பொது செய்தி

தமிழ்நாடு

பூமி குளிரட்டும்... பூக்கள் மலரட்டும்! இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா!

Added : ஆக 12, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
பூமி, பூக்கள், மலரட்டும், குளிரட்டும்


பூமி குளிரட்டும்... பூக்கள் மலரட்டும்!


'ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!' அதாவது, அலையின் ஓசையைக் கேட்டு, பொங்கிக் கிடக்கும் பாற்கடல் முழுவதையும், தன் நாவால் நக்கியே குடித்து விடுவதென முடிவெடுக்குமாம், பூனை. அதைப் போல, தான், கம்பராமாயணத்தை எழுதத் துவங்குவதாக, தன்னடக்கத்துடன் கூறுவான், கம்பன். உலகை நாற்புறமும் சூழ்ந்த திரவப் பொருள், தண்ணீர். உயிரை அடக்கியுள்ள இந்திரியம், தண்ணீர். கதகதப்பாய் உடலை உருவாக்கும் கருப்பையில் நிறைந்திருக்கும், தண்ணீர்.

கருப்பையில் இருந்து வெளியே வந்த மனிதனை, இயக்கும் இதயத்தி லிருந்து குதித்தோடும் உதிரம் எனும் தண்ணீர். ஆறுதல் தேடும் உள்ளத்திலிருந்தும், இரக்கம் காட்டும் இதயத்திலிருந்தும், கண்களின் வழியே வழிந்தோடும் கண்ணீர் எனும் தண்ணீர். ஓடியாடிய உடலை விட்டு பிரியும் உயிர், கடைசியாய் கேட்கும் வரமும், தண்ணீர். பூமிப் பந்தில் மட்டுமே கிடைக்கும், உயிர்ப் பொருள் தான் தண்ணீர்.


வறட்சி


இதை உணர்ந்து, அரசு, நீர்நிலைகளை பாதுகாக்காமல் விட்டதால் தான், தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது, வறட்சி எனும் கண்ணீர். இந்நிலையில் தான், நம் நாளிதழ், எல்லா வல்லமை யும் படைத்த, வாசகர்களை ஒருங்கிணைத்து, நீர்நிலை சீரமைப்பில் இறக்கியது... 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என்ற கூட்டியக்கமாக. இதில், தன்னார்வலர்கள், நலச் சங்கத்தினர், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என, பாகுபாடற்று களத்தில் இறங்கினர்.

இந்நிலையில் தான், தமிழர்களுக்கும், தமிழக அரசுக்கும் தண்ணீர் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதமாக, 'இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா' என்ற தலைப்பில், இந்த தொடர் கட்டுரையையும் துவக்கினோம். நம் முன்னோர், தண்ணீரை பார்த்த விதம், அதனுடன் பழகிய விதம், அதை சேமித்த விதம் என, கல்வெட்டு, இலக்கிய சான்றுகளோடு, வாசகர்களுக்கு வழங்கினோம்.

தொடர்ந்து, அரசுத் துறையில் பணியாற்றிய, முன்னாள் வல்லுனர்கள் வழங்கிய, அரசுக்கும், பொது மக்களுக்குமான ஆலோசனைகளும் இடம்பெற்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுகளில், நம் அலட்சியப் போக்கு குறித்து, நம் மனசாட்சியிடம், நாமே கேட்டுக் கொள்ளும் வகையிலான, தனிமனித பொறுப்பை உணர்த்தினர், சமூக நல விரும்பிகள். நம் வாரிசுகளுக்கு, தண்ணீரை விட்டுச் செல்ல வேண்டிய கடமையைப் பற்றி, இயற்கை நலவிரும்பிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் எண்ணற் றோர், தமிழகம் முழுக்க, மழைநீர் சேகரிப்பை இயக்கமாக முன்னெடுத்து, களமிறங்கினர். தொடர்ந்து, ஏரி, குளம், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி, பாதுகாக்கும் வகையில், குழுக்களாக இணைந்து, துார் வாரும் அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகள் தொடரும் வேளையில், மரக்கன்று களை நடுதல், நீர்நிலைகளின் கரைகளை உயர்த்தி பலப்படுத்துததல், நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் தடுப்பு குறித்தும், பொது மக்களும், தன்னார்வலர்களும், அரசிடம் கேள்வி எழுப்பினர். இது போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளை, ஊர்தோறும் துவங்கினர். மக்கள் எழுச்சியால் விழிப்படைந்த, தமிழக அரசும், சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் என்ற, தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்கி உள்ளது. இதற்காக, 1,250 கோடி ரூபாயையும் ஒதுக்குவதாக, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

