இளம்பெண் மீதான பிற வழக்குகள் உச்ச நீதிமன்றம் விசாரிக்க தயாரில்லை

Added : ஆக 14, 2019
Advertisement

புதுடில்லி : 'உ.பி., இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, உ.பி.,யில் நடந்து வரும், ௨௦ வழக்குகளின் விசாரணை நிலைமை குறித்து, மாநில அரசிடம் அறிக்கை கேட்கப் போவதில்லை' என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

உ.பி.,யின் உன்னாவ் பகுதியை சேர்ந்த, ௧௭ வயது சிறுமியை, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையே, கடந்த மாத இறுதியில், இப்போது, ௧௯ வயதாகும் அந்த பெண், தன் உறவினர்களுடன் பயணித்த கார் மீது லாரி மோதியதில், படுகாயம் அடைந்தார்; இரு பெண்கள் இறந்தனர். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, டில்லி மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி, தர்மேஷ் சர்மா முன் விசாரிக்கப்படுகிறது.இந்த விசாரணையின் விபரங்களை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தீபக் குப்தா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தினமும் கேட்டறிந்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், 'பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் உறவினர்கள் மீது, உ.பி.,யில் நடந்து வரும், ௨௦ வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து, நீதிமன்றம், அறிக்கை கேட்க வேண்டும்' என்றார்.அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து, இளம்பெண் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணை, வரும், ௧௯ல் மீண்டும் நடக்கும் என, உத்தரவிட்டனர்.பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் வழக்கறிஞரும், உயிருக்கு ஆபத்தான நிலையில், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

அவரின் உறவினரான மகேஷ் சிங் என்பவர், பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்காரின் சகோதரர், அடுல் சிங் தொடர்ந்த வழக்கு ஒன்றில், பத்தாண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.அவரும், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, டில்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ.,வும், திஹார் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவுஉ.பி., இளம்பெண்ணின் தந்தை, போலீஸ் காவலில் இருந்த போது இறந்த வழக்கில், பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கார் மற்றும் பிறர் மீது, டில்லி நீதிமன்றத்தில் நேற்று, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கார் துாண்டுதலின்படி, ௨௦௧௮ல், இளம்பெண்ணின் தந்தை மீது, துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இறந்தார்.இதற்கு காரணம், எம்.எல்.ஏ., மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தான். மூன்று போலீசாரும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மீது, கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X