கர்நாடக அரசை, டிஸ்மிஸ் செய்ய கவர்னருக்கு, காங்கிரஸ் கோரிக்கை | Dinamalar

கர்நாடக அரசை, 'டிஸ்மிஸ்' செய்ய கவர்னருக்கு, காங்கிரஸ் கோரிக்கை

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)

பெங்களூரு, : 'கர்நாடகாவில், முதல்வராக எடியூரப்பா பதவியேற்று, 18 நாட்கள் முடிந்த நிலையில், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை; இதனால், அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்' என, மாநில கவர்னருக்கு, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில், மாநில காங்., செய்தி தொடர்பாளர், உக்ரப்பா கூறியதாவது: கர்காடக முதல்வராக, எடியூரப்பா, கடந்த மாதம், 26ல் பதவியேற்றார். அதன் பின், கடந்த, 18 நாட்களுக்கும் மேலாக, மாநிலத்தில், ஒரு நபர் அரசு தான் நடந்து வருகிறது. அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.மாநிலத்தில், கவர்னர் இருக்கிறாரா என, தெரியவில்லை, இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட்டு, எடியூரப்பா அரசை, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். அது தான், ஜனநாயகத்துக்கு நல்லது.

மாநிலத்தின் பல பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், மாநிலத்தில், அமைச்சர்களே இல்லாத நிலையில், எந்த கூட்டத்தை, முதல்வர் கூட்டுவார். இன்னும் சில நாட்களில், அமைச்சர்கள் பதவியேற்காவிட்டால், காங்., சார்பில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால், மாநிலத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தேசிய பேரழிவாக, மத்திய அரசு அறிவித்து, நிவாரண நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு, உக்ரப்பா கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X