சில ஆண்டுகளுக்கு முன் வரை, 'டிவி' பெட்டி, வீட்டுக்கு வீடு கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் பெரியோர், நேரம் போக்க, சிற்சில விளையாட்டுகள் மற்றும் செய்தித் தாள்கள் தான் இருந்தன. அத்துடன், அண்டை, அயலாருடன் கலந்து பேசுவது, அவர்களுடன் சேர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என, பொழுது போகும்.ஆண்களுக்கு, பகல் பொழுது முழுக்க வேலை இருக்கும். வயல் அல்லது அலுவலகங்களில் வேலை பார்த்து வீடு திரும்புபவர்கள், சாயங்கால நேரத்தில், ஊர்க் கோவில்கள் அல்லது சாவடி எனப்படும், கிராம அலுவலகத்தின் பக்கவாட்டு பகுதிகளில் கும்பலாக அமர்ந்து, உலக விஷயங்களை அலசுவர்.மாலை முழுதும் விளையாட்டு என்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர் இளைஞர்கள். காய்ந்த வயல்வெளிகளிலும், குளத்தின் கரைகளிலும், பொது திடல்களிலும், கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடுவர். இதனால், அவர்களின் தேக ஆரோக்கியமும், மன நலமும் பாதுகாக்கப்பட்டது.சின்னஞ்சிறுசுகள், தெருக்கு தெரு, கும்பலாக கூடி, குச்சிக்கம்பு, ஐஸ்பால், பம்பரம், கோ-கோ போன்ற விளையாட்டுகளை விளையாடி, இருட்டியதும், வீட்டிற்கு திரும்பி, பாடங்களை படித்து, நள்ளிரவில் நன்கு துாங்கி, அதிகாலையில் எழுந்து, படித்து, பள்ளிக்கு கிளம்புவர்.வீடுகளை விட்டு வெளியே வராத இளம்பெண்கள் அல்லது, 'சமைந்த' பெண்கள், தாயம், கிளியாந்தட்டு, ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணை கட்டி விளையாட்டு என, அண்டை, அயலில் உள்ள, சம வயது பெண் பிள்ளைகளுடன் விளையாடுவர்.ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை, ஊரே திரண்டு நின்று, விளையாட்டுப் போட்டிகள், வீர தீர விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும். அப்போது, இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் திறமைகளை காண்பித்து மகிழ்வர்.இப்படித் தான் இருந்தது, தமிழ் சமுதாயம், ௨௫ - ௩௦ ஆண்டுகளுக்கு முன். எப்போது, சேட்டிலைட், 'டிவி'கள் எனப்படும், 'டிவி' சேனல்கள் வரத் துவங்கியதோ, அப்போது பிடித்தது சிக்கல். பாரம்பரிய விளையாட்டுகள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பேச்சு, கலாசாரத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது.ஆணும், பெண்ணும், சிறுசும், பெருசும், 'டிவி' பெட்டிக்குள் கண்ணை விட்டுக் கொண்டு, இரவும் தெரியாமல், பகலும் தெரியாமல், தனக்குத் தானே சிரித்துக் கொண்டும், அழுது கொண்டும், மனதிற்குள் வஞ்சகத்தை வளர்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.இந்த நிலை, இனிமேல் மாறுமா... பழைய நிலை வருமா என்ற ஏக்கமே, இந்த கட்டுரை!ஈக்கள், கொசுக்கள், எலிகள், பன்றிகள் போன்ற விலங்குகள், மனிதர்களுக்கு கெடுதல் செய்யும் நோய் கிருமிகளை பரப்பி, பல விதமான நோய்களை உருவாக்குகின்றன. இவை உருவாக்கும் நோய், மனித உடலை பாதிப்பது போல, மனித மனங்களை பாதிக்க செய்யும், அபாயமான வேலையை செய்கின்றன, 'டிவி' ஊடகங்கள்.இணையமும், பத்திரிகை ஊடகங்களும் விரிந்து கிடக்கும் இந்த நாளில், ஒரு செய்தியை அவரவர் வசதி, கொள்கை, விருப்பத்திற்கு ஏற்ப, மாற்றிக் கொள்ளலாம் என்பது, செய்தி சேனல்கள் செய்யும் சேட்டைகளில் மிகவும் முக்கியமானது.இதை பார்க்கும் போது, காந்தியடிகள் சுட்டிக்காட்டிய மூன்று குரங்குகள் போலவே, நாமும் இருந்து விடலாமோ என, எண்ணத் தோன்றுகிறது.ஒரு செய்திக்கு பின் இருக்கும் சம்பவங்களை, அதன் உண்மைத்தனத்தோடு பார்க்காமல், தாங்களே வல்லுனர்களாய் மாறி, அந்த செய்திக்கு வண்ணங்கள் பூசுவதில், நம், 'டிவி'க்காரர்கள் கெட்டி!