நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ., மழை!

Updated : ஆக 09, 2019 | Added : ஆக 09, 2019 | |
Advertisement
புதுடில்லி: கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 101 ஆண்டுகளுக்கு பின் அவலாஞ்சியில் நேற்று 82 செ.மீ. மழை கொட்டிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 91.1செ.மீ., மழை கொட்டியது உடுமலை - மூணாறு இடையே நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கட்டடம் இடிந்து

புதுடில்லி: கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 101 ஆண்டுகளுக்கு பின் அவலாஞ்சியில் நேற்று 82 செ.மீ. மழை கொட்டிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 91.1செ.மீ., மழை கொட்டியது

உடுமலை - மூணாறு இடையே நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு ஒப்பந்த தொழிலாளிகளும், நீலகிரியில் வீடு இடிந்து விழுந்ததில் 65 வயது முதியவரும் பலியாகினர். மேலும் பல்வேறு மாநிலங்களிலும் மழை வெள்ளத்தில் சிக்கி 35 பேர் பலியாகினர்; மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று உள்ளதால் நான்கு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.latest tamil news
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஊட்டி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 13.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 82 செ.மீ; அப்பர் பவானியில் 30 செ.மீ; கூடலுாரில் 24.1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 91 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news
அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உட்பட பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இந்த அணைகளுக்கு வினாடிக்கு சராசரியாக 600 கன அடி முதல் 800 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகள் திறப்பால் பொதுமக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். திரும்பிய பக்கமெல்லாம் மண் சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றும் பள்ளி கல்லுாரிகளுக்கு நான்காவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.


latest tamil news


Advertisementகேரளா இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மூணாறு- -உடுமலைபேட்டை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தேவிகுளம் இடுக்கி ஆகிய தாலுகாக்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. மூணாறில் அதிகபட்சமாக நேற்று 27.74 செ.மீ. மழை பதிவானது. இன்றும் நாளையும் கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news
மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு மஹாராஷ்டிரா மாவட்டங்களில் மட்டும் கடந்த ஏழு நாட்களில் 16 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் ஒன்பது பேர் பலியாகினர். தாழ்வான பகுதிகளில் வசித்த 26 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரு மாநிலங்களிலும் உள்ள ஏரிகள் அபாய அளவை தாண்டி நிரம்பி வழிகின்றன. அணைகள் திறந்துவிடப்பட்டதால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.


latest tamil news
மஹாராஷ்டிராவின் சாங்கிலி கோலாப்பூர் மற்றும் புனே ஆகிய மாவட்டங்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கிய 2.5 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் இணைந்து கடல் மற்றும் விமானப்படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news
மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரம்மனல் என்ற கிராமம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 32 பேரை மீட்டு வந்த படகு கவிழந்ததில் அதில் இருந்த 14 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். அதில் ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சாங்கிலி மாவட்ட சிறைக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதையடுத்து கீழ்தள சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 370 கைதிகள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.


latest tamil news
மஹாராஷ்டிரா மழை நிலவரம் குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று ஆய்வு நடத்தினார். மஹாராஷ்டிராவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான பருவ மழை 104 சதவீதம் பெய்ததாகவும் மேற்கு மஹாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் அதிக அளவு மழை பதிவானதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு பெலகாவி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்கு இதுவரை ஒன்பது பேர் பலியாகி உள்ளனர்; 43 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பெலகாவி மாவட்டத்தில் மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார். ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக்கு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வம்சதாரா ஆறு அபாய அளவை எட்டியுள்ளது. சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாவது அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news

கேரளாவுக்கு ரெட் 'அலெர்ட்':


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எனப்படும் அதிதீவிர அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணுார், வயநாடு, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலாம்பூர் என்ற இடத்தில் வீட்டின் முதல் மாடி வரை மழை நீர் புகுந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsவயநாட்டில் 16 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் 2300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கண்ணுார் மாவட்டத்தில் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மூணாறில் 19.4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. கண்ணுார், வயநாடு, மலப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்தி மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கிடையே மத்திய கேபினட் செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் டில்லியில் நேற்று உயர் மட்டக்கூட்டம் நடந்தது. இதில் மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் மழை வெள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பிரச்னைகளை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உடனடி உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.


latest tamil newsஉ.பி.,யில் பலி 10:

உத்தர பிரதேசத்தின் லக்னோவில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஹர்தோய் மாவட்டத்தில், மின்னல் தாக்கி, மூவர் பலியாகினர். நொய்டாவில் பெய்த மழைக்கு, நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், கோரக்பூர், புலந்த்ஷர் மற்றும் கன்பூர் மாவட்டங்களில், தலா ஒருவர் பலியாகி உள்ளனர். ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகபட்சமாக, 10.9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. ராஜஸ்தானிலும், பல இடங்களில், பரவலான மழை பெய்துள்ளது.ரூ.200 கோடி சரக்குகள் தேக்கம்:

வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றப்பட்ட 10 ரயில்கள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போல் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய பூண்டு, உரம், கால்நடைத் தீவனங்கள், தானிய சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து செல்ல வேண்டிய 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் தமிழகம் வரவேண்டிய 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X