கஷ்டப்படும் போலீசுக்கு பயணப்படி... இஷ்டப்படி கை வைத்தால் எப்படி?| Dinamalar

கஷ்டப்படும் போலீசுக்கு பயணப்படி... 'இஷ்டப்படி' கை வைத்தால் எப்படி?

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019
Share
அன்றைய தினம், 'ரவுன்ட்ஸ்'க்கு செல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சித்ராவும், மித்ராவும், மொபைல் போன்களை நோண்டிக் கொண்டிருந்தனர்.''அக்கா, நம்மூர், 'வெதர்மேன்' சொன்னது மாதிரியே, படிப்படியா மழை குறைந்து, சூரியன் எட்டிப்பார்க்குது. ஆனா, வானிலை மையத்துக்கு காரங்க, கன மழை பெய்யும்னு இன்னமும் சொல்லிட்டு இருக்காங்க,''''ஆமா மித்து, அவுங்க கணிக்கிறது
 கஷ்டப்படும் போலீசுக்கு பயணப்படி... 'இஷ்டப்படி' கை வைத்தால் எப்படி?

அன்றைய தினம், 'ரவுன்ட்ஸ்'க்கு செல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சித்ராவும், மித்ராவும், மொபைல் போன்களை நோண்டிக் கொண்டிருந்தனர்.''அக்கா, நம்மூர், 'வெதர்மேன்' சொன்னது மாதிரியே, படிப்படியா மழை குறைந்து, சூரியன் எட்டிப்பார்க்குது. ஆனா, வானிலை மையத்துக்கு காரங்க, கன மழை பெய்யும்னு இன்னமும் சொல்லிட்டு இருக்காங்க,''''ஆமா மித்து, அவுங்க கணிக்கிறது பெரும்பாலும் தப்பாவே இருக்கு. நம்மூர்ல மழை கொட்டியும், ஆத்துல விட்டு வீணாக்கிட்டாங்க. அதை நெனைச்சா கஷ்டமா இருக்கு...''

''ஏங்க்கா, அப்படிச் சொல்றீங்க. குளம், குட்டைகளுக்கு தண்ணீ வந்திருக்கே''''வந்துருக்கு... இல்லைன்னு சொல்லலை. வினாடிக்கு, 5,000க்கும் மேற்பட்ட கனஅடி தண்ணீரை ஆத்துல விட்டுட்டாங்களே. உக்குளத்தை தவிர வேறெந்த குளமும் நிரம்பலை. நீர் மேலாண்மையில், மாவட்ட நிர்வாகம் கவனம் இல்லாம இருந்திருச்சு. அதை சொன்னேன்,''''நம்மூர்லயும் மழைக்கு ரெண்டு பேர் இறந்துட்டாங்க தெரியுமா,'' என, கேட்டாள் மித்ரா.

''அப்படியா, எங்க நடந்துச்சு... எனக்கு தெரியாம போச்சே...''''கலெக்டர் ஆபீசுக்கு பின்னாடி, ரெயில்வே வளாகத்துக்குள் 'பார்சல் ஆபீஸ்' இருக்கு. மழைக்கு தாக்குப்பிடிக்காம, சுவர் இடிஞ்சு விழுந்து, ரெண்டு தொழிலாளர்கள் இறந்துட்டாங்க. இதுல சோகமான விஷயம் என்னான்னா, ஒரு நாளைக்கு முன்னாடிதான், 'எவ்ளோ மழை பெஞ்சாலும் சமாளிக்க தயாரா இருக்கோம்'னு மாவட்ட நிர்வாகம் சொல்லியிருந்துச்சு; விடிஞ்சா, ரெண்டு பேர் இறந்த விஷயம் கேள்விப்பட்டதும், உயரதிகாரிங்க 'அப்செட்' ஆகிட்டாங்க...''

''ஓ... அதனாலதான், 'கார்ப்பரேஷன் பில்டிங்' லட்சணம் எப்படியிருக்குன்னு ஆய்வு செஞ்சு, 15 நாளைக்குள்ள 'ரிப்போர்ட்' கொடுக்கச் சொல்லி, கமிஷனர் உத்தரவிட்டிருக்காரா...'' ''அதுமட்டுமல்ல... 'பில்டிங் அப்ரூவல்' சம்பந்தமா நிலுவையில இருக்குற விண்ணப்பங்களை, 14ம் தேதிக்குள்ள, 'கிளீயர்' செய்யணும்னு சொல்லியிருக்காராம்,''''அப்ரூவல் விஷயத்துல, பெரிய அதிகாரியை பலிகடா ஆக்கிட்டதா, கேள்விப்பட்டேனே...''

