37+1! வேலூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வெற்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

37+1! வேலூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வெற்றி

Updated : ஆக 09, 2019 | Added : ஆக 09, 2019 | கருத்துகள் (45)

வேலுார் : வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் கடும் இழுபறிக்கு பின் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரது வெற்றிக்காக அமைச்சர்கள் அனைவரும் முழுவீச்சில் களமிறங்கியும் பலனில்லாமல் போனது. தமிழகத்தில் நடந்த லோக்சபா பொதுத்தேர்தலில் ஏற்கனவே தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வென்றுள்ளது. தற்போது கூடுதலாக ஒரு தொகுதியை பிடித்துள்ளது.


தமிழகத்தில் லோக்சபா பொதுத்தேர்தல் ஏப்ரலில் நடந்தது. அப்போது பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக வேலுார் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. தற்போது அந்த தொகுதியில் 5ம் தேதி தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிட்டனர். மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி நிலவியது.

அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்காக அமைச்சர்கள் அனைவரும் அங்கேயே முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர். அதேபோல் தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் - எம்.எல்.ஏ.க்களும் அங்கு முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தேர்தலில் 71.51 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 10.24 லட்சம் பேர் ஓட்டளித்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதல் சுற்றிலிருந்து நான்காவது சுற்று வரை அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

ஐந்தாவது சுற்றிலிருந்து 12வது சுற்று வரை தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து கூடுதல் ஓட்டுகள் பெற்றார். மீண்டும் 13வது சுற்றிலிருந்து 18வது சுற்று வரை அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலைக்கு வந்தார். இதனால் இழுபறி நிலை ஏற்பட்டது. இறுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்; ஏ.சி.சண்முகம் தோல்வியை தழுவினார். அமைச்சர்கள் முழு வீச்சில் களமிறங்கியும் அ.தி.மு.க.வுக்கு பலனில்லாமல் போனது.

ஏற்கனவே தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தை மட்டும் அ.தி.மு.க. பிடித்தது. தற்போது வேலுாரில் வெற்றி பெற்றதால் 38 இடங்கள் தி.மு.க. கூட்டணி வசம் சென்றன. தி.மு.க.வுக்கு மட்டும் 23 லோக்சபா எம்.பி.க்கள் உள்ளனர். வேலுார் வெற்றியை தொடர்ந்து லோக்சபாவில் தி.மு.க. பலம் 24 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் வெற்றி சான்றிதழை வேலுார் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்திடம் வழங்கினார்.

தபால் ஓட்டில் அ.தி.மு.க., முன்னிலை! தபால் ஓட்டில் அ.தி.மு.க., வேட்பாளர் 509 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் 360 ஓட்டுகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 83 ஓட்டுகள் பெற்றார்.
வித்தியாசத்தை விட 'நோட்டா' அதிகம்!

தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகத்தை விட கூடுதலாக 8,141 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத 9,417 பேர் 'நோட்டா'வுக்கு ஓட்டளித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X