பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
2வது நாளாக கொட்டும் மழை
வெள்ளத்தால் மும்பை ஸ்தம்பிப்பு

மும்பை: இரண்டாவது நாளாக இடைவிடாமல் தொடர்ந்து கொட்டி வரும் மழையால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மும்பை ஸ்தம்பித்துள்ளது.

மும்பை, மழை, வெள்ளம்,


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வாரத்தில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை மூழ்கடித்த மழை, நேற்று முன்தினத்தில் இருந்து, மீண்டும் கொட்டத் துவங்கியுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இடைவிடாமல் பெய்த மழை, நேற்று காலையும் தொடர்ந்தது.

'அடுத்த, 24 மணி நேரத்துக்கு, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, பால்கர், நவி மும்பை மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த, 24 மணிநேரத்தில் மட்டும், மும்பையின் புறநகர் பகுதிகளில், 100 மி,மீ., மழையும், தானே, நவி மும்பை பகுதிகளில், 250 மி,மீ., மழையும் பதிவாகிஉள்ளது.

இதனால், மும்பையின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகள், சுரங்கப்பாதைகள், தெருக்கள், தாழ்வான குடியுருப்புப் பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது, இதனால், மக்கள் வெளியே செல்லமுடியாமல், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ரயில் பாதைகள், மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புனேவில் இருந்து மும்பை செல்லும் அனைத்து ரயில்களும், ரத்து செய்யப்பட்டுள்ளன. புறநகர் ரயில்கள் தவிர, நீண்ட தொலைவு செல்லும், துரந்தோ, கோனார்க் எக்ஸ்பிரஸ், அமிர்தசர்எக்ஸ்பிரஸ், தேவ்கிரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

மும்பை விமான நிலைய ஓடுபாதையிலும், மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, விமான சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல விமானங்கள், வேறு நகரங்களில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன.

35 பேர் மீட்பு


தானே மாவட்டத்தில், ஜு - நந்த்குரி கிராமத்தில், வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் இருந்தவர்கள், வெளியேற முடியமல் தவித்தனர். இதையடுத்து, அவர்களை மீட்க உதவும்படி, விமானப்படையிடம், மாநில அரசு கேட்டுக் கொண்டது. விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வெள்ளத்தில் சிக்கியிருந்த, 35 பேர் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப, மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அணையில் நீர்திறப்பு


மஹாராஷ்டிராவில், தொடர் மழையால், அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகள் திறந்து விடப்பட்டுள்தால், ஆறுகளில், அபாய அளவை தாண்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புனே உட்பட, பல மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்,

Advertisement

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாசிக்நாசிக் மாவட்டத்தில், கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கங்காபூர் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் நீர், ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால், நாசிக் மாவட்டத்தில், பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆந்திரா கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், ஆந்திராவில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில், பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

'ஆரஞ்சு அலர்ட்'


இதற்கிடையே, 'கேரள மாநிலத்திலும், 6-ம் தேதி முதல், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு, 7-ம் தேதி முதல், பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கோழிக்கோடு, கண்ணுார் மாவட்டங்களில், 6-ம் தேதியும், இடுக்கி, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில், 7-ம் தேதி கனமழை பெய்யும்' என, 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X