ராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே! ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்| Dinamalar

ராம ஜென்ம பூமி வழிபாட்டு தலமே! ஹிந்து அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதம்

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (14)
ராம, ஜென்ம பூமி,ஹிந்து அமைப்பு,விராஜ்மான்

புதுடில்லி: 'அயோத்தியில், ராமபிரான் பிறந்த இடமே, வழிபாட்டு தலம் தான்; எனவே, அதை பல பிரிவுகளாக பிரிப்பது, வழிபாட்டு தலத்தின் புனிதத்தை சிதைப்பதற்கு சமமானது' என, ஹிந்து அமைப்பான, ராம் லல்லா விராஜ்மன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.


மேல் முறையீட்டு மனு:

இந்த விவகாரத்தில், சர்ச்சைக்குரிய நிலத்தை, மூன்று பிரிவுகளாக பிரிக்கும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், தினந்தோறும் நடக்கிறது. ஐந்தாவது நாள் விசாரணை, நேற்று நடந்தது.

சர்ச்சைக்குரிய நிலம் நேற்றைய விசாரணையின் போது, ஹிந்து அமைப்பான, ராம் லல்லா விராஜ்மான் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 'சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, ஹிந்து - முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரும்போது, அதிலிருந்து, முஸ்லிம் அமைப்பை மட்டும், எப்படி வெளியேறச் சொல்ல முடியும்' என, கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டதாவது: அயோத்தியில் ராம பிரான் பிறந்த இடமே, வழிபாட்டு தலம் தான். புனிதமான இடமான அதை, தெய்வமாக கருதி, கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். கடந்த, 1,500களில், பாபர் மசூதி அங்கு கட்டப்பட்டது. ஆனாலும், ஹிந்துக்கள் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்தி வந்தனர். மேலும், அந்த மசூதி, பாபருடையது என்பதை முஸ்லிம்கள் நிரூபிக்கவில்லை.

ராம பிரான் பிறந்த இடத்தை, தெய்வமாக கருதி வழிபட்டு வரும் நிலையில், அந்த இடத்தை மூன்று பிரிவுகளாக பிரிப்பது, அந்த இடத்தின் புனிதத்தை சிதைப்பதற்கு சமம். 'மெக்கா எப்படி, முஸ்லிம்களுக்கு புனிதமான இடமோ, ஜெருசலேம் எப்படி, கிறிஸ்தவர்களுக்கு புனிதமான இடமோ, அதுபோல், அயோத்தி, ஹிந்துக்களுக்கு புனிதமான இடம்' என, முஸ்லிம்கள் சிலரே சாட்சியம் அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் வாதிட்டார். இதையடுத்து, வாதம் தொடர்ந்து நடந்தது. இன்றும் விசாரணை நடக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X