மேலும், குடிமராமத்து திட்டத்தில், அந்தந்த பகுதி, விவசாய சங்கங்களுடன் இணைந்து, நீர் பயன்படுத்தும் இயக்கங்களை தோற்றுவித்து, நீர்நிலைகளை துார்வாரும் பணியையும், அரசு முடுக்கி விட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின், நீர்நிலைப் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கி, அவர்களுடன் துணை நின்று, பணியாற்றவும் ஆலோசனைகளை வழங்கியது, அரசு.

தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும், தேசிய நீர்வழித் திட்டம், நதிகள் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ளது. அரசிடமும், குடிமக்களிடமும், இதே நிலை தொடர வேண்டும். இந்நிலை தொடர்ந்தால், உயிரின் ஆதாரமான மழைநீரை, கடலில் சங்கமிக்க செய்து, குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்படாது. அதை நோக்கி, தமிழகம் பீடுநடை போடத் துவங்கி உள்ளது.


ஆதரவு


நம்மை விழிப்படைய வைத்த வறட்சிக்கு, நன்றி சொல்வோம்; இனி வரும் வறட்சியை, நம் எழுச்சியால் வெல்வோம். இந்த நல்ல நோக்கத்திற்காக, நம் நாளிதழில் வெளியான, 'இதற்காக தானா மெனக்கெட்டாய் தமிழா' என்ற, தொடர் கட்டுரைக்கு, அமோக ஆதரவளித்து, ஊக்கம் அளித்த, எம் நாளிதழின் முதலாளிகளாகிய, வாசகர்களை வணங்குகிறோம். 'களமிறங்குவோம் நமக்கு நாமே' பணியில், தொடர்ந்து கைகோர்த்து, நீர்நிலைகளை மேம்படுத்தி வரும், அனைத்து வாசக முதலாளிகளையும் கைகுலுக்கி வரவேற்கிறோம். இந்த கட்டுரைத் தொடரை, இத்துடன் முடிக்கிறோம், குளிர்ச்சியான தமிழகம் மலரும் என்ற நம்பிக்கையில்!
- நடுவூர் சிவா
naduvoorsiva@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
13-ஆக-201912:16:16 IST Report Abuse
LovelyMarees அருமையான தொடர்கட்டுரையை தொகுத்துவழங்கிய நடுவூர் சிவா, தமிழக பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கும் மற்றும் தினமலருக்கு மிக்க நன்றி. தினமலரின் இந்த முயற்சியால் தூர்வாரப்பட்ட குளங்களின் தற்போதைய புகைப்படங்களையும் இனி வரும் மழைக்காலத்தில் மழைபெய்து நீர் நிரம்பிய குளங்களின் புகைப்படத்தையும் இனி வரும் நாட்களில் தொகுத்து வெளியிடவேண்டுகிறேன்.மிக்க நன்றி
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
13-ஆக-201906:42:59 IST Report Abuse
G.Prabakaran தண்ணீரின் பெருமையை நல்ல தொடர் கட்டுரைகளின் மூலம் தந்தமைக்கு நடுவூர் சிவா அவர்களுக்கு பாராட்டுக்கள் நன்றி. இன்னமும் எங்கெங்கு ஏரிகளும் குளம் குட்டைகளும் ஆக்ரிமப்பில் உள்ளன என்பன வற்றை தினமலர் வெளி கொணர்ந்து அந்த அந்த மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்தால் பல ஏரிகளும் குளம் குட்டைகளும் மீட்கப்படலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X