விடுதலை கோர உரிமையில்லை நளினி வழக்கில் அரசு பதில் மனு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விடுதலை கோர உரிமையில்லை நளினி வழக்கில் அரசு பதில் மனு

Added : ஆக 14, 2019

சென்னை : 'ஆயுள் தண்டனை கைதிக்கு, முன்கூட்டியே விடுதலை கோர உரிமையில்லை' என, நளினி வழக்கில், உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர், ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ௨௫ ஆண்டுகளுக்கும் மேலாக, சிறையில் இருக்கும் இவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, சில ஆண்டுகளுக்கு முன் எழுந்தது.ஏழு பேர் விடுதலை குறித்து, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது, இன்னும் கவர்னர் முடிவெடுக்கவில்லை.

இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி, மாநில உள்துறை செயலரிடம் அளித்த மனு மீது, விரைந்து முடிவெடுக்க கோரி, நளினி மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள், ஆர்.சுப்பையா, சரவணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை, வரும், ௨௦ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.இவ்வழக்கில், தமிழக உள்துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மனுதாரர் உள்ளிட்ட, ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான பரிந்துரை, கவர்னருக்கு அனுப்பப்பட்டது;

அது, அவரது பரிசீலனையில் உள்ளது. ஆயுள் தண்டனை கைதியை, முன்கூட்டியே விடுதலை செய்வது, அரசின் தனிப்பட்ட உரிமை; அதை, ஆயுள் கைதி, உரிமையாக கோர முடியாது.சட்டப்படி, ஆயுள் தண்டனை குறைக்கப்படவில்லை என்றால், ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும்; இது தான் சட்டம். எனவே, ஆயுள் தண்டனை பெற்றவர், முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, உரிமை கோர முடியாது.

அதனால், இவ்வழக்கில், எந்த அரசியல் சட்ட விதிகளும் மீறப்படவில்லை. எனவே, முன்கூட்டியே விடுதலையை பொறுத்தவரை, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டியது, அரசு தான். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X