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். 'அப்ரூவல்' சம்பந்தமா, ஏகப்பட்ட 'பைல்' பெண்டிங்ல இருந்துருக்கு. ஆளுங்கட்சி வி.ஐ.பி., தரப்புல இருந்து, செம 'டோஸ்' விழுந்திருக்கு. இந்த சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்தி, 'லேடி' அதிகாரி, அதிகாரத்தை கை பத்திட்டாங்க,''''இவ்ளோ விஷயம் நடந்திருக்கா...'' என, வாயை பிளந்த சித்ரா, நாளிதழ்களை புரட்டியடி, ''மித்து, கேரளாவுல பெஞ்ச மழைனால, கொச்சின் ஏர்போர்ட்டை மூடிட்டாங்களாம்...'' என, இழுத்தாள்.

''அக்கா, அவுங்களுக்கு வருமானம் கொறைஞ்சிட கூடாதுன்னு, நம்மூர் ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்யவிடாம, இடைஞ்சல் செஞ்சிட்டு இருக்காங்களாம்...''''என்னப்பா... சொல்ற...'' என, சித்ரா, ஏதும் தெரியாதவளாய் கேட்டாள்.''நம்மூர் ஏர்போர்ட்டை விரிவாக்கம் செஞ்சிட்டாங்கன்னா, பாலக்காட்டை சேர்ந்தவங்களும், வெளிநாடு போறதுக்கு, இங்கதான் வருவாங்க. தமிழ்நாட்டுக்காரங்களும், கொச்சினுக்கு போக மாட்டாங்க. அவுங்களுக்கு வருமானம் கொறைஞ்சிடும். அதனால, விரிவாக்கம் செய்யவிடாம, ஒரு குரூப் வேலை செய்யுதுன்னு அதிகாரிங்க சொல்றாங்க,''

''ஆனா, நிலம் கையகப்படுத்துற விஷயத்துல, ரெவின்யூ டிபார்ட்மென்ட் காரங்களும் ரொம்பவே 'அசால்ட்'டா இருக்காங்களே. டி.ஆர். ஓ., கோவிந்தராஜையும் மாத்திட்டாங்க. புதுசா வந்திருக்கிற அதிகாரி, இந்த விவகாரத்துல முழு கவனம் செலுத்தி, நிலம் கையகப்படுத்துவாரா அல்லது கெடப்புல போடுவாரான்னு தெரியலை. ஆளுங்கட்சி வி.ஐ.பி., தலையிட்டா, இந்த வருஷத்துக்குள்ள நிலம் கையகப்படுத்தி, வேலையை ஆரம்பிச்சிடலாம்னு அதிகாரிங்க பேசிக்கிட்டாங்க.''

''ஓ... அப்படியா... சங்கதி,''''டாஸ்மாக் மதுக்கடை 'பார்' டெண்டர் தேதியை ஒத்தி வச்சிட்டாங்களாமே...'' என, அடுத்த விவகாரத்துக்குள் நுழைந்தாள் மித்ரா.''ஆமாம் மித்து, கோவை வடக்கு பகுதியில, 152, தெற்கு பகுதியில, 126 மதுக்கடை இருக்கு. ஒரு கடைக்கு ஒரு 'அப்ளிகேஷன்', அதுவும் ஆளுங்கட்சிக்காரங்களுக்கு மட்டும் கொடுக்கணும்னு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. 'அப்ளிகேஷன்' வாங்குனவருக்கு, 'பார்' ஒதுக்கணும்னு சொல்லியிருக்காங்க.''ஆளுங்கட்சி கட்சி நிர்வாகிங்க பலரும், கடை கேட்டு, எம்.எல்.ஏ.,களுக்கு நெருக்கடி கொடுத்தாங்க.

சி.எம்., வரைக்கும் பிரச்னை போயிருக்கு. கடைகள் யார் யாருக்குன்னு இன்னைக்கு 'பைனல்' செய்றதா இருந்துச்சு; கட்சிக்காரங்களுக்குள்ள முட்டல், மோதல் ஏற்பட்டதால, அடுத்த மாசம், 11ம் தேதிக்கு ஒத்தி வச்சுட்டாங்க,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் சித்ரா.காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பது தொடர்பான செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதை பார்த்த மித்ரா, ''அக்கா, காஞ்சிபுரத்துக்கு பாதுகாப்பு பணிக்கு போயிருந்த நம்மூர் போலீஸ்காரங்கள்ல, எஸ்.எஸ்.ஐ., வெள்ளிங்கிரி மாரடைப்பு ஏற்பட்டு, இறந்துட்டாரு.

துணை கமிஷனர், உதவி கமிஷனருன்னு பல அதிகாரிகள் இருந்திருக்காங்க. ஒருத்தர் கூட, வெள்ளிங்கிரி உயிரிழந்த இடத்துக்கு வரலையாம். இது, போலீஸ் வட்டாரத்துல புகைச்சல் ஏற்படுத்தியிருக்கு.''போதாக்குறைக்கு, தங்கியிருந்த கட்டடத்துல, தண்ணீர், கழிப்பிடம் வசதி இல்லையாம். திறந்தவெளியில்தான் இயற்கை உபாதை கழிக்கணுமாம். 'லேடி' போலீசார், ரொம்பவே தர்ம சங்கடத்தோடு வேலை செய்றாங்களாம்.

