நட்பும்.. சொந்தமும்..

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
நட்பும்.. சொந்தமும்..

புதுப்படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு சென்றிருந்தேன். அங்கே இளம் வயது ஆண் நண்பர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். 'டேய் மாமா, எப்பவும் போல மாப்பிள்ளை இன்னும் வரலை டா. இல்ல மச்சி நீ அவன கால் பண்ணு வந்துக்கிட்டே இருக்கேன்தான் சொல்லுவான்' என அவர்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருந்த எனக்கும் அவர்களின் பேச்சின் சுவாரசியம் ஒட்டிக் கொண்டது. சொந்த பந்தங்களிடையே இந்த ஆத்மார்த்த உரையாடலின் மூலம் அன்பை வெளிப்படுத்த முடியுமா? பல நேரங்களில் நாம் பொய் முகங்களையே உறவுகளிடையே காட்ட வேண்டிஉள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் நட்பு பெரிதா, உறவு பெரிதா என்ற எண்ணம் எனக்கு மேலோங்கி நின்றது.


நட்பும் சொந்தமாகும்:

நட்பு எளிதானது ஒரு கட்டாயத்தின்படி நட்பை திணிக்க முடியாது. தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்ற உறவுகளும், அந்த உறவுகளின் மூலம் அமையும் மற்ற உறவுகளும் நாமே தேர்ந்தெடுக்க முடியாதவை. நாம் பிறந்தவுடன் வாயில் 'சீனி தண்ணி' ஊற்றுவதிலிருந்து, இறந்து குழிக்குள் செல்லும் போது கடைசியாக 'வாய்க்கரிசி' போடும் வரை வரும் உறவுகள்தான் சொந்தங்கள். ஒவ்வொரு சொந்தங்களும் ஒவ்வொரு குணத்தை உடையவர்கள். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் மாற்றமுடியாத குணங்களைக் கொண்டவர்கள்.

ஆனால் நட்பு அப்படி கிடையாது. முதலில் பழகும் போது பக்கத்து வீட்டுக்காரர், உடன் படித்தவர், அலுவலகத்தில் கூட வேலை பார்த்தவர், பஸ், ரயிலில் தினம் உடன் பயணிப்பவர் என்றே நாம் அனைவரையும் அறிமுகப்படுத்துவோம். ஆனால் நம்முடைய, விருப்பு வெறுப்புகள், குணம், கொள்கைகள், களிப்பு எந்த நேரத்தில் அவர்களுடன் ஒத்துப் போகிறதோ அன்று அவர்களுடலான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறோம். சிறிது நாட்களில் அவர்களை நமது நட்பு வட்டத்துக்கு கொண்டு வந்து விடுகிறோம். இல்லை என்றால் நாம் முதலிலேயே அவர்களை விட்டு விலகிவிடுகிறோம்.


எது நட்பு, எது சொந்தம்:

நட்பைப் பற்றி நாம் திரைப்படங்களிலேயே பார்த்துவிட்டோம். 'தளபதி'யில் ரஜினி, மம்முட்டி நட்பை இயக்குனர் அழகாக விளக்கியிருப்பார். நட்பை கற்புடன் இணைத்திருப்பார்.'உங்கள் நண்பரை சொல்லுங்கள் உங்களைப் பற்றி சொல்லுகிறோம்'.'உங்க வயதை வருடத்தை வைத்து கணக்கு பண்ணாதீர்கள். உங்கள் நண்பரின் எண்ணிக்கையை வைத்துக்கூறுங்கள்' என ஆங்கில பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது திருவள்ளுவர் கூறிய நட்பு.'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு'.

'பலர் முன்னே ஆடை நழுவும் போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்கு துன்பம் வரும் போது உடனே சென்று அத்துன்பத்தை களைவதே உண்மையான நட்பு' என்கிறார் திருவள்ளுவர்.நேரில் காணாமலே கோப்பெருஞ் சோழனோடு நட்புப் பூண்டார் பிசிராந்தையார். பாண்டிய நாட்டில் பிறந்த பிசிராந்தையார் சோழ நாட்டு மன்னனை நேரில் காணாமலேயே அவர் செய்யும் நற்காரியங்களைக் கேள்விப்பட்டு நட்பு கொள்கிறார். இதை உணர்ந்து மன்னனும் புலவர் மீது நட்பு கொள்கிறார். சோழ மன்னன் வடக்கிலிருந்து உயிர் நீக்கப் போகிறான் எனக் கேள்விப்பட்ட புலவர் தானும் மன்னனுடன் வடக்கிலிருந்து உயிர் நீத்தார். இதை விட நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு வேண்டுமா? ஆனால் நண்பர்களை நேர்ந்தெடுப்பத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருங்கள்.


உண்மையான சொந்தம் எது:

உண்மையான சொந்தம் எது என்பதில் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். ஒருவன் ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையை இழந்து அவன் வாழ்க்கையில் வெற்றிடம் உருவாகி... மனம் தளர்ந்து, தடுமாறி அதாள பாதாளத்தில் விழப் போகும் நேரத்தில் அன்பும், பாசமும் கொண்ட சொந்தங்கள் கை கொடுத்து... புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்து, அவனையும் தங்களைப் போல வாழ வைக்க முயற்சிப்பதே சிறந்த உறவு. அதை விட்டு விட்டு அந்த உறவு சிரித்து சந்தோஷமாக வாழும் போது அவருடன் இணைந்து சேர்ந்து சிரித்து கை தட்டி ஆட்டம் போட்டு விட்டு, அவன் வாழ்க்கை இழந்து அழும் போது, நிற்கதியாக நிற்கும் போது தட்டி கழித்து கணக்கு பார்த்து பழகுவதோ அல்லது விலகுவதோ சொந்தங்களுக்கு அழகில்லை. விசேஷ வீட்டில் முதல் ஆளாக முன்வரிசையில் நிற்பதற்கும், இழவு வீட்டில் கூட்டம் சேர்வதற்கோ மட்டும் உறவு என்றால் அந்த உறவு அவசியமற்றது. தேவையும் இல்லை.


எப்போது உறவு வழுவாகிறது:

நண்பர்களிடையே மாமா, மச்சான், மாப்பிள்ளை என்ற உறவு முறை வைத்து அழைத்து பழகும் போது அந்த நட்பிற்கு பலம் அதிகரிக்கிறது. அதே போல நெருங்கிய சொந்த பந்தங்களை நண்பர்கள் போன்று நினைத்துப் பழகும் போது அந்த உறவில் பலம் கூடுகிறது. நட்பில் சொந்தத்தையும், சொந்தத்தில் நட்பையும் கலந்து வைக்கும் போது அதன் பலம் இருமடங்காகிறது.


வாழ்க்கை என்ற பயணம்:

வாழ்க்கை என்ற பயணத்தில் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அனைவரின் கவனமும் வெற்றி என்ற இலக்கை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறது. அப்படி நாம் ஓடிக்கொண்டிருக்கும் போது நம் முதுகை தட்டி, உற்சாக வார்த்தைகளை பேசி, கூடவே ஓடிவரும் உறவுகளையும், நண்பர்களையும் சேர்த்து அனைத்துக் கொண்டு செல்வோம். அதை விடுத்து நம் பின்புறம் இருந்து கொண்டே நம்மை ஓட விடாமல் காலை பிடித்து இழுத்து கீழே தள்ளும் உறவுகளையும், நண்பர்களையும் உதறிவிட்டு நம் பயணத்தை இனிதே தொடருவோம்.-

-அமுதா நடராஜன்,
எழுத்தாளர், மதுரை

r_amudha@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhatchayini Kumar - Coimbatore,இந்தியா
14-ஆக-201915:40:10 IST Report Abuse
Dhatchayini Kumar Fact.......Friendship is everything in life.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X