சென்னை : ''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது. இதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. அதற்காக யாரும் தேசபக்தி பாடத்தை எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டாம்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திறந்து வைத்தார். அதன்பின் நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: கருணாநிதி தாழ்த்தப்பட்ட ஏழை சிறுபான்மை மக்களுக்காக விவசாயிகளுக்காக பாடுபட்டார். தற்போது மத்தியில் உள்ள பாசிச அரசுக்கு எதிராக நாங்கள் போராட தயாராக உள்ளோம். தமிழகத்தையும் வங்கத்தையும் விட்டு கொடுக்க மாட்டோம். இந்த போராட்டத்தில் தோற்க மாட்டோம்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் எங்கிருக்கின்றனர் என தெரியவில்லை. அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம், மேற்கு வங்கம் என ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மக்களின் விருப்பமின்றி மத்திய அரசு ஏதாவது செய்ய நினைத்தால் நாம் எதிர்க்க வேண்டும்.
நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவம் உள்ளது. அதை மதிக்க வேண்டும். தாய் மண் தாய் மொழியை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின்: சமூக நீதிக்கு, மாநில சுயாட்சிக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டது. அதற்கு முடிவு கட்டும் வகையில் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்கின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு என அதிகாரம் அனைத்தையும் டில்லியில் குவித்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீக்க நம் எம்.பி.க்கள் தினமும் பார்லிமென்டில் போராடி வருகின்றனர்.
கருணாநிதி நம்மிடம் இருந்திருந்தால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருப்பார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது. இதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு. அதற்காக யாரும் தேசபக்தி பாடத்தை எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டாம்.
சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து வந்தபோது நாட்டின் பக்கம் உறுதியாக நின்றோம். இன்று தேசபக்தி பெயரால் மதவெறியை துாண்டும் செயலை பா.ஜ. செய்கிறது. இதை உறுதியாக தி.மு.க. எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடந்தது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (157)
Reply
Reply
Reply