பாக்.,தாக்குதலால் எல்லையில் பதட்டம் இந்தியா ராணுவம் கண்காணிப்பு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 12, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
பதட்டம், எல்லை, பாக்., தாக்குதல், ராணுவம், வாலாட்டம்

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் அருகே, எல்லை பகுதியில், பாகிஸ்தான் விமானப் படையின் மூன்று விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில், விமான தாக்குதலுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளதாகவும், தாக்குதலுக்கு, பாக்., விமானப் படை தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்திய ராணுவம், நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிரதேசம், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.


ராணுவம் உஷார்


மத்திய அரசின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து, உலக நாடுகளிடம், இந்தியாவுக்கு எதிராக ஆதரவு திரட்ட, பாக்., முயற்சித்தது. ஆனால், இதற்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து, சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில், பாக்., ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், லடாக் அருகே, பாகிஸ்தான் எல்லைக்குள், ஸ்கர்டு என்ற நகரம் உள்ளது. இங்கு, பாகிஸ்தான் விமானப் படையின் தளம் உள்ளது. நேற்று முன்தினத்தில் இருந்து, பாக்., விமானப் படைக்கு சொந்தமான, சி - 130 ரகத்தை சேர்ந்த, மூன்று விமானங்கள், இந்த விமானப் படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், விமான தாக்குதலுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், விமான தாக்குதலுக்கு, பாக்., படையினர் தயாராகி வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில நாட்களில், ஜே.எப்., - 17 ரக போர் விமானங்களையும், லடாக் அருகே குவிக்க, பாக்., ராணுவம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்தவிதமான சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அஜித் தோவல் ஆய்வு


தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், கடந்த சில நாட்களாக, காஷ்மீரிலேயே முகாமிட்டு, பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார். நேற்று விமானத்தில் சென்று, ஸ்ரீநகரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., தில்பக் சிங் மற்றும் ராணுவ உயரதிகாரிகள், அவருடன் சென்றனர். ஆய்வை முடித்ததும், 'ஸ்ரீநகரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. அமைதியான சூழல் நிலவுகிறது' என, அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஜம்முவில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ அல்லது சந்தேகப்படும் படியான பொருட்கள் இருந்தாலோ, அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி, பொதுமக்களுக்கு, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


2.5 லட்சம் ஆடுகள் விற்பனை


ஸ்ரீநகரில் மட்டுமல்லாமல், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள நகரங்களில், ஏராளமானோர், பக்ரீத் பண்டிகை தொழுகைக்காக, நேற்று திரண்டனர். வழக்கமான உற்சாகத்துடன், மக்கள், பக்ரீத் கொண்டாடியதாக, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். ஒரு சில இடங்களில் மட்டும், கல்வீச்சு போன்ற சிறிய வன்முறைகள் நடந்தாலும், பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீநகரில், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

பக்ரீத் பண்டிகையையொட்டி, ஸ்ரீநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும், 'குர்பானி' கொடுப்பதற்காக, 2.5 லட்சம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.


எம்.பி., உற்சாக நடனம்


லடாக் லோக்சபா தொகுதியின், பா.ஜ., - எம்.பி., யான, ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால், சமீபத்தில், பார்லிமென்டில் அசத்தலாக பேசி, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது பாராட்டை பெற்றார். அவரது பேச்சு அடங்கிய, 'வீடியோ'வை, நாடு முழுவதும், ஆயிரக் கணக்கானோர், சமூக வலைதளங்களில் பார்த்து ரசித்தனர். இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்று முடித்த பின், அவர், லடாக் திரும்பியதும், அங்குள்ள மக்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால், மகிழ்ச்சியுடன் நடனமாடிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது.


இனிப்பு பரிமாற்றம் இல்லை


பக்ரீத், ரம்ஜான், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, இந்திய - பாக்., எல்லையில் உள்ள இரு நாட்டு, எல்லை பாதுகாப்பு படையினரும், பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறி, வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். நேற்று பக்ரீத் பண்டிகையை யொட்டி, இனிப்புகள் பரிமாறப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, இனிப்பு பரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை. மேலும், டில்லி - லாகூர் இடையேயான, பஸ் போக்குவரத்தையும், டில்லி போக்குவரத்து கழகம் ரத்து செய்தது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-ஆக-201908:15:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்மளுக்கு பொங்கல் தீவாளி பொங்கல் என்றால் முஸ்லீம்களுக்கு ஈத் முகரம் ரம்ஜான் எல்லாம் முக்கியம் இப்போதுதான் இந்தக்கேடுகெட்ட அரசியல்வியாதிகளால் இவ்ளோ அசிங்கம்கள் நடக்குது நாமும் அந்த காலத்துலேந்து பாத்துண்டே இருக்கோம் உண்மையான முஸ்லீம்களும் சரி கிரிஸ்துவர் களும் நமது இந்துக்களின் பூஜைகளில் தலையிட்டதே இல்லீங்க இப்போதும் பலரும் ஒண்ணாகவே இருக்கோம் நாமத்துக்கு இருக்கோம் அவாளும் நிம்மதியா இருக்காங்க தீவிரவாதம் என்ற பெயரில் நடக்கும் அபத்தங்களால் தான் நம்ம நாடு இவ்ளோ கஷ்டங்களால் பாதிக்கப்படுறது .எதுவும் தீவிரமாக்கப்பட்டால் விபரீதம் தான் நடக்கும்
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
13-ஆக-201922:03:41 IST Report Abuse
thulakol உங்கள் பத்திரிகை தான் கொஞ்சம் நேர்மையாக உள்ளது அதையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்
Rate this:
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
13-ஆக-201921:38:52 IST Report Abuse
Ram Sekar //பாக்.,தாக்குதலால் எல்லையில் பதட்டம்// எங்கேப்பா தினமலர் எங்கே தாக்குதல்? படைகள் குவிப்பு மட்டும்தான். தாக்குதல் நடந்த மாதிரி, நடக்கற மாதிரி ஏனய்யா தலைப்பை போட்டு TRP அதிகம் வேணுமாயா? youtube சேனல் மாதிரி ஏனய்யா தலைப்பை போட்டு எங்க நேரத்தை வீணடிக்கறீங்க??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X