இஸ்லாமாபாத் : ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை அடுத்து, தங்கள் நாட்டில் பணியாற்றிய இந்திய துாதரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவுடனான வர்த்தகத்தையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, இந்தியா ரத்து செய்துள்ளதற்கு, பாகிஸ்தான் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளது. பாக்., பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனை
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம், இஸ்லாமாபாதில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் இம்ரான் கான், ராணுவ, பாதுகாப்பு உயர்அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
இந்தியாவுடனான, துாதரக ரீதியிலான உறவின் முக்கியத்தை குறைத்துக் கொள்வது என்றும், வர்த்தகத்தை நிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி கூறுகையில்,''எங்கள் நாட்டில் உள்ள இந்திய துாதர், அஜய் பிசாரியாவை, நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. ''அதேபோல், இந்தியாவில் உள்ள, எங்கள் துாதரையும்,நாடு திரும்பும்படி அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம், இஸ்லாமாபாதில் நடந்தது. இதில், பாக்., ராணுவ தளபதி, காமர் ஜாவித் பஜ்வா பேசியதாவது: காஷ்மீர் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு உதவுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல, பாக்., ராணுவம் தயாராக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளுக்கு, பாக்., ராணுவம் தயாராகி வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
அடுத்து, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபிய இளவரசர், முகமது பின் சல்மானுடன், இம்ரான் கான் நேற்று போனில் பேசினார்.அப்போது, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த அவர், இந்த விஷயத்தில், சவுதி உள்ளிட்ட உலக நாடுகள் தலையிட வேண்டும் என, வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புபாக்., பார்லிமென்ட் கூட்டு கூட்டமும், நேற்றும் நடந்தது.
இதில் பேசிய, பாக்., அமைச்சர் பவாத் சவுத்ரி, ''இந்தியாவுடனான, துாதரக ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்,'' என்றார். இந்நிலையில், பெஷாவர் நகரில், நேற்று குண்டு வெடித்ததில், ஒன்பது பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்புக்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்ற, பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், 'இன்று, ஜம்மு - காஷ்மீர்; நாளை, பலுசிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர். பிரிக்கப்படாத இந்தியா என்ற அகண்ட பாரத கனவை, பிரதமர் மோடி, நிச்சயமாக நிறைவேற்றுவார்' என, எழுதப்பட்டிருந்தது.நீண்ட நேரமாக, இந்த பேனர் பற்றி, யாருக்கும் தெரியவில்லை. அதற்கு பின், அதில் இந்திய ஆதரவு வாசகங்கள் இடம் பெற்றுள்ளதை பார்த்து, பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பேனர், அகற்றப்பட்டது. இது குறித்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அந்த பேனரை கட்டிச் சென்றது தெரிந்தது. இதில், ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவரைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5)
Reply
Reply
Reply