சென்னை : தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., 14 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது. இதன்படி, முதலீட்டு துாதர்கள் வழியாக, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.இந்நிலையில், 'யாதும் ஊரே' திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு செல்ல, முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
முதல்வருடன், தொழில்துறை உள்ளிட்ட, பல்வேறு துறை அதிகாரிகளும் செல்ல உள்ளனர். முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல்வர், 14 நாட்கள் சுற்றுப்பயணமாக, 28ம் தேதி, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு செல்ல உள்ளார். லண்டனில் செயல்படும், ஆம்புலன்ஸ் சேவை தலைமையகம், கிங்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, முதல்வர் பார்வையிட உள்ளார்.
நியூயார்க் சென்று, பால்வள நிறுவனங்களை பார்வையிடுகிறார். நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில், தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார். பாலோ ஆல்டோ என்ற இடத்தில் உள்ள, அமெரிக்காவின் புகழ்பெற்ற, தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனத்தையும், பார்வையிட உள்ளார். இந்த கார் தொழிற்சாலையை, தமிழகத்தில் முதலீடு செய்ய வைப்பது தொடர்பாக, பேச்சு நடத்தப்பட உள்ளது.
முதல்வரின் பயணம் வாயிலாக, குறைந்தபட்சம், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான, தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்க, தமிழகத்தை சேர்ந்த முதல்வர், வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வது, இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE