தலைவர்கள் கருத்து; எதிர்ப்பும், ஆதரவும்| Dinamalar

தலைவர்கள் கருத்து; எதிர்ப்பும், ஆதரவும்

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (50)

புதுடில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்வதாகவும், காஷ்மீர் மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபாவில் இன்று (ஆக.,05) அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த முடிவு தொடர்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காஷ்மீரை பிரிப்பதற்கு அதிமுக, பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர்.காங்., பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.தலைவர்களின் கருத்து விபரம் :மெகபூபா முப்தி : இன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினமாக குறிக்கப்படும். இந்தியாவிற்கு பின்விளைவை ஏற்படுத்தும் என்பதால் தான் 1947 ல் காஷ்மீர் தலைமை 2 நாட்டு கொள்கையை மறுக்கும் முடிவு எடுத்தது. 370 சட்டப்பிரிவை நீக்கும் இந்திய அரசின் முடிவு சட்ட விரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது போல் ஆகும்.

பகுஜன் சமாஜ் எம்.பி., சதீஷ் சந்திர மிஸ்ரா : எங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. இந்த மசோதா நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறோம். இந்த மசோதாவிற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.

அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் : நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கும் முக்கியத்துவம் அளித்தவர் ஜெயலலிதா. அதனால் அதிமுக இதற்கு ஆதரவு அளிக்கிறோம். 370 சட்டப்பிரிவு ரத்து தற்காலிமானதே. இதற்காக எதிர்க்கட்சிகள் பதற்றப்பட தேவையில்லை.
ஐக்கிய ஜனதா தளம் கே.சி.தியாகி : எங்கள் முதல்வர் நிதிஷ்குமார் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என நினைப்பவர். எங்கள் கட்சி இந்த மசோதாவை ஆதரிக்காது. எங்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படக் கூடாது.

தேசிய மாநாட்டு கட்சி ஒமர் அப்துல்லா : மத்திய அரசு இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு பல அபாயகரமாக சூழலை உருவாக்கும். இது மாநில மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கையாளக் கூடியது. ஆயிரக்கணக்கான ராணு வீரர்களை காஷ்மீரில் குவித்து, மக்களின் குரலை ஒடுக்கி விட்டு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக குரலை ஒடுக்கி விட்டு, அராஜக போக்காக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஜூ ஜனதா தளம் எம்.பி., பிரசன்னா ஆச்சார்யா : காஷ்மீர் இன்று தான் இந்தியாவின் ஒரு அங்கமாகி உள்ளது. எங்கள் கட்சி இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கிறது. நாங்கள் பிராந்திய கட்சியாக இருக்கலாம். ஆனால் நாடு தான் எங்களுக்கு முக்கியம்.
ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் காஷ்மீர் அந்தஸ்து ரத்தை வரவேற்றுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X