தமிழகத்தை பொருத்தவரை, ஒவ்வொரு கட்சிக்கும், ஒன்றிரண்டு, 'டிவி' சேனல்கள் உள்ளன. ஒரு பெரிய கட்சியின் குடும்பத்திற்கு, பல மாநிலங்களில், 'டிவி' தொழில் உள்ளது. இதனால், அவர்கள், தமிழகம் மற்றும் ஆளும் கட்சியை மட்டும் தான், 'கார்னர்' செய்வரே தவிர்த்து, தேசிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.சில சமயம், தேசிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல, செய்திகளை வெளியிட்டாலும், அதில் அவர்களின் குடும்பத் தொழில், கட்சியின் லாபம், கட்சியினர் விவகாரங்களுக்காகத் தான் இருக்கும். மக்களுக்கு அல்லது நேயர்களுக்கு வேண்டிய செய்திகள், தகவல்களுக்கு, அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.இன்னொரு, 'டிவி' சேனல் இருக்கிறது. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த அந்த, 'டிவி'யில் இப்போது, ஒரே சீரியல் மயம். காலை துவங்கி, நள்ளிரவு வரை, சீரியல்கள் தான். அவற்றை, சாதாரண மன நிலையில் உள்ள ஒருவர் பார்த்தால், அவரின் குடும்பத்திற்குள், அடுத்த சில நாட்களில், பெரிய கலவரமே வந்து விடும்.அந்த அளவுக்கு, குடும்பத்தை பிரிக்கும், குடும்ப உறுப்பினர்களை நயவஞ்சகமாக கொல்லும், பெண்கள் எடுத்தெறிந்து பேசும், கள்ள உறவுகளை பின்பற்றும் காட்சிகளும், கதாபாத்திரங்களும் தான், அந்த, 'டிவி'யில் அதிகம்.ஆனால் ஒன்று. அந்த சீரியல்களில் வரும், இளம்பெண்களும், இளைஞர்களும், சினிமா நாயகர், நாயகிகள் தோற்று விடும் அளவுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பர். அவர்களைப் பார்த்து ரசிக்கலாம் என, சில நாட்கள் அந்த சீரியல்களை தொடர்ந்து பார்த்தால், சிக்கல் தான்; குடும்பம் சீரழிந்து விடும்!'தினமலர்' போன்ற நாளிதழ்களில், படுகொலை, கலவரம், வன்முறை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதனால், படிப்பவர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்ற உயர்ந்த எண்ணம், அந்த நாளிதழ்களுக்கு!ஆனால், கொலை செய்த நபர், கொலை செய்யப்பட்டவர், கொடூரமான ஆயுதங்கள், அவற்றை பயன்படுத்தி கொல்லும் காட்சிகளை, ரத்தம் வழியும் வக்கிர காட்சிகளை, நிறைய, 'டிவி' சேனல்கள், திரும்பத் திரும்ப காட்டி, மக்களை பதைபதைக்க வைக்கின்றன.அரசியல் கலப்புடன் செய்திகளை அளிப்பது, அதற்காக, சாதாரண தற்கொலைகளுக்குக் கூட, முக்கியத்துவம் அளித்து, தொடர்ந்து, செய்திகளை வெளியிட்டு, பிற மாணவர்களையும், அந்த முடிவெடுக்க வைத்து விடுவர் போலும்!உப்பு பெறாத விஷயத்தைக் கூட, ஊதிப் பெரிதாக்குவதிலேயே, அத்தகைய, 'டிவி'கள் கவனத்தை செலுத்துகின்றன. அதற்கு காரணம், டி.ஆர்.பி., எனப்படும், 'டிவி'யை பார்ப்போர் எண்ணிக்கையை கூட்டுவது தான். இதனால், சமுதாயம் சீரழிந்து விடுமே; சமூகத்தில் பிரிவினை ஏற்பட்டு விடுமே என, அந்த, 'டிவி'களின் செய்தியாளர்கள் யோசிப்பதே இல்லை.ஆனால், அந்த காலம் துவங்கி, இந்த காலம் வரை, மத்திய அரசின், 'துார்தர்ஷன், 'டிவி' தன்னை மாற்றிக் கொள்ளவே இல்லை. அமைதியான நிகழ்ச்சிகளை, விளம்பரம் இல்லாத நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்றால், அந்த சேனலை பார்க்கலாம்.'டிவி' ஊடகங்கள் பெருக ஆரம்பித்ததன் விளைவு, ஒரு திரைப்படத்தின் பாடல்களோ, முன்னோட்டமோ வெளி வருவதைக் கூட, 'பிரேக்கிங்' செய்திகளாக வெளியிடுகின்றனர். சில, 'டிவி'கள், பிரேக்கிங் செய்திகளுக்கு என, பின்னணியில் விசேஷமான இசையமைப்பையும் சேர்க்கின்றன. சகிக்கலை!'