பப்புல இளசுக கூட்டம்... மப்புல தினமும் ஆட்டம்..| Dinamalar

'பப்'புல இளசுக கூட்டம்... 'மப்'புல தினமும் ஆட்டம்..

Updated : ஆக 06, 2019 | Added : ஆக 06, 2019
Share
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், மழைப்பொழிவு அதிகரித்ததால், நேற்று அதிகாலை குற்றாலம் போல் சாரல் இருந்தது. நொய்யலில் வெள்ளம் வருவதை கேள்விப்பட்டதும், அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து செல்லும் தண்ணீரை பார்த்து பூரிப்படைந்த சித்ரா, ''எவ்ளோ நாளாச்சு, இது மாதிரி, ஆத்துல தண்ணீ போறதைப்
 'பப்'புல இளசுக கூட்டம்...  'மப்'புல தினமும் ஆட்டம்..

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், மழைப்பொழிவு அதிகரித்ததால், நேற்று அதிகாலை குற்றாலம் போல் சாரல் இருந்தது. நொய்யலில் வெள்ளம் வருவதை கேள்விப்பட்டதும், அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர்.
சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து செல்லும் தண்ணீரை பார்த்து பூரிப்படைந்த சித்ரா, ''எவ்ளோ நாளாச்சு, இது மாதிரி, ஆத்துல தண்ணீ போறதைப் பார்த்து,'' என, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.''நொய்யல்ல தண்ணீ வர்றது நல்ல விஷயம்தான். குளம், குட்டையில சேமிச்சு வைக்கணும். இல்லேன்னா, ஆத்துல வீணாப் போயி, கடலில் கலந்திருமே,'' என, 'உச்' கொட்டினாள் மித்ரா.''என்ன மித்து, இப்படி சொல்லிட்டே. நம்மூர்ல ஏகப்பட்ட குளங்களை துார்வாரி இருக்காங்களே. அப்புறம் என்ன?''''அக்கா, நொய்யல் வழித்தடத்துல, சித்திரைச்சாவடி அணைக்கட்டுதான், முதல்ல இருக்கு. இப்ப, ரொம்பவுமே சுருங்கியிருக்கு. மண் மேடா காட்சியளிக்குது. மழை நின்னா, ஒரே நாள்ல வறண்டு போயிடுது. இந்த அணைக்கட்டை துார்வாருறதுக்கு, ரூ.3.5 கோடிக்கு 'பிளான்' போட்டு, 'கவர்மென்ட்டு'க்கு அனுப்பியிருக்காங்க; இன்னும் நிதி ஒதுக்காம இருக்காங்க.''அதே மாதிரி, 'ஸ்மார்ட் சிட்டி'யில வேலை செய்றோம்கிற பேர்ல, செல்வ சிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளங்களில் தண்ணீரை தேக்காம, ஆத்துல திருப்பி விட்டுருவாங்க போலிருக்கு.
இப்பக்கூட, சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண் சமுத்திரம், சுண்டக்காமுத்துார் குளம், செங்குளத்துக்கு தண்ணீர் வர்றதில்லை,''''அச்சச்சோ...'' என, வாயை பிளந்தாள் சித்ரா.பேரூர் படித்துறையை கடந்து, நொய்யலில் தண்ணீர் பயணித்தது.அதைப்பார்த்த மித்ரா, ''பேரூர்ல இருக்கற தாலுகா ஆபீசுல புரோக்கர் தொல்லை ஜாஸ்தி ஆகிடுச்சாம். எந்த 'சர்ட்டிபிகேட்' வாங்குறதா இருந்தாலும், கரன்சி கொடுத்தாதான் வேலை நடக்குமாம்.
