மழையில் தொடர்ந்து தத்தளிக்கும் கேரளா, கர்நாடகா, மஹா.,

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 11, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெள்ளம், மழை, பாதிப்பு ,மீட்பு பணி, நிவாரணம், ரயில்கள்

திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு, பலியானோர் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையத்தில், நேற்று முதல், விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அண்டை மாநிலமான கேரளா, கர்நாடக மாநிலங்களிலும், மஹாராஷ்டிராவின் பல பகுதிகளிலும், தென் மேற்கு பருவ மழை, வெளுத்து வாங்கி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைந்துள்ள கேரளாவில், 14மாவட்டங்களும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. காசர்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட, 1.65 லட்சம் பேர், 1318 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை நேற்றும் நீடித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து, ஐந்தாவது நாட்களாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை விட, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோர் தான் அதிகம்.

நேற்று, இரண்டு உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதை அடுத்து, மழை, வெள்ளம், நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை, 60 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்த, கொச்சி சர்வதேச விமான நிலையம், நேற்று மதியத்திற்கு பின் இயங்கத் துவங்கியது. விமான நிலைய ஓடுபாதையில் தேங்கி நின்ற தண்ணீர் அகற்றப்பட்டதை அடுத்து, விமானங்கள் இயக்கப்பட்டன. அபுதாபியிலிருந்து வந்த விமானம், நேற்று மதியம், முதலில் தரையிறங்கியது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில், கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், போலீசாருடன் இணைந்து மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.


ராகுல் வருகை


காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ராகுல், நேற்று கேரளா வந்தார். கேரளாவின், வயநாடு லோக்சபா தொகுதி, எம்.பி.,யான அவர், கோழிக்கோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். அப்போது அவர், 'வெள்ள நிவாரணம் குறித்து, பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயனுடன் பேசியுள்ளேன்' என, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தெரிவித்தார். வயநாடு உட்பட, வெள்ளம் பாதித்த பகுதிகளை, இன்றும் அவர் பார்வையிட உள்ளதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


ரயில்கள் ரத்து


தொடர் மழையால், கேரளாவில் நேற்று ஐந்து எக்ஸ்பிரஸ் மற்றும் நான்கு பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஏழு ரயில்கள், நடுவழியில் நிறுத்தப்பட்டன; இரண்டு ரயில்கள், வேறு பாதையில் இயக்கப்பட்டன.


மஹாராஷ்டிரா


பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அரசு அமைந்துள்ள, மஹாராஷ்டிராவும், மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, சாங்கிலி மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில், இறந்தவர்கள் எண்ணிக்கை, 17 ஆக நேற்று உயர்ந்துள்ளது. கர்நாடகாவின், அல்மாட்டி அணையிலிருந்து கிருஷ்ணா நதியில், வினாடிக்கு, 5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கோலாபூர், சாங்கிலி, சதாரா, தானே, புனே, நாசிக், பால்கார், ரத்னகிரி, ராய்காட் மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்கள், ஒரு வாரமாக மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளன. மழை தொடர்பாக, 30 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; நான்கு லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின், 29 குழுக்கள், மாநில மீட்புக் குழுவின், மூன்று; கடலோர காவல் படையின்,16; கடற்படையின்,41; ராணுவத்தின், 21 குழுக்கள், 10 மாவட்டங்களில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மாநிலத்தில், 369 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.100 டாக்டர்கள், முழு நேரமும் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர்.


கர்நாடகா


முதல்வர், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள, கர்நாடக மாநிலத்தில், மழை, வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை, 31 ஆக உயர்ந்துள்ளது. 3.14 லட்சம் பேர், வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். 924 நிவாரண முகாம்களில்,2.18 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த மாநிலத்தின் பெலகாவி மாவட்டம், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு 21 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. பெல்லாரி பகுதியில், துங்கபத்ரா நதியில், அபாய மட்டத்தையும் தாண்டி பாய்ந்த நீர், ஹம்பி கோட்டை அருகே, போக்குவரத்து பாலத்தை மூழ்கடித்தது.

இதனால், கம்ப்ளி - கங்காவதி நகரங்களுக்கு இடையே, போக்குவரத்து தடைபட்டுள்ளது. கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், நேற்று முன்தினம் பார்வையிட்டார். இந்நிலையில், முதல்வர் எடியூரப்பாவுடன் இணைந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று, வெள்ளப் பாதிப்பை, ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
munusamyganesan - CHENNAI,இந்தியா
13-ஆக-201914:10:34 IST Report Abuse
munusamyganesan ஹாய், அணைகளில் இருந்து வீணாகும் தண்ணீரை விவசாயம் நிலங்களை சென்று சேர அரசாங்கம் காலியாக இருக்கும் அணைகளை சென்று சேரும் வகையில் கால்வாய்கள் இணைத்தல் நிச்சயம் உபரி நீர் வீணாகாமல் விவசாயத்திற்கும், குடி நீருக்கும் பயன்படும். காலதாமதம் இன்றி உடனே செயல்படுத்தினால் நாடு நலம் பெரும். நட்டு மக்கள் நலம் பெறுவார்கள்..
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
12-ஆக-201907:04:00 IST Report Abuse
blocked user தண்ணீரை சேமித்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X