திண்டுக்கல் : ஏழு ஆண்டாக மழையின்றி நிலத்தடி நீர் வற்றிப்போனதால் நடப்பாண்டு பருவமழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
நிலக்கோட்டை பள்ளப்பட்டி கிராமம் பொன்னன்குளம் கண்மாய் விவசாயிகள். மஞ்சளாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் அமைந்துள்ளது பொன்னன்குளம் கண்மாய். மாவூர் அணை வரத்து கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகிறது. 35 ஏக்கர் பரப்பளவு கண்மாய் மூலம் 40 ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. கண்மாய் நிரம்பும் பட்சத்தில் 75 கிணறு மற்றும் 20 போர்வெல்கள் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி பெறும். அதனை சுற்றியுள்ள கிராமங்களான கல்லடிப்பட்டி, முனியாண்டிபுரம், தாதன்குளம், மீனாட்சிபுரம் பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர்.கடந்த ஏழு ஆண்டாக மழையின்றி கண்மாய் வறட்சிக்கு உள்ளாகி வருகிறது. இதனால் விவசாய பரப்பும் சுருங்கி வருகிறது.
நடப்பாண்டு குடிமராமத்தின் ரூ.25 லட்சத்தில் துார்வார நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. கரை பலப்படுத்துதல், வரத்துக்கால்வாய் துார்வாருதல், பாசனமடை மறு கட்டுமானம், பாசன வாய்க்காலை சிமென்ட் வாய்க்காலாக மாற்றும் பணிகள் நடக்கிறது.
பொன்னன்குளம் பாசன கண்மாய் சங்க தலைவர்: ஏ.செல்லத்துரை கூறும்போது, ''கடந்த ஏழு ஆண்டாக மழையின்றி விவசாய நிலங்கள் காய்ந்து வருகிறது. கல்லடிப்பட்டி ஊரில் அனைவரும் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் மழையின்றி கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குடிமராமத்தில் பணிகளை விவசாயிகள் பங்களிப்போடு மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே பெய்த மழையில் மண்வளத்தை மேம்படுத்தும் உளுந்து, கடலை பயிரிட்டுள்ளோம். வான்மழை ஏமாற்றாமல் இருந்தால் நெல் பயிரிட தயாராக உள்ளோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE