துணை மின் நிலையங்களுக்கு நிலம் அதிக விலைக்கு வாங்குவதாக புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை மின் நிலையங்களுக்கு நிலம் அதிக விலைக்கு வாங்குவதாக புகார்

Added : ஆக 13, 2019
Share

மின் வாரியம் அமைக்கும், துணை மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலத்தை, தனியாரிடம் அதிக விலைக்கு வாங்க, சிலர் முயற்சிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக மின் வாரியத்திற்கு, பல்வேறு திறன்களில், துணை மின் நிலையங்கள் உள்ளன. மின் தேவை அதிகரித்து வருவதால், சீராக மின் சப்ளை செய்ய, புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான நிலத்தை, தனியாரிடம் அதிக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய மின் திட்டங்கள், பிற நிதி ஆதாரங்கள் வாயிலாக, துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இதற்கு, தேவைப்படும் அரசுத்துறை நிலத்தை வாங்குவதில், எந்த குளறுபடியும் இல்லை. அரசுத்துறை நிலம் கிடைக்காத நிலையில், தனியார் நிலங்கள் பெறப்படுகின்றன.தனியாரிடம் உள்ள நிலத்தை வாங்க, 50 லட்சம் ரூபாய் வரை வேண்டும் எனில், மண்டல தலைமை பொறியாளர்களே முடிவு எடுக்கலாம். அதற்கு மேல் சென்றால், மின் வாரிய தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதற்காக, அவர்கள் அனுப்பும் நிலம், அதன் வழிகாட்டு மதிப்பு, சந்தை விலை போன்றவை பரிசீலிக்கப்பட்டால், விலை குறைவாக உள்ளது. சில பொறியாளர்கள், தங்கள் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்க, அரசு இடம் இல்லை என்றும், தனியார் நிலம் மட்டுமே உள்ளது என்றும் கூறுகின்றனர்.

அந்த நிலத்தின் மதிப்பையும், அதிகமாக கூறுகின்றனர். அதற்கு ஏற்ப, சந்தை விலை அதிகரித்து உள்ளதாக கூறி, வருவாய் துறையில், நிலத்தின் உரிமையாளர் வாங்கியுள்ள, ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றனர். எனவே, மின் திட்டங்களுக்கான, நிலத்தை வாங்கும் பணியில், மின் வாரிய உயரதிகாரிகள், அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X