சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு மும்முரம்| Dinamalar

சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு மும்முரம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (22)
Share
புதுடில்லி : பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்கும் வகையில், நாடு முழுவதும், 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. மஹாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2 முதல், இந்த நீதிமன்றங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அதிக அளவில் வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றை விரைவாக விசாரிப்பதற்காக, காலியாக உள்ள
மும்முரம், நீதிமன்றம், மத்திய அரசு, கற்பழிப்பு, காந்தி பிறந்தநாள்

புதுடில்லி : பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்கும் வகையில், நாடு முழுவதும், 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. மஹாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2 முதல், இந்த நீதிமன்றங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அதிக அளவில் வழக்குகள் தேங்கியுள்ளன. இவற்றை விரைவாக விசாரிப்பதற்காக, காலியாக உள்ள நீதிமன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதை தவிர்ப்பதற்காக, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் சமீபத்தில் அமைக்கப்பட்டன.


அதிகரிப்பு


இந்நிலையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான, பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறுமியர் மீதான பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவது, மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து, 'போக்சோ' எனப்படும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மசோதா, பார்லிமென்டில், சமீபத்தில் நிறைவேறியது. இந்த சட்டத் திருத்தத்தின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு, துாக்குத் தண்டனை விதிக்கப்படும். மேலும், இந்த வழக்குகளை, இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும்; மேல்முறையீட்டு வழக்குகளை, ஆறு மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும் என்ற, காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரித்து, முடிவெடுப்பதற்காக, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும், 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், 767 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. மஹாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல், இந்த விரைவு நீதிமன்றங்கள் செயல்படும் என, எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சட்ட அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துதல், பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய, 2013ல், நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.


நிலுவை


தற்போது, பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் நிலுவையில் உள்ள, பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க, 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தம், 767 கோடி ரூபாய் செல்வில் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, நிர்பயா நிதியில் இருந்து, 474 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மஹாத்மா காந்தியின் பிறந்த நாளான, அக்., 2ல் இந்த நீதிமன்றங்கள் செயல்பட துவங்கும். மத்திய அரசின் நிதி செலவீனக் குழுவின் பரிந்துரையின்படி, சட்ட அமைச்சரின் ஒப்புதலின்படி, இந்த திட்டத்துக்கான நிதியைக் கோரி, நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய அரசு தீவிரமாக இருப்பதால், நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

மாநில வாரியாக, நிலுவையில் உள்ள பாலியல் பலாத்கார வழக்கு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, சிறப்பு விரைவு நீதிமன்றங்களுக்கு வழக்குகள் ஒதுக்கப்படும். இந்த விரைவு நீதிமன்றங்கள் அமைவதால், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளில், விரைவாக தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


8 ஆண்டுகளில் 4,587 வழக்குகள்


தமிழகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ், 2015ல், 1,544 வழக்குகள் பதிவாகின; 2016ல், 1,567 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, சென்னையில், 156; விழுப்புரம், 105; வேலுார், 99; கரூரில், 13 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது, இந்த வழக்குகள், நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக, போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை, பலாத்காரம், மானபங்கம், கொலை, கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல், வரதட்சணை மரணம் என, வகைப்படுத்தி, போலீசார் வழக்குகள் பதிவு செய்கின்றனர். அந்த வகையில், 2010 - 18 வரை, தமிழகத்தில், 4,587 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X