பொது செய்தி

தமிழ்நாடு

தியாகம் சொல்லும் பாடம்

Added : ஆக 12, 2019
Share
Advertisement
பக்ரீத், வாழ்த்து, துல்ஹஜ் , தியாகம், பாடம், நபிகள்

இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும் இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும் மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்கள். இப்ராஹிம் நபி செய்த தியாகத்தை நினைவுக் கூர்ந்து தான் இன்றைய நாள் தியாகத் திருநாள் என்றும் பக்ரீத் என்றும் உலகம் முழுக்க இருக்கும் முஸ்லிம்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

இப்ராஹிம் நபிக்கு ஸாரா மற்றும் ஹாஜிரா என இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு நீண்ட நாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருக்கு 85 வயதானபோது ஹாஜிரா அம்மையார் மூலம் ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்மாயில். சில ஆண்டுகள் கழித்து ஸாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவர் பெயர் இஸ்ஹாக். ஒருமுறை இப்ராஹிம் நபியின் கனவில் இறைவன் தோன்றி 'உங்கள் மகன் இஸ்மாயிலை என் பெயரைக் கூறி எனக்காக தியாகம் செய்யுங்கள்' என கட்டளையிட்டார்.

இறை துாதருக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். இப்ராஹிம் நபி தடுமாறுகிறார். ஒரு பக்கம் எல்லாம் வல்ல இறைவனின் கட்டளை; இன்னொரு பக்கம் பிள்ளைப் பாசம். தந்தையின் தடுமாற்றத்தை பார்த்த மகன் அதைப் பற்றி அவரிடமே கேட்க பதில் சொல்கிறார்.

'உங்களுக்கு இறைவன் என்ன கட்டளை இட்டானோ அதை நிறைவேற்றுங்கள் நான் நிச்சயமாக பொறுமை காப்பேன்' என்றார். என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்! அதன் பிறகு இப்ராஹிம் நபி தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு மினா எனும் மலையடிவாரத்திற்கு செல்கிறார். பிள்ளைப் பாசம் தன்னை தடுக்காமல் இருக்க கண்களை ஒரு துணியால் மறைத்துக் கொள்கிறார். ஆனால் சற்று நேரத்தில் அங்கு ஒரு சலனம். இப்ராஹிம் நபி தன் கண்களில் கட்டிய துணியை விலக்கி பார்த்து வியந்து போகிறார்.

அவரது மகன் இஸ்மாயில் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடு நிற்கிறது. இஸ்மாயில் விலகி நிற்கிறார். இறைவனிடமிருந்து வானவர்கள் அவருக்கு செய்தியை கொண்டு வருகின்றனர். இறைவன் மீது இப்ராஹிம் நபிக்கு எந்த அளவிற்கு நம்பிக்கை உள்ளது என்கிற சோதனையில் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

'எல்லாப் புகழும் இறைவனுக்கே அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் இறைவன். அவனைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறு யாரும் இல்லை. அவனே என் அதிபதி' என தன்னை சோதித்த இறைவனுக்கு இப்ராஹிம் நபி நன்றி கூறினார். இந்த சம்பவம் நடந்த நாளை குறித்து இறுதி இறை துாதர் முஹம்மத் பி 'இந்த நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள உங்களில் வசதியுள்ளவர்கள் ஒரு ஆட்டை குர்பானி கொடுத்து அதன் கறியை ஏழைகளுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்...' என்றார். அந்த தன்னலமற்ற தியாகங்களை நினைவுகூரும் நாளாக இன்றைய தியாகத் திருநாள் மலரட்டும்.

நம் மனதில் இருக்கும் கேடுகளை ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். 'இந்த உலகைப் படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிறைந்த அன்புடையோனே... தீர்ப்பு நாளில் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டு வாயாக... ஆமின்...' 'அன்பு சகோதரத்துவம் ஓங்கச் செய்து உலகம் எங்கும் அமைதி சமாதானம் மனித நேயம் மத நல்லிணக்கம் ஏற்படுத்த செய்வாயாக... ஆமின்...' ''நன்றியும் கருணையும் நட்பும் உதவும் மனோபாவமும் நம் மனங்களில் சுரக்கச் செய்வாயாக... ஆமின்...'
அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள்.. .- டி.வி.அப்துல்லா பாஷா

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X