பரபரப்பை ஏற்படுத்துவதையே தங்கள் குறிக்கோளாக கொண்ட, 'டிவி'களைப் பார்ப்பவர்களுக்கு, மன நிம்மதி இருப்பதில்லை. பார்த்த காட்சிகளை பிறரிடம் கூற பலர், ஆர்வமாக இருக்கின்றனர். இதனால், வதந்திகள், கலவரங்கள், மோதல்கள் அதிகம் ஏற்படுகின்றன' என்கிறது, ஓர் ஆய்வு!அதனால் தான், சமீபத்தில், ஜம்மு - காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்ட போது, முதலில், அங்குள்ள செய்தி சேனல்களையும், இணையதள தொடர்புகளையும், மாநில நிர்வாகம் துண்டித்தது.மக்களை தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட்டு நகர விடாமல், கட்டிப்போடும் சங்கிலிகளாக, செய்தியை அளிக்க வேண்டும் என, 'டிவி' ஊடகங்கள் நினைக்கின்றன. விளைவு, செய்தி என்ற பெயரில், குப்பையை தருகின்றனர்.இப்போது, நாடு முழுவதும், தலை விரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தை எடுத்துக் கொண்டால், குடங்களோடு வீதி வீதியாக மக்கள் அலைவதாகவும், இரவெல்லாம் அவர்கள், துாங்காமல் விழித்திருந்து, தண்ணீர் பிடிப்பதாக ஓர் ஊடகம் ஒளிபரப்பினால், சென்னையில், வீதியெங்கும் தண்ணீர் வழிந்து ஓடுவதாக, இன்னொரு ஊடகம் சொல்லும்.இரண்டையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.செய்திகளை விட மோசமாக, மக்களின் மனதில், முக்கியமாக பெண்களின் மனதில் நச்சுக்கிருமிகளை விதைக்கும் வேலையில் மும்முரமாக இருக்கின்றன, தொலைக்காட்சி தொடர்கள் என்ற பெயரில், ஒளிப்பரப்பாகும் விஷத்தெளிப்பான்கள்!கட்டுரை முழுக்க பயங்காட்டுகிறேனே... 'டிவி'யில் நல்லதே இல்லையா... என்று நினைக்காதீர்கள். நோய்களை பரப்பும் பாக்டீரியாவில், நல்லவைகளும் உண்டு. அவற்றின் மூலம், நிறைய நோய்கள் தீர்க்கப்படுகின்றன என்பது எந்த அளவு உண்மையோ, அது போல, 'டிவி' ஊடகங்களில், சில நல்லவைகளும் உள்ளன.அவற்றை பயன்படுத்தி, நல்ல விஷயங்களையும், செய்ய வைக்கலாம். ஏனென்றால், 'டிவி' ரிமோட் நம் கையில் தான் உள்ளது. எந்த சேனலை பார்க்கலாம்; எதை நிராகரிக்கலாம் என்ற உரிமை, நம்மிடமே உள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்தலாம். வியாபாரத்திற்காக ஊதிப் பெரிதாக்கி, தங்களுக்கு ஏற்ற மாதிரி, மக்களை மாற்றிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்களை புறக்கணியுங்கள்.பெண்கள், குழந்தைகள் மனதில், நஞ்சை விதைக்கும் தொலைக்காட்சி தொடர்களை பார்க்காமல் நிராகரியுங்கள்.நல்ல ஆன்மிக விஷயங்கள், உயர்ந்த கருத்துகளை உயர்த்திப் பிடிக்கும், 'டிவி'கள் சில உள்ளன. அவற்றில் வரும் நிகழ்ச்சிகளை தினமும் சிறிது நேரமாவது பாருங்கள். ஒப்பாரி வைக்கும், 'டிவி' தொடர்களை தொடர்ந்து பார்ப்பதால், வீட்டில் பரவியிருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறைந்து, அதற்குப் பதிலாக, நேர்மறை எண்ணங்கள் பரவட்டும்.'டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிராபி, ஹிஸ்டரி, அனிமல் பிளானட்' போன்று அறிவார்ந்த விஷயங்களை ஒளிபரப்பும், பல சேனல்கள் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். 'போகோ'வில் மூழ்கியிருக்கும் அவர்கள், அதில் இருந்து வெளியே வந்து, பொது அறிவையும் வளர்க்கட்டும்.பெற்றோர் தான், பிள்ளைகளின் முன்மாதிரிகள். பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும் என்றால், முதலில் நாம் தான் மாற வேண்டும். இன்று எல்லா விதமான குப்பையும் கொட்டி கிடக்கும் ஊடகங்களில், தண்ணீரில் கலந்து இருக்கும் பாலை மட்டும் பிரித்து எடுக்கும் அன்னப்பட்சியாக மாறி, நல்ல செய்திகளை மட்டும் பார்க்க ஆரம்பிப்போம்.நாளடைவில், தரமான நிகழ்ச்சிகளை தர வேண்டிய நிலைக்கு ஊடகங்கள் மாறும்; மாற்றப்படும். நம்புவோம் வாருங்கள்!தொடர்புக்கு:இ:மெயில்: selvasundari152@gmail.com-எஸ்.செல்வசுந்தரிசமூக ஆர்வலர்