ரூ.200ல் ஆரம்பித்து, ரூ.10 ஆயிரம் வரை பேரம் பேசுறாங்க. பணம் கை மாறியதும், கனகச்சிதமா முடிச்சுக் கொடுக்குறாங்க. ஆபீசுக்கு அதிகாரிங்க, வர்றாங்களோ, இல்லையோ, அலுவல் நேரத்துக்கு புரோக்கர்கள் வந்திடுறாங்களாம்...'' என்றாள்.''நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சிங்காநல்லுார்ல, கார்ப்பரேஷன் கிழக்கு மண்டல அலுவலகம் இருக்கு. அதுக்குள்ள, இ-சேவை மையம் செயல்படுது. கட்டணம் செலுத்துனா, 'சர்ட்பிகேட்' கொடுப்பாங்க.''இந்த ஆபீசுக்குள்ள மட்டும், 20க்கும் மேற்பட்ட புரோக்கர் சுத்திக்கிட்டு இருக்காங்க. சொத்து வரி புத்தகம் போடணுமா, குடிநீர் இணைப்பு வாங்கணுமா, பட்டா வேணுமா, வில்லங்க சான்று வாங்கணுமான்னு கேக்குறாங்க. ரூ.20 ஆயிரத்துல இருந்து, ரூ.50 ஆயிரம் வரை 'ரேட்' வச்சிருக்காங்க. போன வாரம், வேறொரு வேலையா அந்த ஆபீசுக்கு போயிருந்தேன். என்கிட்டயே ஒருத்தரு வந்து, பேரம் பேசுனாருன்னா, பார்த்துக்கோயேன்,'' என்றாள் மித்ரா.பேரூரில் இருந்து புட்டுவிக்கி அணைக்கட்டுக்கு வந்தனர்.
குறிச்சி குளத்துக்கு தண்ணீர் வரும் மதகு பகுதியில் இருந்த அடைப்பை, மீனவர்கள் அகற்றி, வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.''பார்த்தியா, நம்மூர் மக்கள் எப்பவுமே இப்படித்தான். அரசாங்கம் செய்யணும்னு காத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க. அவுங்களே வேலையை பார்த்துருவாங்க. அதனாலதான், நீர் நிலைகள் பாதுகாப்பா இருக்கு,'' என, சித்ரா பெருமிதப்பட்டாள்.பாலக்காடு ரோட்டில் இருந்த மதுக்கடையில் கூட்டத்தை பார்த்த மித்ரா, ''இந்தக்கடைகளை மூட மாட்டாங்களா; வாங்குற சம்பளத்தை சில பேரு, 'சரக்கு' அடிச்சே காலி செஞ்சிடுறாங்க. அவுங்க குடும்பம் வறுமையில வாடுது.
இதைப்பத்தி, யோசிக்க மாட்டேங்கிறாங்களே...'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''என்ன மித்து, இப்படி கேட்டுட்ட. தங்க முட்டையிடும் கோழியாச்சே. எப்படி மூடுவாங்க. வடக்கு, தெற்கு பகுதியில மட்டும், 278 மதுக்கடை இருக்காம்.
இதுல, 'பார்' நடத்துறதுக்கு ஏலம் விட்டுறாங்க. ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க முட்டி மோதிக்கிட்டு இருக்காங்க. வர்ற, 13ம் தேதி, 'டெண்டர்' திறக்கப் போறாங்க. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களையும், எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சரையும் நச்சரிச்சிட்டு இருக்காங்களாம்.''இதுல, இன்னொரு கொடுமையும் நடந்துருக்கு. ஒவ்வொரு கடையிலும் வழக்கமா விற்பனையாகுற சரக்கு தொகையில மூணு சதவீதத்தை, 'டெண்டர்' தொகையா நிர்ணயிப்பாங்க. இந்த தொகையை, இப்ப, 1.8 சதவீதமா குறைச்சு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி இருக்காங்களாம்...''''மதுக்கடைக்கே ஆவேசப்படுறியே... சிட்டி லிமிட்டுல இருக்கிற ஒரு மாலில், 'பப்' ஆரம்பிச்சிருக்காங்க. இங்க, என்ன விசேஷம்ன்னா, மது அருந்தி விட்டு, ஆண், பெண் பேதமின்றி, இஷ்டம்போல் ஆட்டம் போடலாமாம். கல்லுாரி மாணவியரே அதிகமா ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க.''இரவு நேரத்திலும் ஆட்டம், பாட்டம் நடக்குது. அப்பப்ப மண்டை உடைப்பு, கைகலப்பு, தகராறு நடக்குது.
அதனால, 'பவுன்சர்ஸ்' தனியா இருக்காங்க. வார இறுதி நாட்கள்ல, பெங்களூருல இருந்து பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து, ஆட்டம் போட வைக்கிறாங்க.''மாலில் கடை வச்சிருக்கிறவங்க, முகம் சுளிச்சிட்டு இருக்காங்க. இந்த கண்றாவியை பார்க்க வேண்டாமேன்னு, இங்கு வர்றதை பொதுமக்களும் குறைக்க ஆரம்பிச்சிட்டாங்க. பிரச்னை பெருசா நடந்தாதான், போலீஸ்காரங்க நடவடிக்கை எடுப்பாங்க போலிருக்கு...'' என்றாள் சித்ரா.
