்றி ஊராட்சி நிதியை செலவிட்டு வருகின்றனர். ஊராட்சி ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் அவர்களது ஊதியத்தை தங்கள் கணக்கில் வரவு வைப்பதாகவும் புகார் எழுகிறது.
ஊராட்சி செயலர்கள் குடிநீர் வசதி, வீட்டு தீர்வை போடுவது உள்ளிட்டவற்றில் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் குடிநீர் உடைப்பு ஏற்படுவதாகு கூறி கணக்கு காட்டியும் முறைகேடு செய்கின்றனர். இதற்காக ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் தணிக்கையிலும் உண்மை நிலை இருப்பதாக தெரியவில்லை. முறைகேட்டை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இது போன்ற முறைகேட்டை முழுமையாக தடுக்க ஊராட்சிகளின் வரவு, செலவுகளை மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இதற்காக ஊராட்சிக்கு ஒரு சிறப்பு தணிக்கை குழுவை அமைத்து வரவு செலவு கணக்குகளை மாதம் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.ஆளையே காணோம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், தெருவிளக்குகள், ரோடு போன்ற அடிப்படை பிரச்னைகள் ஏராளம் . உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் வாலாட்டம் அதிகமாக உள்ளது. தெருவிளக்கு எரியவில்லை என்றால் கூட ஊராட்சி செயலாளரிடம் கூறலாம் என்றால் அவர்களை ஆளையே காணோம். சிலர் அலைக்கழிக்கின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக பேசுபவர்கள். அவர்கள் இல்லாததால் ஊராட்சி நிதி என்ன ஆகிறது என தெரியவில்லை. சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைத்து ஆய்வு செய்வது அவசியமாகிறது.போத்திராஜ், தனியார் ஊழியர், விருதுநகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE