சென்னை:தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் விலை, இம்மாதம், 62 ரூபாய் குறைந்து, 590.50 ரூபாயாக உள்ளது.
'இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' ஆகிய, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும்,கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதம்தோறும், காஸ் சிலிண்டர் விலையில், மாற்றம் செய்கின்றன. அதன்படி, தமிழகத்தில், ஜூலை மாதம், வீட்டு சிலிண்டர், 652.50 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம், அதன் விலை, 62 ரூபாய் குறைந்து, 590.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அந்த விலைக்கு, வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்கியதும், அவர்களின், வங்கி கணக்கில், மத்திய அரசு வழங்கும், மானிய தொகை செலுத்தப்படும். மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், வீட்டு சிலிண்டர் விலை, 546.50 ரூபாய்; டில்லியில், 574.50 ரூபாய்; மேற்கு வங்கம், கோல்கட்டாவில், 601 ரூபாய் என்றளவில் உள்ளது.தமிழகத்தில், ஜூலையில், 1,249 ரூபாய்க்கு விற்பனையான, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, இம்மாதம், 126 ரூபாய் குறைந்து, 1,123 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.