''டெண்டரை பத்தி பேசுனதும், எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அக்ரி யுனிவர்சிட்டியில 'டெண்டர்' விடாம, பழைய பொருட்களை வித்துட்டாங்களாம்...''''அங்க என்ன இருக்கப் போகுது. பாரதியார் யுனிவர்சிட்டியில நடந்த மாதிரி, பழைய விடைத்தாள்களை வித்துட்டாங்களா...'' என, நோண்டினாள் சித்ரா.''அக்ரி யுனிவர்சிட்டியில, டெண்டர் விடுறது சம்பந்தமா தனி பதிவேடு பராமரிக்கிறாங்களாம்.
ஆனா, நீர் நுட்ப மையத்துல இருந்த பழைய இரும்பு நாற்காலி, டேபிள், கம்ப்யூட்டர், குழாய்களை, பழைய இரும்பு கடைக்காரர் ஒருத்தருக்கு, குறைஞ்ச விலைக்கு வித்துருக்காங்க. சாயாங்காலம், 5:00 மணிக்குள்ள பொருட்களை எடுத்துட்டு போகணுமாம். ஆனா, இருட்டுனதுக்கு அப்புறம், ஏழு மணிக்கு எடுத்துட்டு போயிருக்காங்க.''டெண்டர் ரூல்சை மீறுனதுனால, விற்பனை பதிவேட்டுல, கையெழுத்து போடுறதுக்கு, 'லேடி' ஊழியர் பயந்துருக்காங்க. எதைப்பத்தியும் கவலைப்படாம, வேறொரு அதிகாரி, கையெழுத்து போட்டு, 'சேல்ஸ்' பண்ணியிருக்காரு,'' எனறாள் மித்ரா.
''ஓ... அப்படியா?''ஆத்துப்பாலத்தை கடந்து, போத்தனுார் வழியாக சென்றபோது, ரயில் தண்டவாளத்தை பார்த்ததும், ''அக்கா, கோயமுத்துார் ரயில்வே ஸ்டேஷன் மூணாவது பிளாட்பாரத்துல, ஒரு பெண் பயணியை, டிக்கெட் பரிசோதகர், தகாத வார்த்தையில பேசி, திட்டுனாராம். அவுங்க கொண்டு வந்த 'லக்கேஜ்'களை எட்டி உதைச்சிருக்காரு...''''அப்புறம்... என்னாச்சு?''''சம்பவம் நடந்து, 15 நாளாச்சு. 'சிசி டிவி' கேமராவை பார்த்தாலே உண்மையை தெரிஞ்சுக்கலாம். வீடியோ பதிவு, 30 நாளைக்குதான் இருக்குமாம்; பதிவு அழியுறதுக்காக காத்திருக்காங்களாம்.
அதுக்கப்புறம், புகாருக்குள்ளான டிக்கெட் பரிசோதகர்களை அழைச்சி, பெயரளவுக்கு விசாரிக்கப் போறாங்களாம்,''''பெண்கள் பாதுகாப்பை பத்தி, ஒரு பக்கம் பேசுறாங்க; இன்னொரு பக்கம் அதிகாரிகளே படுமோசமா நடந்துக்கிறாங்க,'' என, நொந்து கொண்டாள் சித்ரா.அவர்களை, ஆளுங்கட்சி கொடி கட்டிய கார், படுவேகமாக கடந்தது.''அக்கா, ஆளுங்கட்சியில சீக்கிரமே நிர்வாகிகள் தேர்தல் நடக்கப் போகுதாம். ஏற்கனவே ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களை ஓரம் கட்டி வச்சிருக்காங்க.
இந்த முறையும், ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு விசுவாசியா இருக்கிற ஆதரவாளர்களையே நியமிக்கறதுக்கு திட்டம் போட்டிருக்காங்களாம். லோக்சபா தேர்தலுக்கு முன், தாய் கழகத்துல மறுபடியும் சேர்ந்த 'மாஜி' அமைச்சரோட ஆதரவாளர்கள் 'அப்செட்'டுல இருக்காங்க,'' என்றாள் மித்ரா.வெள்ளலுார் குளத்துக்கு குறைவாகவே தண்ணீர் சென்றது. அதிகமான தண்ணீர் நொய்யல் ஆற்றில் வீணாகச் சென்றதால், மனம் வெதும்பியபடி, வீட்டுக்கு ஸ்கூட்டரை திருப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X