பொது செய்தி

தமிழ்நாடு

உழைக்க மனமிருந்தால் முயல் வளர்ப்பில் 'அள்ளலாம்': வழிகாட்டுகிறார் சாதனை இளைஞர்

Updated : ஆக 02, 2019 | Added : ஆக 02, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
முயல் வளர்ப்பு, சாதனை இளைஞர்

ஆனைமலை: விவசாயம் சார்ந்த தொழில் செய்து சம்பாதிக்க, நிலமோ, தென்னந்தோப்போ தேவையில்லை; வீட்டு மாடியில் கொஞ்சம் இடம் இருந்தால் போதும், குறைவில்லாமல் சம்பாதிக்கலாம் என, சாதித்து வழிகாட்டுகிறார் இளைஞர்.

ஆனைமலை அடுத்த ஒடையகுளம் சுப்பையா நகரை சேர்ந்தவர் சுரேந்திரன், 34; ஐ.டி.ஐ., படித்து விட்டு வீடு கட்டுமான பணி ஒப்பந்ததாரராக பணியாற்றுகிறார். அவரது வீட்டு மாடியில் கொட்டகை அமைத்து, முயல்கள் வளர்த்து இறைச்சிக்கும், வளர்ப்பு பிராணியாகவும் விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்.

முயல்கள் வளர்ப்பு குறித்து, சுரேந்திரன் பகிர்ந்து கொண்டதில் இருந்து...விவசாயம் சார்ந்த ஏதேனும் வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமென்பது ஆசை. இதை நிறைவேற்ற முயல்கள் வளர்க்க திட்டமிட்டேன்.கொடைக்கானல் மன்னவனுாரில் உள்ள, மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோமங்கள் ஆராய்ச்சி மையத்தில், முயல்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்றேன். கொட்டகை அமைத்து, நான்கு ஆண்டுகளாக முயல்கள் வளர்க்கிறேன்.


முயல் வளர்ப்பு


வீட்டு மாடியில், 800 சதுரஅடியில், 80 ஆயிரம் ரூபாய் செலவிட்டு, மழைநீர் புகாத வகையில் கொட்டகை அமைத்து, காற்றோட்டம் இருப்பதற்காக, நான்கு புறமும் பசுமைக்குடில் வலை அமைக்கப்பட்டது. ஒரு யூனிட் முயல்கள் வளர்க்க, ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் தேவைப்படுகிறது. ஒரு யூனிட்டுக்கு தலா, 1.5 அடி நீளம், அகலம் உள்ள பத்து கூண்டுகள் தேவை. குட்டி ஈனும் முயல்களை தனியாக பராமரிக்க, நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலத்தில், இரண்டு கூண்டுகள் தேவை. முயல்களின் கால்கள் சிக்காமல் இருக்க கூண்டுகள், 1.2 அங்குலம் இடைவெளியுள்ள வலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. பத்து கூண்டுகளுக்கு, 15 ஆயிரம், குட்டி ஈனும் முயல்களுக்கான இரண்டு கூண்டுகளுக்கு, ஐந்தாயிரம் ரூபாய் செலவாகிறது.தற்போது, மாடியில், 15 யூனிட்டுகள் அமைத்து உள்ளேன். முயல்கள் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி வந்து, வளர்க்கிறேன். முயல் வளர்ப்புக்கு தற்போது, கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மானியத்துடன் கடன் வழங்குகிறது.


உணவு முறை


காலையில் முயல்களுக்கு, அடர் தீவனமும், மாலையில் பசுந்தாள் தீவனமும் வழங்கப்படுகிறது. காலையில், கம்பு, ராகி, அரிசி, மக்காச்சோளம், கோதுமை தலா, ஒரு கிலோ எடுத்து, 50 கிராம் கடலை புண்ணாக்கு சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீரில் கலந்து முயல்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாலையில், அறுகம்புல், குதிரை மசால், வேலி மசால், கீரை வகைகளும்; மாதம் இரண்டு முறை, கோ - 4 புல்லும் கொடுக்கப்படுகிறது. இது தவிர, வேறு உணவுகள் வழங்கப்படுவது இல்லை.


பாராமரிப்பு முறை


முயல்களின் சிறுநீரில் அம்மோனியம் அதிகமாக இருக்கும். இதனால், சிறுநீரால் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க, இரண்டு அடி உயரத்தில் கூண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. முயல்களுக்கு நோய் பாதிப்புகள் அதிகமாக ஏற்படாது. இதனால், நோய் மேலாண்மை எளிது.முயல்கள் வளர்ப்புக்கு, காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் வேலை செய்தால் போதும். கழிவுகளை அப்புறப்படுத்தி, உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும்.


உற்பத்தி பெருக்கம்


வொயிட் ஜெயின்ட், பிளாக் ஜெயின்ட், கேட் ஜெயின்ட், நியூசிலாந்து வொயிட் உள்பட இந்தியாவில், 42 வகையான முயல்கள் வளர்க்கப்படுகிறது. நான், 11 வகைகள் வளர்க்கிறேன். இறைச்சிக்காகவும், வளர்ப்பு பிராணியாக வளர்க்கவும் முயல்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முயல், 12 ஆண்டுகள் வரையில் வாழும். தொப்பி, 'கிளவுஸ்' உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்க முயல்களின் ரோமங்கள் பயன்படுகிறது.ஆண்டு முழுவதும் முயல்கள் இனப்பெருக்கம் செய்யும்; ஒரு முறை இனப்பெருக்கம் செய்தால், ஒரு முயல் எட்டு குட்டிகள் வரை ஈனும். புதியதாக பிறந்த குட்டிகள் ஒரு மாதம் தாயுடன் இருக்கும், ஒரு மாதம் தனியாக வளரும். அதன்பின், குட்டிகள் இனப்பெருக்கம் செய்ய தயாராகும்.


வருமானம்


செல்ல பிராணியாக வளர்க்க பயன்படும், 40 - 70 நாட்கள் வயதுள்ள ஒரு முயல், 250 - 350 ரூபாய்க்கு விற்பனை நிலையத்துக்கு விற்கப்படுகிறது. 70 - 110 நாட்கள் மற்றும், 110 நாட்களுக்கு மேலுள்ள ஒரு முயல் அதன் வகையைப் பொருத்து, இறைச்சி, ரோமத்துக்காக, 800 - 3,000 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. இறைச்சிக்கான முயல்கள், 90 நாட்களில் தயாராகிறது. சமைப்பதற்காக சுத்தம் செய்யப்பட்ட முயல் கறி ஒரு கிலோ, 500 ரூபாய்க்கும்; உயிருடன் ஒரு கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோவை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு நட்சத்திர மற்றும் பெரிய ஓட்டல்களுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது.90 நாட்களுக்கு ஒரு முயலை வளர்த்து விற்பனைக்கு அனுப்ப, 280 ரூபாய் செலவாகிறது, 220 வருமானம் கிடைக்கிறது. 90 நாட்களில் ஒரு யூனிட் மூலம், 24 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.


கோழித்தீவனம்


முயல்களின் கழிவுகள் கோழிகளுக்கு சிறந்த தீவனமாக உள்ளது. பத்து முயல்கள் வளர்த்தால் அதன் கழிவுகளை வைத்து, ஐந்து கோழிகளுக்கு தீவனம் கொடுக்கலாம்.ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வோர் முயல்கள் வளர்த்து, கோழிகளையும் வளர்க்கலாம். ஒரு லோடு முயல் கழிவு, ஏழாயிரம் ரூபாய்க்கும், தோல் ஒன்று, 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மாடியில் இடம் இருந்தால், உழைக்க மனமிருந்தால் முயல்கள் வளர்ப்பில் வருமானம் ஈட்டலாம்.இவ்வாறு, அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-201915:04:54 IST Report Abuse
நக்கல் வளர்ப்புக்கு முயல் வளர்த்தால் புரிகிறது, உணவுக்கு??? தமிழ்நாட்டில் எல்லாவற்றுக்கும் திருக்குறளை உதாரணம் காட்டும் இவர்கள் அவர் எழுதிய புலால் மறுத்தல் கீழே வரும் 10 குறளை ஏன் பின்பற்ற மறுக்கிறார்கள்...
Rate this:
Share this comment
NO-ONE - ,
04-ஆக-201900:15:17 IST Report Abuse
NO-ONEஆமா இவரு இருக்கிற 1330 குறளையும் ஃபாலோ பண்ணி வாழரார்.....
Rate this:
Share this comment
Kumar Senthil - Raleigh,யூ.எஸ்.ஏ
09-ஆக-201922:07:42 IST Report Abuse
Kumar Senthilஅவுரு நல்லதை சொல்லுறாரு முடித்தால் கடைப்பிடிப்போம் இல்லையென்றால் பேசாமல் இருப்போம். வாழ்க வளமுடன்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஆக-201922:41:57 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல கட்டுரை... ஜாக்கிரதை, ஒரு சிலருக்கு முயலின் ரோமத்தால் ஒவ்வாமை ஏற்படலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X