சிதம்பரம் பூமிக்கு பாரம்: தி.மு.க., - காங்., கண்டனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (181)
Share
சிதம்பரம், பூமி, பாரம், ஸ்டாலின்,காஷ்மீர், உரிமை ,பறிப்பு

சென்னை: சமீபத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த 'காஷ்மீர் உரிமை பறிப்பு' கண்டன கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார். அப்போது 'மத்திய அரசு தமிழக ஆட்சியை கலைத்தால் கூட இங்குள்ள அ.தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கும்; எதிர்த்துப் பேசாது' என்றார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமியிடம் சிதம்பரம் பேச்சு குறித்து நிருபர்கள் நேற்று கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர் ''சிதம்பரம் இவ்வளவு காலமாக மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரால் நாட்டுக்கோ, தமிழகத்துக்கோ என்ன பயன் கிடைத்தது; அவரால் பூமிக்கு தான் பாரம்'' என்றார்.

சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பதில்: முதல்வர் அவரது தகுதிக்கு மீறி பேசிஉள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு சென்று வந்த என்னை பற்றியும் 'சீன்' காட்ட விளம்பரத்திற்காக போனதாக கூறினார். அவர் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் செல்வதாக செய்தி வந்திருக்கிறது. எனவே அவர் அமெரிக்கா லண்டனுக்கு சீன் காட்டத் தான் போகிறாரா என கேட்பதற்கு எனக்கு ரொம்ப நேரமாகாது. முதல்வர் இப்படி கீழ்த்தரமாக பேசக் கூடாது. இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில் சிதம்பரம் ஆதரவாளர்களும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுமான என்.சுந்தரம் எம்.என்.கந்தசாமி, வி.ராஜசேகரன், ராம.அருணகிரி, ராம.சுப்புராம், ஆர்.எம்.பழனிசாமி, பி.எஸ்.விஜயகுமார், எஸ்.ராஜ்குமார், எம்.தண்டபாணி, வேல்துரை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: பூமிக்கு யார் பாரம் என்பதும் தமிழகத்திற்கு யார் பாரம் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும்.

முதல்வரின் ஆணவ பேச்சு யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காகவும் தன் பதவியை தக்கவைக்கவும் பேசப்பட்டதாக தெரிகிறது. சிதம்பரம் என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்; என்னென்ன சாதனைகளை செய்தார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற ஆணவ பேச்சை முதல்வர் நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

தமிழக காங்.,தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை சிதம்பரம் பேசிய பேச்சுக்கு முதல்வர் உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து பொருளாதார சீர்திருத்தம் செய்தவர் சிதம்பரம். கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியதில் சிதம்பரம் பங்கை பாராட்டாமல் இருக்க முடியாது. முதல்வர் பழனிசாமிக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X