ரகசியம் காத்த மோடி, அமித் ஷா

Updated : ஆக 11, 2019 | Added : ஆக 11, 2019
Advertisement
டில்லி உஷ், காஷ்மீர், மோடி, அமித்ஷா, காங்கிரஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல்

மத்திய அரசு, ஜம்மு -- காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, அதிரடியாக நீக்கியது. இந்த அதிரடி நடவடிக்கையால், காங்கிரஸ் உட்பட, பல எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என, தெரியாமல் திண்டாடிவிட்டன; காங்கிரசில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, சில தலைவர்கள் பதவி விலகவும் செய்தனர்.

சூறாவளியை கிளப்பிய இந்த விவகாரத்தை, மோடி, ரகசியமாக வைத்திருந்தது எப்படி என்பதை, ஒரு அமைச்சர் விவரித்தார். மோடியும், அமித் ஷாவும், ஜனவரியிலேயே இதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டனர். பார்லிமென்ட் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில், இந்த வேலையை அவர்கள் ஆரம்பித்தனராம். இந்தியாவின், தலைசிறந்த சீனியர் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பார்லி.,யின் தயவு இல்லாமல், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய என்ன வழிகள் என, அவர்களிடம் விவாதிக்கப்பட்டது.

அப்போது தான், 370வது சட்டப் பிரிவில் உள்ள ஒரு முக்கிய அம்சத்தை விளக்கினார், சீனியர் வழக்கறிஞர் ஒருவர். அதாவது, அந்த பிரிவின் மூலம், ஜனாதிபதி ஒரு உத்தரவை வெளியிட்டு, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து விடலாம்.இந்த விவகாரம், கட்சிக்குள் யாருக்குமே, ஏன் அமைச்சர்களுக்கே தெரியாது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், உளவுத் துறை தலைவர்கள் உட்பட, சில சீனியர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.

ஜனாதிபதியின் உத்தரவு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு - காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது என, பேச்சு அடிபட்டாலும், என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குமே தெரியவில்லை. இது குறித்த அறிவிப்பு வெளியான அன்று தான், பா.ஜ., அமைச்சர்களுக்கே விஷயம் தெரிய வந்தது.

இந்த அதிரடி நடவடிக்கையால், காங்கிரஸ் தான் கலகலத்து போயுள்ளது. ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லி வருகின்றனர். சில தலைவர்கள், கட்சியிலிருந்தே விலகி, பா.ஜ., பக்கம் சென்று விட்டனர்.அரசியல் சாசனப் பிரிவு, 370ஐ நீக்கி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்துவிட்டார் மோடி. ஆனால், காங்கிரஸ் பிளவுபட்டு விட்டது என, டில்லி அரசியல் வட்டாரங்களில் கிண்டலாக பேசப்படுகிறது.


பங்களா கிடைக்கவில்லையே!


லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, எம்.பி.,க்கள் அனைவருக்கும், டில்லியில், அரசு தரப்பிலிருந்து வீடுகள் ஒதுக்கப்படும். ஒருவர், எத்தனை முறை, எம்,பி.,யாக இருந்துள்ளார் என்பதை வைத்தும், அவர் அமைச்சராக இருந்துள்ளாரா என்பதை வைத்தும், 'சீனியாரிட்டி' அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும்.