டீ குடிக்கக்கூட, இரண்டு கி.மீ., துாரம் போகணுமாம். பாதுகாப்பு பணி முடிச்சிட்டு வந்திருக்கிற போலீஸ்காரங்க, ரொம்பவே 'அப்செட்'டுல இருக்காங்க. சாப்பாடு, உறக்கமில்லாம, மனதளவில பாதிக்கப்பட்டதுனால, 'ஹெல்த்' ரொம்பவே 'வீக்' ஆகிடுச்சு. இப்ப, மருத்துவ பரிசோதனை செஞ்சிட்டு இருக்காங்க,'' என்றாள்.''மித்து, நானும் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். பாதுகாப்பு பணிக்கு வாரம் ஒரு குழு போயிட்டு இருக்கு. ஒவ்வொரு குழுவிலும், 60ல் இருந்து, 100 பேர் வரை இருக்காங்க. போன வாரம் போன குழுவுக்கு போலீஸ்காரங்களே கேன்டீன் அமைச்சு, ஒரு நாள் சமைச்சு போட்டிருக்காங்க. அதுக்கு அப்புறம் அந்த கேன்டீன் செயல்படலை.

''போலீஸ்காரங்களுக்கு ஒரு நாள் பயண படி, 250 ரூபாய்; 5 நாளைக்கு, 1,250 ரூபாய் தரணும். ஆனா, 900 ரூபாய் கொடுத்திருக்காங்க; 350 ரூபாயை அமுக்கிட்டாங்கன்னு, போலீஸ்காரங்க புலம்பிட்டு இருக்காங்க'' என்ற சித்ரா, ''மழை பெஞ்சப்போ, அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டுல, தண்ணீ ஒழுகியதே. யாருமே நடவடிக்கை எடுக்கலையாமே...'' என, நோண்டினாள்.

''அது மட்டுமா... டாக்டர் ஓய்வெடுக்குற அறையிலும், காரை பெயர்ந்து விழுந்திருக்கு. நிர்வாகத் தரப்புல, அப்படியான்னு கேட்டுட்டு, ஒதுங்கிட்டாங்களாம். சோமனுார் பஸ் ஸ்டாண்டுல மேற்கூரை இடிஞ்சு விழுந்த மாதிரி, அசம்பாவிதம் பெருசா நடந்தாதான் நடவடிக்கை எடுப்பாங்க போலிருக்கு...''

''மித்து, இதவிட அவங்களுக்கு வேற என்ன வேலை வேண்டிக்கிடக்காம்?''''இதைப்பத்தி, நாம ஏற்கனவே பேசி இருக்கோமே...'' என, இழுத்தாள் மித்ரா.''அதிலப்பா, இருதய வால்வு அடைப்புக்கு சிகிச்சை பெற வர்றவங்களுக்கு, 'ஸ்டண்ட்' பொருத்துறாங்க. இக்கருவி சப்ளை செய்றதுக்கான 'கான்ட்ராக்ட்'டை, ஆஸ்பத்திரி அதிகாரி, தனக்கு தெரிஞ்ச நிறுவனத்துக்கு வாங்கிக் கொடுத்திருக்காரு. நன்றி கடனா, ஒரு 'ஸ்டண்ட்'டுக்கு, 200 ரூபாய் அவருக்கு கொடுக்கிறாங்களாம்,'' என்றாள்.

அப்போது, அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நடமாட்டம் தொடர்பான செய்தி, 'டிவி'யில் ஒளிபரப்பானது. அதைக்கேட்ட மித்ரா, ''சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல, சார்பதிவாளர் ஆபீஸ் இருக்கு. இதைத்சுத்தி, 20க்கும் மேற்பட்ட ஜெராக்ஸ் மற்றும் 'டாகுமென்ட்' எழுதும் கடைகள் இருக்கு.இங்க போயி, வில்லங்கச்சான்று, பாக பாத்திய விடுதலைப்பத்திரம் வாங்கணும்னு சொன்னா போதும்; ரூ.10 ஆயிரம்-30 ஆயிரம் வரை செலவாகும்னு சொல்றாங்க.

என்னங்க, வில்லங்கச் சான்று வாங்க, ரூ.10 ஆயிரம் தேவைப்படுமான்னு கேட்டா, ஆபீசருக்கு, அஞ்சாயிரம், அவருக்கு கீழே வேலை செய்ற 'பியூன்', 'அட்டென்டர்'க்கு யாரு பணம் தருவாங்கன்னு சொல்லி, அப்பாவி மக்களை ஏமாத்தி, பணம் வசூலிக்கிறாங்க. என்னோட நண்பரிடம், பேரம் பேசி, ரூ.18,500 வாங்கியிருக்காங்க...''''அடப்பாவிகளா, அடங்கவே மாட்டாங்க போலிருக்கே ...'' என்றவாறு, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X