சீனியர், எம்.பி.,க்களுக்கு பெரிய பங்களாக்கள், அதுவும் டில்லியின் மையப் பகுதியில், பார்லிமென்டிற்கு அருகிலேயே கிடைக்கும். முதல் முறை, எம்.பி.,க்களுக்கு, அடுக்கு மாடி குடியிருப்பில், வீடுகள் கிடைக்கும்.பங்களாக்களில், உள்ளே நுழைந்ததும் பெரிய தோட்டம் இருக்கும். உள்ளே, ஐந்திற்கும் மேற்பட்ட அறைகள் உண்டு. பங்களாவுக்கு பின்புறமும் தோட்டம் இருக்கும். சிலர், இங்கே காய்கறி தோட்டம் போட்டுள்ளனர். இந்த தோட்டத்தைக் கவனிக்க, அரசு தரப்பிலிருந்து வேலையாட்கள் வேறு. இதைத் தவிர, எம்.பி.,க்களுக்கு அலுவலக அறை தனியாக இருக்கும்.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு, பெரிய பங்களாக்கள் கிடைத்து விட்டன. ஆனால், மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும், சில சீனியர், எம்.பி.,க்களுக்கும், அவர்கள் கேட்ட பங்களாக்கள் கிடைக்கவில்லை. கட்சியின் பார்லிமென்ட் தலைவரின் ஆலோசனைப்படி தான் இந்த பங்களாக்கள் ஒதுக்கப்படும்.தலைவர், தனக்கு நல்ல பங்களாவை எடுத்துக் கொண்டு, எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையே என, முன்னாள் அமைச்சர் ஒருவர் வருத்தப்படுகிறார். சில சீனியர், எம்,பி.,க்களும், கட்சியின் பார்லிமென்ட் தலைவர், எங்களையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் என, வருத்தப்படுகின்றனர்.


மோடியின் நம்பிக்கை நட்சத்திரம்


சமீபத்தில், 'டிவி'க்களில் ஒரு காட்சி காண்பிக்கப்பட்டது. சற்று வயதான ஒருவர், 'புல்லட் ப்ருப்' உடை அணிந்து, காஷ்மீரிகள் சிலருடன் சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருக்கிறார். காஷ்மீரில் நிலைமை சீரடைந்து வருகிறது என்பதைக் காட்ட, இந்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

புல்லட் ப்ருப் உடை அணிந்திருந்த அந்த நபர், இந்தியாவின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல். இவர் மீது, பிரதமர் மோடி அதீத நம்பிக்கை வைத்துள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானிலிருக்கும், பாலகோட் முகாம்கள் மீது குண்டு வீசி, பாக்., பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவது எப்படி என, மோடிக்கு ஆலோசனை வழங்கியவர் இவர் தான்.கேரள கேடர், ஐ.பி.எஸ்., அதிகாரியான அஜித் தோவல், மோடி பிரதமரான, 2014ம் ஆண்டிலிருந்து இந்தப் பணியில் இருக்கிறார். இப்போது இவருக்கு, மத்திய அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் பிரதமராயிருந்த போது, அஜித் தோவல் உளவுத் துறை தலைவராக இருந்தார். கடந்த, 2005ல், பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். மோடி பிரதமரானதும், இவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கிவிட்டார்.

தோவல், உளவுத் துறையில் பணியாற்றிய போது, பல, 'அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன்'களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இஸ்ரேல் நாட்டின், உளவு அமைப்பான, 'மொசாத்' போல, வெளியே யாருக்கும் தெரியாமல், இவர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளால், சக அதிகாரிகள், இவருக்கு, 'ஜேம்ஸ் பாண்ட்' என, பெயரிட்டுள்ளனர். சீனா, பாகிஸ்தான் நாடுகளில் வேறு பெயர்களில் தங்கியிருந்து, பல உளவுத் தகவல்களை சேகரித்துள்ளதாக, இவருடன் பணியாற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை நீக்க, நாள் குறித்து கொடுத்தது இவர் தான்.

பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரத்தில் சிக்கிஉள்ளது; சீனா - அமெரிக்கா இடையே, வர்த்தக சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; பிரிவு, 370ஐ ரத்து செய்ய, இது தான் சரியான நேரம் என, பிரதமருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்.இந்திய பாதுகாப்பு விஷயத்தில், முக்கிய பங்காற்றும் அஜித் தோவலுக்கு, 74 வயதாகிறது எனச் சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். ஆள், அந்த அளவிற்கு, 'பிட்' ஆக உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X